Show all

நாமும் கடன் வாங்கிவிட்டு ஏமாற்றுவதற்கு! வங்கிகளில் பேரளவாகக் கடன் கிடைக்கும் அந்த எல்லைக்கோடு எது

'ஐந்து ஆண்டுகளில் பத்து லட்சம் கோடி ரூபாய் வசூலிக்க முடியாத கடன்கள்' என்கிற, நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிவிப்பையொட்டி, நாமும் கடன் வாங்கிவிட்டு ஏமாற்றுவதற்கு வங்கிகளில் பேரளவாகக் கடன் கிடைக்கும் அந்த எல்லைக்கோடு எது? என்று வேறு ஒரு தளத்தில் என்னிடம் கேட்கப்பட்ட வினாவிற்கு நான் உருவாக்கிய கட்டுரை இது.

28,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5124: கடந்த ஐந்து ஆண்டுகளில் தண்ட முடியாத வாராக்கடன் பத்து லட்சம் கோடி ரூபாய்க்கு மேலாக அதிகரித்துள்ளது. 

இது குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கிகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் தண்ட முடியாத மோசமான கடன் 10,09,511 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். 

கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் தண்ட முடியாத வாரக்கடன் 8.5 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகளில் பெரு நிறுவனங்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கு, வங்கிகள் பேரளவாகக் கடன் வழங்கி வருகின்றன. சில பொழுதுகளில் இந்தக் கடனில் ஒரு பகுதிகள் தண்ட முடியாமல் போகின்றது. எடுத்துக்காட்டுக்கு, கடனை வாங்கி விட்டு நாட்டை விட்டு வெளியேறிய விஜய் மல்லையா, மொகுல் சோக்சி, நிரவ் மோடி என சிலர் தப்பினர். 

கடந்த ஆண்டில் இது குறித்தான பெரும் சர்ச்சையே உருவானது. பெரும்பாலும் ஒதுக்கிவைக்கப்பட்ட கடன்களைத் தண்ட முடியாது என்றே கூறப்படுகின்றது. ஆனாலும் இதனைத் தண்ட வங்கிகள் முயற்சி எடுக்கும். இது நிரந்தரமாக தள்ளுபடி செய்யப்படவில்லை. ஆனால் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் விளக்கம் கொடுத்து வருகிறார்.   

இதில் எஸ்பிஐ வங்கியின் பங்கு 1.65 லட்சம் கோடி ரூபாயாகவும் உள்ளது. பஞ்சாப் வங்கியில் 59,807 கோடி ரூபாயும், ஐடிபிஐ வங்கியில் 33,135 கோடி ரூபாயும், ஐசிஐசிஐ வங்கியில் 42,164 கோடி ரூபாயும், ஹெச் டி எஃப் சி வங்கியில் 31,516 கோடி ரூபாயும் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள கடன் அளவு ஆகும்.

வங்கிகளில் கடன் கிடைக்கும் அந்த எல்லைக்கோடு எது? பொதுவாக அதிக வருமான வரி செலுத்துகிறவர்களுக்கு அதிக அளவில் வங்கிகள் கடன் கொடுக்கின்றன. கடன் வாங்குவதற்கு என்றே சிலர் கூடுதல் வருமானம் வருவதாக அரசுக்கு கணக்கு காட்டுவதும் உண்டு. 

அதிக அளவு அசையா சொத்துக்கள் வைத்திருப்பவர்களுக்கு அதிக அளவில் வங்கிகள் கடன் கொடுக்கின்றன. கடன் தகுதியை உயர்த்திக் கொள்வதற்கு என்றே சிலர் கடன்வாங்கி அசையா சொத்துக்களை வாங்குகிற நடைமுறையும் காணப்படுகிறது. 

