Show all

ராகுல் காந்தியின் இந்திய நடைபயணம்! அரசியல் அமைப்பு அங்கீகரிக்காத- பாஜக கொண்டாடும்- சனாதன தர்மத்திற்கு எதிராக

கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை காங்கிரஸ் முன்னெடுக்கும் ராகுல்காந்தியின் நடைபயணத்திற்கு, முதன்மைக் காரணம் அரசியல் அமைப்பு அங்கீகரிக்காத- பாஜக கொண்டாடும்- சனாதன தர்மத்திற்கு எதிராக மக்களிடம் எழுச்சியை உண்டாக்குவது என்கிறார் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாட்டுக் கிளையின் தலைவர் கே.எஸ்.அழகிரி.
 
22,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி, தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் இருந்து தொடங்கி, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, உத்தரப்பிரதேசம், பஞ்சாப் என 12 மாநிலங்கள் வழியாக 150 நாட்கள் நடை பயணத்தில், 3,500 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து, இறுதியில் காஷ்மீரில் தனது நடைபயணத்தை ராகுல் காந்தி நிறைவு செய்கிறார்.
 
இந்தப் பயணத்திற்கு ஹிந்தியில் இடப்பட்டுள்ள தலைப்பு 'பாரத் ஜோடோ யாத்ரா' என்பதாகும். இந்தியாவை தமிழ்நாடும் உலகினரும் தவிர்த்து இந்தியாவின் எந்த மாநிலத்திலும் பாரத் என்ற தலைப்பிலேயே புழங்கி வருகின்றனர். காரணம் இந்தியா என்பது நாவலந்தேயம் என்கிற தமிழ்ச்சொல்லடியாக உருவானது என்கிற காரணம் பற்றியதாக இருக்கலாம்.

இந்த 'பாரத் ஜோடோ யாத்ரா' என்கிற ஹிந்தித் தலைப்பை தமிழ் செய்திகளில், இந்திய ஒற்றுமை பயணம் என்று பெரும்பாலனவர்கள் மொழிபெயர்த்து பயன்படுத்துகின்றனர். சிலர் தேசிய ஒற்றுமை பயணம் என்றும் எழுதுகின்றனர். இரண்டாவது மொழிபெயர்ப்பு இட்டுக்கட்டப்பட்டது ஆகும். முதல் மொழிபெயர்ப்பான இந்திய ஒற்றுமை பயணத்தில் உள்ள ஒற்றுமை ஹிந்தியில் ஏக்தே என்றே குறிப்பிடப்பட வேண்டும். இங்கே ஜோடோ என்கிற ஹிந்திச் சொல் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. ஜோடோ என்கிற ஹிந்தி சொல்லை ஒரு போதும் ஒற்றுமை என்று மொழிபெயர்க்க முடியாது. பாரத் ஜோடோ யாத்ராடவை இந்தியாவுடன் பயணம் என்று தமிழ்ப்படுத்துவது கொஞ்சம் கூடுதல் பொருத்தம் உடையதாக இருக்கும் என்று தோன்றுகிறது.

கன்னியா குமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தியால் முன்னெடுக்கப்படும் நடைபயணத்தில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து நேற்று சென்னை வந்த ராகுல் காந்தி, சென்னையில் உள்ள தனியார் விடுதியில் தங்கினார். 

இன்று காலை திருப்பெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்துக்கு வந்து, அங்கு ராஜீவ்காந்தி உருவப்படத்துக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், ராஜீவ் தியாக பூமியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். ராஜீவ் காந்தி நினைவிட ஊழியர்கள் மற்றும் ராஜீவ் காந்தியுடன் உயிர் தியாகம் செய்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து உரையாடினார்.

கன்னியாகுமரியில் தொடங்க உள்ள நடைபயணத்திற்காக ராகுல் காந்தி இன்று மாலை கன்னியாகுமரிக்கு வரவுள்ளார். இன்று இரவு கன்னியாகுமரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்க உள்ளார். இந்தப் பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் காலந்துகொண்டு, நாட்டுக் கொடியை ராகுலிடம் வழங்கி, நடைபயணத்தை தொடங்கி வைக்கிறார். பின்னர், பொதுக்கூட்டத்தில் திரண்டிருக்கும் தொண்டர்களிடையே ராகுல் காந்தி உரை நிகழ்த்த உள்ளார். ராகுல் காந்தியின் இந்த நடைபயணத்தையொட்டி, காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு  கிளையின் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் கன்னியாகுமரியில் முகாமிட்டுள்ளனர்.

