Show all

அவருடைய மகனின் கீச்சுப் பதிவு! இலங்கையில் பொம்மை தலைமைஅமைச்சராக பொறுப்பேற்ற ராஜபக்சே, நாளை பதவி விலகுவாராம்

28,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சிறிசேனாவால் அடாவடியாக இலங்கை தலைமை அமைச்சராக நியமிக்கப் பட்ட ராஜபக்;;சே பதவியிலிருந்து நாளை விலகுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவருடைய மகனும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான நமல் ராஜபக்சே, தன்னுடைய கீச்சுப் பக்கத்தில் இத்தகவலை வெளியிட்டுள்ளார். அதில், 'நாட்டின் நிலைப்புத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக, முன்னாள் அதிபர் நாளை தலைமை அமைச்சர் பதவியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளார். பொதுமக்களுக்கு ஆற்றும் உரையை அடுத்து அவர் பதவி விலகுவார். அவருடன் இருக்கும், இலங்கை பொதுமக்கள் முன்னணியும் இலங்கை சுதந்திரக் கட்சியும், பிற கட்சிகளும் அதிபருடன் இணைந்து பெரிய கூட்டணி ஒன்றை உருவாக்க ஏற்பாடுகள் நடந்துவருகின்றன' என்று நமல் குறிப்பிட்டுள்ளார். 

முன்னதாக, இன்று காலை அதிபர் மைத்திரியை, மகிந்த ராஜபக்சே அவருடைய செயலகத்தில் சந்தித்துப் பேசினார். நேற்றிரவு, தலைமை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ரணிலுடன் மைத்திரி பேச்சு நடத்தியதாகவும், அப்போது பேரவைத்தலைவர் கரு ஜயசூர்யவை தலைமை அமைச்சர் பதவியை ஏற்கச் செய்யுமாறு வலியுறுத்தியதாகவும், அதற்கு ரணில் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், ஜயசூர்யாவும் உறுதியாக மறுத்ததாகவும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்சுமண யாப்ப அபேவர்த்தனவும் செய்தியாளர்களிடம் இதை உறுதிப்படுத்தினார். நாளை காலை, சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுப் பின்னர் மகிந்த பதவிவிலகுவார் என்றும் அவர் குறிப்பிட்டார். 

ரணில் கட்சியினரின் ஆதரவோடு, இலங்கை அதிபரான மைத்திரிக்கு, மக்கள் பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமைஅமைச்சர்  ரணில் மீதான ஒரு இனம் புரியாத பகை, இல்லையில்லை ஒருஇனம் அவர் மீது கொண்டிருக்கிற நம்பிக்கை காரணமான பகையால், கடந்த நாற்பத்தொன்பது நாட்களாக இலங்கையில் தொடர்ந்து குழப்பம் விளைவதற்கு காரணமாகி வருகிறார் மைத்திரிபால சிறசேனா. ஐம்பதாவது நாளில் பதவிவிலகவேண்டிய நிலைக்கு மகிந்த தள்ளப்பட்டு இலங்கை குழப்பம் தற்காலிகமான முடிவுக்கு வருவதாகத் தெரிகிறது. சிறிசேனாவிற்கு நல்ல புத்தி வந்தால்தான் நிரந்தரத் தீர்வு இலங்கையில் சாத்தியம். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,001.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.