Show all

இயக்குனர்கள் தொடங்கிய புதிய அமைப்பு! தமிழர் பிரச்சினைகளுக்காக போராடும்

27,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: திரைப்பட இயக்குனர்கள் பாரதிராஜா, ஆர்.கே.செல்வமணி, அமீர், தங்கர்பச்சான், கவுதமன், நடிகர் சத்யராஜ் ஆகியோர் தலைமையின் கீழ் புதிய பேரவை சென்னையில் நேற்று தொடங்கப்பட்டது. இதற்கு 'தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்தப் பேரவைக்காக வில் அம்பு, மீன் மற்றும் புலி உருவம் பொறிக்கப்பட்ட கொடியும் அறிமுகப்படுத்தப்பட்டது. அதில், மானமும் வீரமும் தமிழனின் அடையாளம் என்றும், வெல்க தமிழ் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தமிழர் பிரச்சினைகளுக்காக தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை போராடும் என்று அவர்கள் கூட்டாக அறிவித்தனர்.

பாரதிராஜா: தமிழக மக்கள் கடந்த 2 ஆண்டுகளாக மிகப்பெரிய சோதனைகளைச் சந்தித்து வருகிறார்கள். தமிழ் நிலத்துக்கு தற்போது பேராபத்து ஏற்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு போராடுவதற்காக தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவையை தொடங்கியிருக்கிறோம். பேரவையில் யாருக்கும் எந்தவித அடையாளமும் இருக்காது. அரசியல் வேற்றுமை, காழ்ப்புணர்ச்சி இல்லாமல் இருப்பார்கள்.

அரசியல் என்ற சாயத்தை கலைத்துவிட்டு தமிழனாக இந்த கூடாரத்துக்குள் வரவேண்டும். தமிழகமே கொந்தளிக்கும்போது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை சென்னையில் நடத்தக்கூடாது. இந்தப் போட்டியை தமிழகத்தில் நடத்துவது இளைஞர்களை திசைதிருப்புவதற்கு நடத்தப்படுகிறதா? என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது. எங்கள் பேரவை நடத்தும் போராட்டம் ஜனநாயக முறைப்படியும், தார்மீகமாகவும் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்த பின்னரும் சென்னையை மையமாக கொண்ட நடிகர் சங்கம் தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயருடன் இருக்கிறது. இது தமிழ் நடிகர் சங்கமாக மாறும்வரை எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கமாட்டேன் என்று நடிகர் சங்க மௌன போராட்டத்தில் கலந்து கொள்ளாததற்கான காரணத்தைத் தெளிவுபடுத்தினார் பாரதிராஜா. 

தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நம் ஒற்றுமையை சிதறடித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க திரளும் போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்துவிடலாம் எனும் சூழ்ச்சியை அனைவரும் புரிந்துகொண்டு ஒன்றுகூடி சென்னையில் கிரிக்கெட் போட்டியை தடுத்துநிறுத்தி வென்றெடுக்க வேண்டும். கட்டணம் செலுத்தி அனுமதி சீட்டு வாங்கிவிட்டோமே என நினைக்காமல் நமக்கு உணவிடும் உழவர்களுக்காக அதை கிழித்தெறியுங்கள். பார்வையாளர் இன்றி விளையாட்டு போட்டியை நடத்திக்கொள்ளட்டும்.

எனவே, நமக்கு வேண்டியது காவிரி மேலாண்மை வாரியம். அதற்காக கட்சிகளாக, தனித்தனி இயக்கங்களாக, அமைப்புகளாக பிரிந்துகிடக்கின்ற அனைவரும் அவரவர்களின் அடையாளங்களை ஒதுக்கிவைத்துவிட்டு உழவர்களுக்காக நம் காவிரி அன்னைக்காக ஒன்றுபடுங்கள். உரிமையை வென்றெடுப்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திரைப்பட இயக்குனர்கள் பாரதிராஜா, அமீர், கவுதமன், வெற்றிமாறன் மற்றும் தமிழக அனைத்து உழவர்கள் சங்க ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் உள்பட பலர் நேற்று ஆளுநரைச் சந்தித்து குடிஅரசு தலைவருக்கு ஒரு மனு கொடுத்தனர். அதில், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும். கர்நாடகத்தை சேர்ந்த சூரப்பாவை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமித்ததை ரத்துசெய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,753.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.