Show all

இயல்அறிவு, அரசியல், கலாச்சாரம் பிடிபடாவகை வரிசையில்! இரட்டை கோபுரம் வெடிவைத்து தகர்ப்பு; ஒன்பது வினாடிகளில் நொறுங்கியது

இரட்டை கோபுரத்திற்கு அருகில் உள்ள கட்டடங்களில் வசித்தவர்கள், நேற்று மாலை வரை வீடு திரும்புவதற்கு அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.

13,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில், சூப்பர் டெக் என்ற நிறுவனத்தின் சார்பில் மிகப்பேரளவான இரட்டை கோபுர குடியிருப்புகள் கட்டப்பட்டன. இதில், அபெக்ஸ் என்ற கோபுரம், 32 மாடிகளை உடையது. இதன் உயரம் 328 அடி. 

மற்றொரு கோபுரத்தின் பெயர் சியான். இது, 31 மாடிகளை உடையது. உயரம் 318 அடி. இந்த இரட்டை கோபுரங்கள் விதிமுறையை மீறி கட்டப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது. கட்டுமானம் சட்டவிரோதமாக கட்டப்பட்டு உள்ளதாகவும், புவியியல் சார்ந்து கட்டப்படவில்லை என்றும் புகார் எழுந்தது.

இதையடுத்து இரட்டை கோபுரங்களை இடிக்கும்படி உச்ச அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டது. இடிப்புக்கு விதிக்கப்பட்ட கெடு, பல காரணங்களால் நீட்டிக்கப்பட்டது. இறுதியாக, நேற்று கட்டாயமாக இரு கோபுரங்களையும் இடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. 

இரட்டை கோபுர இடிப்புப்பணி, அடிபை இன்ஜினியரிங் என்ற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. நேற்று பிற்பகல் 2.30க்கு கட்டடங்கள் இடிக்கப்பட்டன. 9 வினாடிகளில் ஒட்டுமொத்த கட்டடமும் இடிந்து விழுந்தது.

இந்தக் கோபுரங்களை இடிக்க, 3,700 கிலோ வெடி மருந்துகள் பயன்படுத்தப்பட்டன. இவை, ஹரியானா மாநிலத்தில் இருந்து வரவழைக்கப்பட்டன. நீர்வீழ்ச்சி வெடிப்பு என்கிற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டடங்கள் இடிக்கப்பட்டன. 

நீர்வீழ்ச்சி வெடிப்பு வகைக்கு, வெடிமருந்துகள் கட்டடத்தின் உள்பகுதிக்குள் வைக்கப்பட்டன. கட்டடம் இடிந்து விழுவது  உட்புறமாகவே விழும் வகையிலும், வெளிப்புறத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த இடிப்பால், 55 ஆயிரம் டன் கட்டட இடிபாடு குப்பை குவியும். இவற்றை அகற்ற, மூன்று மாதங்களுக்கு மேல் ஆகும். தகர்ப்பு பணிகளில், 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். கட்டடங்கள் இடிக்கப்பட்டதால், அந்த பகுதி புகை மண்டலமாக காட்சியளித்தது. அந்தப் புகைமண்டலத்தைக் தண்ணீரை பீய்ச்சி அடித்து கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். கட்டடம், அந்த இடத்திலேயே நொறுங்கி விழுந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இடிக்கும் துறையைக் கண்கணிக்கும் அதிகாரிகளின் பொறுப்புணர்ச்சியைக் கொண்டாடும் அதே நேரத்தில், இந்தப் பேரளவான கட்டிட பணியில் பொறுப்புணர்ச்சியோடு இருந்திருக்க வேண்டிய அனைத்துத் துறை அதிகாரிகள் பொறுப்பணர்ச்சியை முன்னெடுப்பதில் என்ன தடை இருந்திருக்க முடியும் என்பது இயல்அறிவு (சயின்ஸ்), அரசியல், கலாச்சாரம் பிடிபடாவகை வரிசையில் ஒன்றாகிறது.

இரட்டை கோபுரத்திற்கு அருகில் உள்ள கட்டடங்களில் வசித்தவர்கள், நேற்று மாலை வரை வீடு திரும்புவதற்கு அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,355.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.