பொதுக்கூட்டம் முடிந்த பின்னர், அகத்தீசுவரம் விவேகானந்தா கல்லூரியில் ராகுல்காந்தி தங்குகிறார். நாளை அங்கிருந்து புறப்பட்டு கொட்டாரம், சுசீந்திரம், கோட்டார், டெரிக் சந்திப்பு வழியாக நடைபயண்ம் மேற்கொண்டு, நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் தங்குகிறார். 

வெள்ளிக்கிழமை சுங்கான்கடை, புலியூர்குறிச்சி, தக்கலை வழியாக முளகுமூடு செயின்ட் மேரீஸ் பள்ளியில் தங்குகிறார். சனிக்கிழமை சாமியார்மடம், சிராயன்குழி, மார்த்தாண்டம், குழித்துறை, படந்தாலுமூடு வழியாக நடைபயணம் மேற்கொள்கிறார். கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்கு நாட்கள் 56 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்கிறார். இந்தப் பயணத்தின் போது வழியில் மக்களை சந்திக்கவும் கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரிக்கு முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி வருகையையொட்டி காவல்துறை கூடுதல் தலைமை இயக்குனர் தாமரைக்கண்ணன் மேற்பார்வையில், பாதுகாப்பு பணிகளில் 2500 காவலர்கள் ஈடுபடுத்த பட்டுள்ளனர். ராகுல் காந்தியின் நடை பயணத்தை முன்னிட்டு கன்னியாகுமரி கடல் பகுதிகள் கடற்கரை  பகுதிகள் உள்ளிட்ட கன்னியாகுமரி முழுவதும் காவலர்கள் மற்றும் ஒன்றிய பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. மோப்பநாய் உதவியுடன் சோதனைகள் விடிய விடிய நடைபெற்று வருகிறது.

ராகுல் காந்தியுடன் 118 இளைஞர்கள் தொடக்கம் முதல் கடைசி வரை பயணிக்கின்றனர். உடல்திறன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ள இவர்களில் ராஜஸ்தானை சேர்ந்த விஜேந்திர சிங்கிற்கு மட்டும் 58 அகவையாகிறது மற்றவர்கள் 38 அகவைக்கு உட்பட்டவர்கள். இதில், மகளிர் காங்கிரசை சேர்ந்த 28 பெண் தொண்டர்களும் பங்கேற்கின்றனர். இதுதவிர எந்த மாநிலத்தில் நடைபயணம் செல்கிறதோ, அந்த மாநில எல்லை வரை உள்ளூரைச் சேர்ந்த 100 பேர் ராகுல் காந்தியுடன் செல்கின்றனர்.

ராகுல் காந்தியுடன் நடைபயணத்தில் ஈடுபடுபவர்களுக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவர்களுக்கு உணவு, ஓய்வெடுக்க இடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் தயார் நிலையில் உள்ளன. இந்த நடைபயணத்தின் போது, காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில்நுட்பக் குழுவினர், முதன்மை நிகழ்வுகளை பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் உதய்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் முடிவு செய்யப்பட்டபடி, இந்தியாவுடன் பயணத்தை கன்னியாகுமரியில் இன்று புதன்கிழமை மாலையில் தொடங்குகிறார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. கன்னியாகுமரியில் தொடங்கும் இந்த பயணம், 150 நாட்களுக்குப் பிறகு காஷ்மீரில் நிறைவடையும் வகையில் திட்டமிடப்பட்டிருக்கிறது.

காங்கிரசைப் பொறுத்தவரை, வட இந்தியாவில் பல மாநிலங்களில் ஆட்சிக்கு வரும் நிலையிலோ, முதன்மை எதிர்கட்சியாகவோ இருந்தாலும், இந்த யாத்திரையை தமிழ்நாட்டில் இருந்து தொடங்க முடிவு செய்யப்பட்டிருப்பது மிகவும் முதன்மைத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

முப்பத்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாரதிய ஜனதா கட்சி,  நடத்திய தேர்ப்பயணம் சோம்நாத்தில் தொடங்கி அயோத்தியில் நிறைவுபெறும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இந்தப் பயணம் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இந்தியாவின் மையப் பகுதியில் செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த 5,000 ஆண்டுகளாக இந்திய சமூகம் சனாதன தர்மம் என்றழைக்கப்பட்ட ஏற்றத்தாழ்வுகளால் நிரப்பப்பட்டது. இந்த ஏற்றத்தாழ்வுகளை அன்றைய சமூகத்திற்கு மறுக்கத் தோணாத அறியாமை பேணும் வகைக்கு கல்வி மறுக்கப்பட்டிருந்து. 

