Show all

யார் யாருக்கு என்னென்ன துறை! தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்கத்தில்

திமுக இளைஞரணி செயலாளரும், முதல்வர் மு.க.ஸ்டாலின் மகனுமான உதயநிதிக்கு அமைச்சரவையில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, பல்வேறு அமைச்சர்களின் பொறுப்புகள் மாற்றப்பட்டிருக்கின்றன.

29,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5124: திமுக இளைஞரணி செயலாளரும், முதல்வர் மு.க.ஸ்டாலின் மகனுமான உதயநிதிக்கு அமைச்சரவையில் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை ஒதுக்கப்பட்டு புதியதாக அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து, பல்வேறு அமைச்சர்களின் பொறுப்புகள் மாற்றப்பட்டிருக்கின்றன. இது தொடர்பாக வெளியான அதிகாரப்பாட்டு அறிக்கையில் தெரியவருவது: 

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 34 அமைச்சர்களை கொண்ட அமைச்சரவை ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பொறுப்பேற்றது. தற்போது அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

இதன் அடிப்படையில் அமைச்சர் துறைகள் மாற்றப்பட்டவர்கள்:
இ.பெரியசாமி
கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த இ.பெரியசாமிக்கு ஊரக வளர்ச்சி, ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியத் துறை வழங்கப்பட்டிருக்கிறது.

பெரிய கருப்பன்
ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்த கே.ஆர்.பெரியகருப்பனுக்கு தற்போது கூட்டுறவுத்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

கா.ராமச்சந்திரன்
வனத்துறை அமைச்சராக இருந்த கா.ராமச்சந்திரனுக்கு தற்போது சுற்றுலாத்துறை மற்றும் சுற்றுலா வளர்ச்சி துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

மதிவேந்தன்
சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த முனைவர் எம்.மதிவேந்தன் தற்போது வனத்துறை அமைச்சராக மாற்றப்பட்டிருக்கிறார்.

கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கும் அமைச்சர்கள்:
சு.முத்துசாமி
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்த சு.முத்துசாமிக்கு கூடுதல் பொறுப்பாக ஊரக வீட்டு வசதி, நகர அமைப்பு திட்டமிடுதல் மற்றும் வீட்டு வசதி மேம்பாடு, இட வசதி கட்டுப்பாடு, நகர திட்டமிடல் துறை வழங்கப்பட்டிருக்கிறது.

ராஜ கண்ணப்பன்
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பனுக்கு தற்போது கதர் மற்றும் கிராமத் தொழில் வாரியம் எனக் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

அமைச்சர் ஆர்.காந்தி
கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சராக இருந்த ஆர்.காந்திக்கு கூடுதல் பொறுப்பாக புவியீகை மற்றும் கிராமஈகைத் துறை வழங்கப்பட்டிருக்கிறது

சேகர்பாபு
தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சராக இருக்கும் பி.கே.சேகர்பாபுக்கு தற்போது சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் என்ற கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது

பழனிவேல் தியாகராஜன்
நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சராக இருக்கும் முனைவர் பழனிவேல் தியாகராசனுக்கு ஓய்வூதியம் மற்றும் ஓய்வு கால நன்மைகள் மற்றும் புள்ளியல் துறையும் வழங்கப்பட்டிருக்கிறது

மெய்யநாதன்
சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை, இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை பொறுப்பில் இருந்த சிவ மெய்யநாதனுக்கு, இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு மாற்றாக மாசுக்கட்டுப்பாட்டு துறை வழங்கப்பட்டிருக்கிறது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,463.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.