Show all

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தை அழைத்துப் பாராட்டிய இஸ்லாமிய அமைப்பு

அகில இந்திய இமாம் அமைப்பின் தலைவர் உமர் அகமது இலியாசி, சுஹைப் இலியாசி, உடன்பிறப்புகள் தங்கள் தந்தையின் நினைவு நாள் கொண்டாட்டத்திற்கு, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தை, டெல்லியில் தங்கள் அமைப்பு இயக்கி வரும் மசூதிக்கு அழைத்துச் சிறப்பித்துள்ளனர். 

06,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5124: அகில இந்திய இமாம் அமைப்பு, என்றொரு இஸ்லாமிய அமைப்பு இந்தியாவில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் தலைவரான உமர் அகமது இலியாசியின் அழைப்பை ஏற்று, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், டெல்லியில் அந்த அமைப்பு இயக்கி வரும் மசூதிக்குச் சென்றார்.

அவரோடு, ஆர்எஸ்எஸ் அமைப்பின் இணை பொதுச் செயலாளர் கிருஷ்ண கோபால், பாஜகவின் முன்னாள் அமைப்புச் செயலாளரான ராம் லால், முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் அமைப்பின் புரவலரான இந்தரேஷ் குமார் உள்ளிட்டோர் மசூதிக்குச் சென்றனர். வெளியாட்களை அனுமதிக்காமல் இருதரப்பினரும் சுமார் ஒரு மணி நேரம் மசூதியில் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

பின்னர் இந்தச் சந்திப்பு குறித்து தெரிவித்த உமர் அகமது இலியாசி, 'எங்களது அழைப்பை ஏற்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், அகில இந்திய இமாம் அமைப்பின் அலுவலகத்திற்கு வருகை தந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் நமது நாட்டின் தந்தை. நான் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, தாஜ்வீதுல் குரான் மதரசாவை அவர் பார்வையிட்டார். அங்கு கல்வி பயிலும் மாணவர்களுடன் அவர் கலந்துரையாடினார். அப்போது, அவர் நமது மரபணு ஒன்றுதான் என்றும், வழிபாட்டு முறைதான் வேறானது என்றும் மோகன் பாகவத் கூறினார்' எனத் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பு குறித்து தெரிவித்த உமர் அகமது இலியாசியின் உடன்பிறப்பு சுஹைப் இலியாசி, 'எங்களின் தந்தையின் நினைவு தினத்தன்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வருகை தந்தது மிகப் பெரிய கவுரவம்; நாட்டிற்கு இது ஒரு நல்ல செய்தி' என குறிப்பிட்டார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,380.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.