Show all

மோடி, உள்ளிட்ட பல நாட்டு தலைமைஅமைச்சர்களும் இரங்கல்! ஜப்பான் முன்னாள் தலைமைஅமைச்சர் சுட்டுக்கொல்லப்பட்ட சோகம்

ஜப்பான் முன்னாள் தலைமைஅமைச்சர் ஷின்ஜோ அபே சுட்டு கொல்லப்பட்ட நிலையில், இந்திய நாடாளுமன்றம், செங்கோட்டை மற்றும் குடியரசுத் தலைவர் மாளிகையில் தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டு உள்ளது.

25,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: அறுபத்தியேழு அகவை ஷின்ஜோ அபே  ஜப்பான் நாட்டின் முன்னாள் தலைமைஅமைச்சர் ஆவார். அந்த நாட்டில் நீண்ட காலம் தலைமைஅமைச்சராக இருந்ததுடன், லிபரல் ஜனநாயக கட்சியின் தலைவராகவும் இருந்துள்ளார். 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, உடல்நல குறைவைக் காரணம் காட்டி அவர் பதவி விலகினார். ஆனாலும் கட்சி செயல்பாடுகளில் கலந்து கொண்டார். தற்போது, ஜப்பான் நாடாளுமன்ற மேலவைக்கு நாளை தேர்தல் நடக்க உள்ளது. நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள நாரா நகர தொடர்வண்டி நிலையம் முன்பு நேற்று உள்ளூர் நேரப்படி காலை 11.30 மணிக்கு நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் ஷின்ஜோ அபே கலந்து கொண்டு பேசினார். 

அவர் பேசத்தொடங்கிய சில மணித்துளிகளில், அவருக்கு பின்னால் நின்று கொண்டிருந்த ஒருவர் அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில், அவர் கழுத்தில் குண்டு பாய்ந்துள்ளது. 

ஷின்ஜோ அபே உடனடியாக அவசர சிகிச்சைக்காக நாரா மருத்துவ பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், மருத்துவர்கள் எவ்வளவோ முயற்சித்தும் ஷின்ஜோ அபேயைக் காப்பாற்ற முடியவில்லை. 

உள்ளூர் நேரப்படி மாலை 5.03 மணிக்கு அவர் உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் அறிவித்தனர். ஷின்ஜோ அபே சுட்டு கொல்லப்பட்டதற்கு இந்தியத் தலைமைஅமைச்சர் மோடி, உள்ளிட்ட பல நாட்டு தiமைஅமைச்சர்களும், உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

ஜப்பான் முன்னாள் தலைமைஅமைச்சர் ஷின்ஜோ அபே சுட்டு கொல்லப்பட்ட நிலையில், இந்திய நாடாளுமன்றம், செங்கோட்டை மற்றும் குடியரசுத் தலைவர் மாளிகையில் தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டு உள்ளது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,304. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.