Show all

இன்று இந்தியக் குடியரசுநாள்!

தமிழ்நாட்டின் சார்பில், குடியரசுநாள் கொண்டாட்டத்தில், இந்த ஆண்டு பங்கேற்கும் ஒப்பனை ஊர்தி, தமிழ்நாட்டின் பண்பாடு, சமூக மாற்றத்தில் பெண்களின் பங்களிப்பை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு, இடம்பெற்றுள்ளது.

12,தை,தமிழ்த்தொடராண்டு-5124: இந்தியாவின் 74வது குடியரசுநாள் கொண்டாட்டம் இன்று புதன்கிழமை காலை 10.30 மணிக்கு டெல்லியில் உள்ள கர்தவ்ய பாதையில் நடைபெறுகிறது. இந்த ஆண்டு குடியரசுநாள் விழாவுக்கு சிறப்பு விருந்தினராக எகிப்திய அதிபர் அப்தெல்பத்தா கலந்து கொள்கிறார்.

தமிழ்நாட்டின் சார்பில் இந்த ஆண்டு பங்கேற்கும் ஒப்பனை ஊர்தி, சங்க காலம் தொட்டு சமூக வளர்ச்சி, மேம்பாடு மற்றும் சமூக மாற்றத்துக்கு உதவிய பெண்கள் வழங்கிய பங்களிப்பை நோக்கமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆத்திச்சூடி, கொன்றை வேந்தனை இயற்றிய ஒளவையார், கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக தீரத்துடன் போரிட்ட வீர மங்கை வேலுநாச்சியார் ஆகியோரின் உருவங்கள் ஒப்பனை ஊர்தியின் முகப்புப் பக்கத்தில் இடம்பெற்றுள்ளன.

மையப்பகுதியில் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமி, நாட்டிய கலைஞர் பாலசரஸ்வதி, அந்தக்காலத்திலேயே மருத்துவர்களாக இருந்த டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, மூவலூர் ராமாமிர்த அம்மையார், 105 அகவையிலும் வேளாண் துறையில் சாதித்து வரும் பாப்பம்மாள் ஆகியோரின் உருவங்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளன.

ஊர்தியின் பின்பகுதியில் தஞ்சாவூரில் சோழப்பேரரசர் இராசராச சோழன் கட்டிய கடவுள்கூறு http://www.news.mowval.in/Editorial/katturai/Base-399.html சிவன் கோவிலின் மாதிரி வடிவம் நிறுவப்பட்டுள்ளது. ஒப்பனை ஊர்தியுடன் கொம்பு மேளம், நாதஸ்வரம், தவில் வாசித்தபடி இசைக்கலைஞர்கள் செல்வதாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு குடியரசு நாள் விழாவில் தமிழ்நாட்டுக்கு பேரண்மைத்துவம் கிடைக்காத வகையில், தமிழ்நாடு ஒப்பனை ஊர்தி நிராகரிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. ஆனால், பாதுகாப்புத்துறை தேர்வுக்குழுவின் பரிந்துரைகளின்படி அலங்கார ஊர்தியின் அம்சங்கள் இல்லாததால் அந்த வாகனம் இறுதித் தேர்வில் பங்கேற்கவில்லை என்று விளக்கம் கொடுக்கப்பட்டது.

ஆனால், இந்திய விடுதலைப் போராட்டத்தின் தமிழ்நாட்டு வீரர்களை அங்கீகரிக்காமல் தேர்வுக்குழு அலைக்கழித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில், இந்த ஆண்டு தமிழ்நாட்டின் பண்பாடு, சமூக மாற்றத்தில் பெண்களின் பங்களிப்பை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒப்பனை ஊர்தி இடம்பெற்றுள்ளது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,505. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.