இந்த ஏற்றத் தாழ்வுகளை நியாயப்படுத்த தெய்வங்களின் பெயரையும் மதத்தின் பெயரையும் சனாதனிகள் பயன்படுத்தி வந்தார்கள். அது ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியர் ஆளுமையில் பங்குபெற்ற இரட்டை ஆட்சியிலும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டே வந்தது. 

ஆனால், காந்தியார் அந்த ஏற்றத்தாழ்வுகளை ஏற்கவில்லை. மறுப்பு தெரிவித்தார். காந்தியார், 'தீண்டாமை ஒரு பெருங்குற்றம்' என்று முழங்கினார். காந்தியாரின் இந்த முழக்கத்தால் இந்தியாவில் பெரும் எழுச்சி ஏற்பட்டது. இந்திய விடுதலையில் ஆட்சியைப் பெற்ற, காந்தியை முதன்மைப்படுத்திய, காங்கிரஸ் கட்சி காந்தியாரின் மறுப்புகுரிய, சனாதன தர்மத்தை அரசியல் அமைப்புச் சட்டத்தில் அங்கீகரிக்கவில்லை. 

இப்போது 70 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஆர்.எஸ்.எஸ். துணிச்சலாக 'சனாதனம்' காப்பாற்றப்பட வேண்டும் என்கிறது, இந்தியா ஒரே நாடு, ஒரே கலாசாரம், ஓரே மொழி, ஒரே தெய்வ வழிபாட்டைக் கொண்டது என்கிறது.

இந்தியா ஒரு ஒன்றியம். பல மரபுகளின் கலவை. இந்தியாவில் 100க்கணக்கான மொழிகள் உள்ளன. தெய்வவழிபாட்டைப் பொறுத்தவரை பல நூறு பிரிவுகள் ஹிந்து மதத்திலேயே உள்ளன. இது இல்லாமல் கிறிஸ்தவம், இஸ்லாம், சைனம், சீக்கியம் என பல மதங்கள் உள்ளன என்கிற நிலையில்-

இந்தத் தவறான சனாதான நம்பிக்கையை தகர்க்கவே ராகுல் காந்தி இந்த நடைபயணத்தை தொடங்கியிருக்கிறார். எனவே ராகுல் மேற்கொண்டிருக்கும் இந்த நடைபயணம் என்பது புரட்சிகரமான, சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது. என்கிறார் காங்கிரசின் தமிழ்நாட்டுக் கிளையின் தலைவரான கே.எஸ். அழகிரி.

விடுதலைக்குப் பிறகு இந்தியாவில் நடத்தப்பட்ட இந்தவகைப் பயணங்கள், சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள் தங்களை வலுப்படுத்திக்கொள்ளும் நோக்கில் நடத்தியவை. ஆனால், இந்த பயணத்தின் நோக்கம் அதுவல்ல என்கிறது காங்கிரஸ் கட்சி.

இது அரசியல் பயணம் அல்ல. நாட்டை ஒற்றுமையாக்கும் பயணம். எப்படி இருந்த இந்தியாவை இப்படி ஆக்கிவிட்டார்களே என்று மக்களிடம் சுட்டிக்காட்டும் பயணம் என்கிறார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆனந்த் சிறீனிவாசன்.

துடுப்பாட்டத்தில் ஒருவர் பந்தை நழுவவிட்டால் அவரது மதத்தை வைத்து அவரை நையாண்டி செய்கிறார்கள். போன முறை பாகிஸ்தானிடம் இந்தியா தோற்றபோது முகமது சமியை நையாண்டி செய்தார்கள். ஆமிர் கான் நடித்த படத்தை புறக்கணிக்கச் சொல்கிறார்கள். இது போல விடுதலை இந்தியாவில் நடந்ததே இல்லை. இதைத்தான் சுட்டிக்காட்ட விரும்புகிறோம், என்கிறார் ஆனந்த் சிறீனிவாசன்.

இந்தப் பயணத்தின் மூலம் இந்தியாவின் பல்வேறு தரப்பினரின் மனநிலையைப் புரிந்துகொள்வதுதான் ராகுல் காந்தியின் நோக்கமாக இருக்கக்கூடும். இந்தப் பயணத்திற்கு முன்னேற்பாடாகவும் பல்வேறு தரப்பினரின் மனநிலையைப் புரிந்து கொள்ளும்விதத்திலும் 150க்கும் மேற்பட்ட மக்கள் குழுவினரை ராகுல் காந்தி சந்தித்துப் பேசியிருக்கிறார். என்றும் ஆனந்த் சிறீனிவாசன், மேலும் தெரிவிக்கிறார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,364.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.