Show all

உலங்கிகள் மூலம் கண்காணிப்பு! சென்னைக் கடற்கரைகளில் தடையை மீறி நீராடி விளையாடுவதைத் தடுப்பதற்காக

அண்மை நாட்களாக கடலின் சீற்றம் மற்றும் கடலில் உள்ள மணற்பரப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் கடலில் நீராடி விளையாட இறங்கும் இளைஞர்கள், சிறுவர்கள் என பலர் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டும், சுழலில் சிக்கியும், மணலுக்குள் சிக்கியும் உயிரிழக்கும் துயர நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. இதன் பொருட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துகிறது காவல்துறை.

24,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: சென்னை சல்லிக்கட்டு கடற்கரையில் உலாஆர்வலர்கள் நீராடி விளையாடுவது தடைசெய்யப்பட்டுள்ளது. கடற்கரையில் தடையை மீறி நீராடி விளையாடுவதைத் தடுப்பதற்காக, உலங்கிகள் (டிரேன்கள்) மூலம் கண்காணிப்பை தீவிரப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

சென்னையின் முதன்மை பொழுதுபோக்கு தலமாக சல்லிக்கட்டு கடற்கரை (மெரினா) திகழ்ந்து வருகிறது. இந்தக் கடற்கரையில் அன்றாடம் பேரளவான மக்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் பொழுதை கழித்து மகிழ்கின்றனர். 

பலர் கடற்கரை சாலையில் நடைபயிற்சி, உடற்பயிற்சிகளையும் மேற்கொள்கின்றனர். அதேபோல வெளியூர்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் இந்தக்கடற்கரையைச் சுற்றிப் பார்க்க வந்து கடலில் நீராடி மகிழ்வது வழக்கமாக இருந்து வருகிறது. 

கடந்த மூன்று ஆண்டுகளாகக் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக அவ்வப்போது, கடற்கரை பூட்டப்பட்டது. தொற்று முழுமையாக நீங்கியநிலையில், பொதுமக்கள் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனாலும் கடற்கரையில் உலாஆர்வலர்கள் நீராடி விளையாடுவது தடைசெய்யப்பட்டுள்ளது.

அனுமதி வழங்கப்பட்ட நாளில் இருந்து இந்தக் கடற்கரையில் தடையை மீறி நீராடி விளையாடச் சென்ற பலர் பலியாகியுள்ளனர். கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் நீராடி விளையாடிய 34 பேருக்கு மேலானோர் மூழ்கி பலியாகி உள்ள சோகம் நிகழ்ந்துள்ளது. 

அண்மை நாட்களாக கடலின் சீற்றம் மற்றும் கடலில் உள்ள மணற்பரப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் கடலில் நீராடி விளையாட இறங்கும் இளைஞர்கள், சிறுவர்கள் என பலர் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டும், சுழலில் சிக்கியும், மணலுக்குள் சிக்கியும் உயிரிழக்கும் துயர நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. 

கடற்கரையில் நீராடி விளையாட தடை உள்ளதை மக்களுக்கு உணர்த்தும் வகையில் எச்சரிக்கை அறிவிப்பு பலகைகளும் காவல்துறையினரால் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளது. அப்படி இருந்தும், தடையை மீறி, காவல்துறையினரின் கண்காணிப்பை தாண்டி, பொதுமக்கள் கடலாடி வருகின்றனர். 

இதனால் தற்போது கண்காணிப்பை தீவிரப்படுத்தும் வகையில், உலங்கி மூலம் காண்காணிப்புப் பணிகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகைக்கு காலை, மதியம் மற்றும் மாலை நேரங்களில் கடற்கரை ஒட்டிய பகுதிகள் முழுவதுமாக உலங்கிகளைப் பறக்கவிட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. 

மெரினாவைத் தொடர்ந்து, பெசன்ட் நகர் கடற்கரை மற்றும் திருவான்மியூர் கடற்கரை ஆகிய பகுதிகளிலும், இந்த உலங்கி கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படும் என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடலாடிகளை கண்காணிப்பது மட்டுமல்லாமல், பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகளை கண்காணித்துத்  தடுக்கும் விதமாகவும் இத்தகைய உலங்கிகளைப் பறக்கவிடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,303.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.