Show all

ஈரானிலும், இந்தியாவிலும் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்! ஹிஜாப்புக்கு எதிராகவும், ஹிஜாப்புக்கு ஆதரவாகவும்

இஸ்லாமிய மத உடையான ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது ஈரானில். அங்கே ஹிஜாப்புக்கு எதிராக பெண்கள் போராடியதும்- இந்தியாவில் கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் ஹிஜாப் அணிந்து வந்ததால், சில மாணவிகள் வகுப்புக்குள் நுழையத் தடை செய்யப்பட்டதாகக் கூறப்படும் நிகழ்வு அங்கு சர்ச்சையை கிளப்பியிருப்பதும்- ஒன்றுக்கொன்று எதிராய் அமைந்துள்ளது- சிந்தித்தலுக்கு உரியதாகும்.

05,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5124: இஸ்லாமிய மதத்தை பின்பற்றும் நாடு ஈரான். இந்நாட்டில் பெண்கள் மற்றும் ஒன்பது ஆகவைக்கு மேற்பட்ட சிறுமிகள் இஸ்லாமிய மத உடையான ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

தலை மற்றும் முகத்தை மூடும் வகையிலான உடையான ஹிஜாப் அணிவது கடந்த 43ஆண்டுகளாக ஈரானில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனைகளும் வழங்கப்படுகிறது. 

இதனிடையே, அந்நாட்டின் குர்திஸ்தான் மாகாணம் சகிஸ் நகரை சேர்ந்த 22 அகவை மாசா அமினி என்ற இளம்பெண் தனது குடும்பத்துடன் கடந்த கிழமை தலைநகர் தெஹ்ரானுக்கு சென்றுள்ளார். ஈரானில் உடை தொடர்பான நெறிமுறைகளை கடுமையாக நடைமுறைப்படுத்தும் நெறிமுறை காவல் பிரிவு உலாக்காவல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. 

தெஹ்ரான் செல்லும் வழியில் மாசா அமினி மற்றும் அவர்களது குடும்பத்தினரை நெறிமுறை காவலர் இடைமறித்துள்ளனர். அப்போது, மாசா அமினி ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி அவரை நெறிமுறை காவலர் கைது செய்து கடுமையாக தாக்கியுள்ளனர். 

மாசா அமினி தனது தலைப்பகுதியை ஹிஜாப்பால் முழுமையாக மறைக்கவில்லை என கூறி அவரை கடுமையாக தாக்கி காவல் வாகனத்தில் ஏற்றியுள்ளனர். பின்னர், மாசாவை தடுப்பு காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு வைத்தும் மாசாவை காவலர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். காவலர்கள் தாக்கியதில் படுகாயமடைந்த மாசா காவல் நிலையத்தில் இருந்து சடுதிவண்டி மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாசா அமினியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் செயலற்ற நிலைக்கு சென்றுவிட்டதாக அறிவித்தனர். செயலற்ற நிலைக்கு சென்ற மாசா அமினிக்கு கடந்த சில நாட்களாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கபட்டு வந்த நிலையில் அவர் கடந்த சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

ஹிஜாப் சரியாக அணியாததால் காவலர் தாக்கியதில் செயலற்ற நிலைக்கு சென்ற இளம்பெண் மாசா அமினி உயிரிழந்த சோகம் ஈரானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், மாசா மாரடைப்பு காரணமாக தான் உயிரிழந்ததாக ஈரான் காவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி காவலர்கள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த மாசா அமினிக்கு ஆதரவாக ஈரானின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் வெடித்துள்ளது. மாசாவின் சொந்த ஊரான சஹிஸ் நகரம் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக் கிழமை முதல் ஹிஜாப்பிற்கு எதிராக பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

ஹிஜாப்பை கழற்றி எறிந்தும், ஹிஜாப்பை தீ வைத்து எரித்தும், தங்கள் தலைமுடியை வெட்டியும் பெண்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தங்கள் ஹிஜாப்பை எரிப்பது, தலைமுடியை வெட்டுவது, ஹிஜாப்பை கழற்றி எறிவதை காணொளியாக எடுத்து பல இஸ்லாமிய பெண்கள் தங்கள் சமூகவலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். 

அந்தக் காணொளிகள் தற்போது தீயாகி வருகிறது. ஈரானில் ஹிஜாப்பிற்கு எதிராக பெண்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவாக துருக்கியில் இஸ்லாமிய பெண்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதேபோல், கனடாவிலும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு பெருகி வருகிறது. ஹிஜாப்பிற்கு எதிரான போராட்டம் ஈரானில் தீவிரமடைந்துள்ள நிலையில் போராட்டம் மற்ற நாடுகளுக்கும் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்க்கது.

இதற்கு நேர்மாறான முன்னெடுப்பு இந்தியாவில் நிகழ்ந்து வருவது- ஒப்பிட்டு ஆய்வு முன்னெடுக்கத் தேவையானது ஆகும்.

கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் ஹிஜாப் அணிந்து வந்ததால், சில மாணவிகள் வகுப்புக்குள் நுழையத் தடை செய்யப்பட்டதாகக் கூறப்படும் நிகழ்வு அங்கு சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் மாணவிகள் சிலர், கல்லூரி விதிகளை மீறி ஹிஜாப் அணிந்து வந்ததே இதற்குக் காரணம் எனவும் சொல்லப்பட்டது.

