Show all

மொய்விருந்து! பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே தமிழ்முன்னோரால் கட்டமைக்கப்பட்ட- விழா மொய் மரபுகளின் தொடர்ச்சி

தமிழ் மொழியை மட்டுமல்ல, தமிழ்ப் பண்பாடுகளையும் வேரறுப்பதற்கு அண்ணாமலை போன்ற பிழைப்பாளிகளின் மூலம் அடுத்த இரைக்கு வலைவரித்து காத்திருக்கிற கட்சிதான் பாஜக என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது. அண்ணாமலையின் மொய்விருந்து கருத்தாடலும் தமிழ்ப்பண்பாட்டு வேரறுப்பிற்கானது என்பதை தமிழ்மக்கள் நன்கு அறிவார்கள். ஆனாலும்; வரலாற்றுப் பதிவுக்காக முன்னெடுக்கப்படுகிறது இந்தக் கட்டுரை.

11,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: தமிழ்முன்னோர், விழா என்ற தலைப்பிலேயே விழாமல் இருப்பதற்கு விழா என்கிற பொருளை பொதித்துள்ளனர். தமிழர்தம் பிள்ளைகளுக்குப் பெயர் சூட்டுவிழா, பிறந்த நாள் விழா, காதணி விழா, பூப்பு நன்னீராட்டுவிழா, திருமணவிழா, தொழில் தொடங்கும் விழா, வணிகம் தொடங்கும் விழா, வளைகாப்பு விழா என்று அனைத்து குடும்ப விழாக்களிலும் விருந்தும் மொய்யும் பண்பாட்டு நெறிமுறைகள் ஆகும்.

பொது விழாக்கள் ஆன பொங்கல், ஆடிப்பெருக்கு, தமிழ்த்தொடராண்டுப் புத்தாண்டு, விளக்குத் திருவிழா, என்பன அனைத்திலும் வேளாண்மையும், தொழில் உற்பத்தியும், வணிகமும் பண்பாட்டு நெறிமுறைகள் ஆகும்.

அந்த வகைமையின் தொடர்ச்சியாக தஞ்சாவூர் மாவட்டத்தின் கடைமடை பகுதியான பேராவூரணி சுற்று வட்டாரத்தில் பல நூறு ஆண்டுகளுக்கு மேலாக மொய் விருந்து நடத்தப்பட்டு வருகிறது. திருமணம், புது வீடு கட்டுதல், தொழில் முதலீடு போன்ற பெரிய அளவில் பணத்தேவை ஏற்படும் போது மொய் விருந்து நடத்தி அதனை நிறைவேற்றி கொள்ளக்கூடிய மரபு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

வாழ்வில் பின்தங்கியவர்கள் முன்னேற்றம் அடைவதற்காக மொய் விருந்து நடத்துவர். அழைப்பிதழ் அச்சடித்து உறவினர்கள், நண்பர்கள் என பருக்கும் கொடுப்பார்கள். மொய் விருந்து நாளில் கிடா வெட்டி மணக்க சுவைக்க அசைவ விருந்து வைப்பார்கள். அதனைச் சாப்பிட்ட பிறகு தங்களால் முடிந்த பணத்தை மொய் ஏட்டில் விருந்தினர்கள் எழுதிச் செல்வர்.

திரட்டப்பட்ட மொய் பணத்தின் மூலம் வருமானம் வரக்கூடிய தொழிலில் முதலீடு செய்வார்கள். பணம் செலுத்தியவர்கள் மொய் விருந்து நடத்தும் போது பணம் பிடித்தவர்கள் ஏற்கெனவே அவர் செலுத்திய பணத்துடன் புது நடை என்ற பெயரில் கூடுதலாக சேர்த்து எழுதுவர். ஒருவர் ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை மொய் விருந்து நடத்துவது வழக்கம். வட்டியில்லா கடன் என்கிற அடிப்படையில் மொய் விருந்து நடத்தப்படுகிறது.

