Show all

குடும்ப அட்டை, மின்இணைப்பு, குடிநீர், சலுகைகள் கூடாது! ஆக்கிரமிப்பு கட்டிடங்களிலிருந்து புதிய இடத்துக்கு வரும் வரை: அறங்கூற்றுமன்றம்

28,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை ராஜ அண்ணாமலைபுரம் இளங்கோ தெருவில் பக்கிங்காம் கால்வாயில் கட்டப்பட்டுள்ள வீடுகளில் இருப்பவர்களை அகற்றுவது தொடர்பான வழக்கு இன்று உயர் அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர்கள் வேணுகோபால், வைத்தியநாதன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

தங்களை வீடுகளிலிருந்து அகற்றும் பொதுப்பணித்துறை, குடிசை மாற்று வாரிய முடிவை எதிர்த்து  நடராஜன், ராஜேஸ்வரி,  உள்ளிட்ட 259 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வழக்கு தொடுத்திருந்தனர்.

அவர்களது வாதத்தில் பொதுப்பணித்துறை, குடிசைமாற்று வாரியம் தங்களை அப்புறப்படுத்த எடுக்கும் நடவடிக்கையால் வாழ்வாதாரம், குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுகின்றது என தெரிவித்தனர்.

பொதுப்பணித்துறை சார்பில் அளிக்கப்பட்ட பதிலில் ஏற்கெனவே 399 வீடுகள் அகற்றப்பட்டது. மீதமுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம். அகற்றப்பட்டவர்களுக்கு வசிக்க குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வீடுகள் வழங்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வேறு இடத்தில் ஒதுக்கிய வீடுகளுக்கு மாறுவதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். உச்ச அறங்கூற்றுமன்றம் வரை சென்றும் அவர்களுக்கு சாதகமான உத்தரவு கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.

அப்போது உத்தரவிட்ட அறங்கூற்றுவர்கள் அமர்வு, ஆக்கிரமிப்பை அகற்றுவதில் எந்த சமரசமும் காட்டத் தேவையில்லை. ஆக்கிரமிப்பை காலி செய்ய மறுப்பு தெரிவிப்பவர்களுக்கு மின்சாரம், குடிநீரை நிறுத்த வேண்டும். குடும்ப அட்டைகளை அவர்களிடம் இருந்து திரும்ப பெற வேண்டும் பொங்கல் விழாவுக்கான அரசு வழங்கும் பலன்களை குடும்ப அட்டை மூலமாக அவர்கள் பெறவில்லை என்பதை உறுதிபடுத்த வேண்டும். குடிசை மாற்று வாரிய குடியிருப்புக்கு மாறியதை உறுதிபடுத்திய பின்னர் புது குடும்ப அட்டை வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

மேலும் இந்த உத்தரவை  தலைமைச் செயலாளர் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு சுற்றறிக்கையாக அனுப்ப வேண்டும். சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது என காரணம் கூறி தாமதிக்க கூடாது என உத்தரவிட்டு வழக்கை  இரண்டு கிழமைகளுக்கு ஒத்தி வைத்தனர்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெள்ள பாதிப்பின் போது இந்தப் பகுதி மக்கள் அப்புறப் படுத்தப் படுவதைக் கண்டித்து, பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசு அவர்கள் வெளியிட்டிருந்த முகநூல் பதிவு இது:

கூவம், பக்கிங்காம் கால்வாய் ஆகிய ஆற்றங்கரைகளில் குடிசைகளில் வசிக்கும் 10,000 குடும்பங்களை வெள்ள பாதிப்புகளை காரணம் காட்டி சென்னைக்கு வெளியே அனுப்பும் சதித் திட்டம் இதுவாகும். இந்த ஆறுகளின் கரைகளில் வாழும் மக்களை வெளியேற்ற கடந்த சில ஆண்டுகளாக காரணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த அரசு இப்போது வெள்ளத்தைக் காரணம் காட்டி அவர்களை அப்புறப்படுத்த முயல்கிறது. இதனால் அந்த மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து அவதிப்படுவார்கள். 

குடிசைகளை இழந்த மக்களுக்கு ஒக்கியம் துரைப்பக்கம், பெரும்பாக்கம் ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள குடிசை மாற்று வாரிய வீடுகள் வழங்கப்படும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது மிகவும் ஆபத்தான அறிவிப்பாகும். எனவே, இந்தத் திட்டத்தை கைவிட்டு அவர்கள் இப்போது வசிக்கும் பகுதிகளிலேயே அரசு வீடு கட்டித் தர வேண்டும். என்று பதிவிடும் நிலை அன்று இருந்த போதும், பெரும்பாலான மக்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் படிப்படியாக அகற்றப் பட்ட போதும், சிலர் தொடர்ந்து போராடி வரும் நிலையில், அறங்கூற்று மன்றத் தீர்ப்பால் அவர்களும் இடம் மாறியே ஆகவேண்டும் என்கிற நிலை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,001.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.