பணத்தால் பணத்தை ஈட்டிட முடியும்; அதாவது வட்டியாக. தொழில் வணிகத்தாலும் பணத்தை ஈட்டிட முடியும். பணம் இருப்பவர்கள்தாம் பணத்தால் பணத்தை ஈட்டிட முடியும். பணம் இல்லாதவர்களும் தொழில் வணிகத்தால் பணத்தை ஈட்டிட முடியும் வகைக்கான ஒரு வாய்ப்புதான் கடனுதவி. இந்தக் கடனுதவியில் நடத்தப்படுகிற தொழில் வட்டிக்கும் சேர்த்து இரட்டை ஆதாயம் வருகிற தொழிலாக அமையாவிட்டால் கடனாளி வங்கியை ஏமாற்ற வேண்டிய சூழல் அமைகிறது. ஆக  ஏமாற்ற வேண்டும் என்று யாரும் வங்கியில் கடன் வாங்குவதில்லை என்பது நூறு விழுக்காடு உண்மை. 

இன்னும் சிறப்பாக சொல்லவேண்டுமானல்- வாராக்கடன் என்பது உண்மையல்ல. அது வாராவட்டி என்றே பேசப்பட வேண்டும். திருப்பி அளிக்கும் கடன்- வட்டிக்கே முதலாவதாக வரவு வைக்கப்படுகிற நடைமுறையால் கடன் குறையாமலே இருப்பதாக கணக்குக் காட்டப்படுகிறது.

வருமான வரி வாங்குகிற அரசு- தொழில் வணிகத்தில் நட்டம் ஏற்படுகிற போது இழப்பீடு தருகிற நடைமுறையையும் முன்னெடுக்க வேண்டும். அல்லது வருமான வரியை முற்றாக அகற்ற வேண்டும். வருமான வரி இல்லாத நாடுகள் உலகில் பல உள்ளன. தொழில் வணிகத்தில் சரக்கு சேவை வரி செலுத்திய விழுக்காட்டு அடிப்படையிலேயே வருமானம் ஈட்டப்படுகிறது. அவர்களுக்கு வருமான வரி என்று இரண்டாவதாக ஒரு வரி, கூடுதல் சுமையே. 

இன்னொருபுறம்- இரண்டரை இலட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டுகிறவர்கள் வருமான வரித்துறை அதிகாரிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொணரப்படுகின்றனர். இந்த அச்சம், பணத்தின் மீதான தீண்டாமையை மக்களுக்குப் பயிற்றுவிக்கிற பாடு ஆகும். 

நாமும் கடன் வாங்கிவிட்டு ஏமாற்றுவதற்கு என்கிற உங்கள் சிந்தனையைத் தலையைச் சுற்றி தூக்கி வீசுங்கள். 

பணம் பணத்தை ஈட்டக்கூடாது. இற்றைக்கு உங்கள் பயன்பாட்டுக்கு வாங்கிய எந்தப் பொருளையும் நாளை அதேவிலைக்கு விற்க முடியாது. வணிகத்திற்கு என்று வாங்கினாலும்- காய்கறிகள், சமைத்த பொருட்கள் சில நாட்களில் அழுகிவிடும். ஆனால் பணம் அழுகாத பொருளாக இருப்பதோடு வருமானம் ஈட்டும் வகைக்கு வட்டி என்கிற நடைமுறை இருப்பதே அனைத்துப் பொருளாதாரக் குற்றங்களுக்கும் அடிப்படை காரணமாகும். ஆகவே வட்டியை அகற்றுகிற ஆட்சிக்கு முனையுங்கள். 

பணத்தின் மீதான தீண்டாமையை மக்களுக்குப் பயிற்றுவிக்கிற வருமான வரியை அகற்றுகிற ஆட்சிக்கு முனையுங்கள். கடன் இல்லாத தொழில் வணிகத்திற்கு முயலுங்கள். கடன் வாங்கும் முன்னம் உங்கள் தொழல் வணிகத்தில் வட்டிக்கும் சேர்த்து வருமானம் வருமா என்று சிந்தியுங்கள். வாகைசூட வாழ்த்துக்கள்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,462.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.