இந்த நிலையில் பேராவூரணி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் கடந்த செவ்வாய்க்கிழமை பேராவூரணியில் மொய் விருந்து நடத்தினார். திருமண மண்டபம் ஒன்றில் பேரளவான பந்தல் அமைத்து விரிவான ஏற்பாட்டை செய்திருந்தார்.


100 கிடா வெட்டி பத்தாயிரம் பேருக்கு விருந்து வைத்தார். மொய் பணம் வாங்குவதற்காக ஐந்து பேர் அடங்கிய குழு வீதம் மொய் எழுத, பணத்தை வாங்கி மொய் சட்டியில் வைக்க என 25 குழுக்கள் அமைப்பட்டிருந்தன. பணம் எண்ணுவதற்கு 25க்கும் மேற்பட்ட இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. கண்காணிப்பிற்கு 10க்கும் மேற்பட்ட கண்காணிப்பு படக்கருவிகள் பொறுத்தப்பட்டிருந்தது. துப்பாக்கி ஏந்திய தனியார் பாதுகாவலர்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.

காலை முதலே விழாவுக்கு வந்தவர்கள் விருந்து சாபிட்டுவிட்டு மொய் எழுதி சென்றனர். மொய் விருந்தில் மொத்தம் ரூ.10 கோடி திரண்டிருந்தது. மொய்விருந்தில் கோடிகள் புரள்வது இயல்பானதுதான். ஆனாலும் மொய் விருந்து வரலாற்றிலேயே முதல் முறையாக 10 கோடி திரண்டது இந்த மொய்விருந்தில் என்பது கொண்டாடத்தக்கதுதான்

இந்த நிலையில் பாஜகவின் தமிழ்நாட்டுக் கிளையின் தலைவர் அண்ணாமலை, திமுக சட்டமன்ற உறுப்பினர் கறுப்பு பணத்தை வெள்ளையாக மாற்றி ஒரே கல்லில் அஞ்சாறு மாங்காய் அடித்து விட்டார் அசோக்குமார் என அறிக்கை வெளியிட்ட அறியாமை தமிழ்மக்களை சினமூட்டியுள்ளது. 

இது குறித்து திமுக சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் தெரிவிக்கும் போது, இராசராச சோழன் காலத்திலிருந்தே எங்கள் பகுதியில் மொய் விருந்து பண்பாடு தொடர்ந்து வருகிறது. ஐம்பது காசுகளில் தொடங்கியது இன்றைக்கு கோடிகளில் திரளும் அளவிற்கு வளர்ந்திருக்கிறது. வட்டியில்லா கடனாக மொய் விருந்தில் பணம் எழுதி செல்வார்கள். அவர்கள் தேவை நடத்தும் போது அதனை திரும்ப செலுத்த வேண்டும்.

ஒளிவு மறைவில்லாமல் எல்லாமே வெளிப்படையாகவே நடக்கும். திரண்ட பணத்தை வாங்கிய கடனுக்கு அன்றைக்கு மாலையே அடைத்துவிடுவோம். பேராவூரணி, அறந்தாங்கி, ஆலங்குடி மூன்று தொகுதிகளில் மொய் தேவை நடத்தப்படுகிறது. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மொய் விருந்தின் அடிப்படை தெரியவில்லை என்பது அவர் வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் தெளிவாக தெரிகிறது.

கறுப்பு பணம் வெள்ளையாகியிருப்பதாக அறியாமையில் கூறியிருக்கிறார். அவர் கட்சியை சார்ந்த நிர்வாகிகளிடம் விசாரித்து கேட்டு தெரிந்திருக்கலாம். சொந்தபந்தங்கள், நண்பர்கள் என பத்தாயிரம் பேர் மொய் செய்துள்ளனர். கூலி வேலை செய்கிறவர்கள் தொடங்கி பெரும்பணக்காரர்கள் வரை மொய் விருந்து நடத்துகிறோம். இது சுழற்சி முறையில் கொடுக்கப்படும் வட்டியில்லா கடன் அதனை திரும்ப செலுத்திடுவோம். மொய் விருந்தின் வரலாற்றை அண்ணாமலை தெளிவாக தெரிந்து கொண்டு பேச வேண்டும் என்று கூறினார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,353.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.