குறிப்பிட்ட கல்லூரியில் சுமார் 70க்கும் மேற்பட்ட இஸ்லாமிய மாணவிகள் படிக்கின்றனர். பெண்கள் கல்லூரியில் ஹிஜாப் அணிய வேண்டும் என்று மாணவிகள் ஏன் வற்புறுத்துகிறார்கள் என்ற கேள்விக்கு, இந்தக் கல்லூரியில் நிறைய ஆண் ஆசிரியர்கள் இருக்கிறார்கள், வெளியிலிருந்து நிறைய பேர் நிகழ்ச்சிகளுக்காக வளாகத்துக்குள் வருகிறார்கள் என பதிலளித்துள்ளனர்.

கல்லூரி விதியில் ஹிஜாப் அணியத் தடை செய்யும் விதி இருந்ததாக நினைத்திருந்தோம். அப்படி இல்லை என அறிந்த பிறகே ஹிஜாப் அணியத் தொடங்கினோம் என்கிறார் மற்றொரு மாணவி.

மேலும், இதே கல்லூரியில் படித்த முன்னாள் மாணவிகள் வகுப்பறையில் ஹிஜாப் அணிந்திருப்பதாகவும் சிலர் கூறுகின்றனர். அது தொடர்பான புகைப்படங்கள் சில ஊடகங்களிலும் வெளியாகியுள்ளன. ஆனால் கல்லூரியின் 37 ஆண்டுக்கால வரலாற்றில் எந்த மாணவரும் வகுப்பறையில் ஹிஜாப் அணிந்ததில்லை என்று கூறி கல்லூரி அதிகாரிகள் இந்தக் கூற்றை மறுத்துள்ளனர்.

மாணவிகளின் பெற்றோருக்கும், கல்லூரி நிர்வாகத்துக்கும் இடையே பல சுற்று கலந்துரையாடல் நடத்தியும், பிரச்னைக்கு தீர்வுகாண முடியவில்லை. இந்தச் சிக்கல் படர்க்கை நிலையானதால், நாங்கள் கல்லூரி நிர்வாகத்துக்கு மன்னிப்பு கடிதம் எழுதவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று மாணவி ஒருவர் கூறுகிறார். இந்த விவகாரம் வெளியில் தெரியவந்ததிலிருந்து கல்லூரியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

உடுப்பியில் நடந்த போராட்டத்தை எதிர்ப்பதுபோல, சிக்மகளூர் மற்றும் தட்சிண கன்னடா மாவட்டங்களில் உள்ள இரண்டு கல்லூரிகளில் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாணவர்கள் கல்லூரிக்குள் காவித் துண்டு அணிந்து போராட்டம் நடத்தினர். இரு நிறுவனங்களிலும் உள்ள அதிகாரிகள் எதிர்ப்புகளுக்கு பதிலளிக்கும்விதமாக காவித் துண்டு மற்றும் ஹிஜாப்களை தடை செய்தனர்.

உடுப்பியில் உள்ள மகளிர் அரசுப் பல்கலைக்கழகத்தின் மாணவிகள், அந்த எதிர்ப்புப் போராட்டங்களுக்கும் தங்கள் கல்லூரியின் நிலைமைக்கும் சிறிதும் சம்பந்தம் இல்லை என்று கூறுகின்றனர். ஹிந்து மதத்தில் காவி அணிவது கட்டாயம் என்றால், அவர்கள் அதை அணியட்டும். எங்கள் கலாசாரத்தில், ஹிஜாப் அணிய வேண்டும், என்று மாணவி ஒருவர் கூறுகிறார்.

கல்லூரி முதல்வர் ருத்ரே கவுடா, வகுப்பு நேரத்திலும் வகுப்பறைக்குள்ளும் மட்டும் ஹிஜாப் அணிவதை கல்லூரி அனுமதிப்பதில்லை என்று கூறியிருந்தார். இது வகுப்பறைக்குள் வேற்றுமைகள் இல்லாமல் இருக்க உறுதி செய்வதற்காக விதிக்கப்பட்டது என்றும் கூறினார்.

கர்நாடக அரசு நடத்தும் கல்லூரிகளில் குறிப்பிட்ட ஆடைக் கட்டுப்பாடு எதுவும் இல்லை. ஆடைக் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பான முடிவுகளை கல்லூரி அதிகாரிகள் அல்லது அவர்களின் கண்காணிப்புக் குழுக்கள் முடிவு செய்யும். வகுப்புகளின்போது மாணவர்கள் அணியவேண்டிய ஆடைகள் குறித்து கண்காணிப்புக் குழுக்கள் இறுதி முடிவை மேற்கொள்ள அனுமதிக்கப்படும் என்று கர்நாடக கல்வி அமைச்சர் பி.சி.நாகேஷ் தெரிவித்துள்ளார்.

ஈரானின் முன்னெடுப்பிலும் சரி- இந்தியாவின் முன்னெடுப்பிலும்; சரி- சட்ட அமைப்பு, நிருவாகங்கள், அதிகாரிகளின் தன்முனைப்புத்;தனமான செயல்முறைகளே- மக்களுக்கு நிர்பந்தங்களை எதிர்க்கிற மனநிலையைக் கொடுத்துள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,379.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.