Show all

பில்கிஸ்பானு வழக்கில் 11 பேர் விடுதலை! ஒன்றிய அரசுக்கும், குஜராத் மாநிலஅரசுக்கும் உச்ச அறங்கூற்றுமன்றம் கவனஅறிக்கை

14 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்தவர்களுக்கு, சட்ட அடிப்படையில், குஜராத் அரசு தண்டனைக் குறைப்பு வழங்கியது. இதையடுத்து 11 பேரும் இரண்டு கிழமைகளுக்கு முன்பு விடுதலை செய்யப்பட்டனர். இதன் தொடர்பில், ஒன்றிய அரசுக்கும், குஜராத் மாநில அரசுக்கும் விளக்கம் கேட்டு உச்ச அறங்கூற்றுமன்றம் கவனஅறிக்கை அனுப்பியுள்ளது.

10,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: ஒன்றிய அரசுக்கும், குஜராத் மாநில அரசுக்கும் விளக்கம் கேட்டு உச்ச அறங்கூற்றுமன்றம் கவனஅறிக்கை அனுப்பியுள்ளது- பில்கிஸ் பானு வழக்கில் 11 பேர் விடுதலை செய்யப்பட்ட முன்னெடுப்பு தொடர்பாக

இருபது ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்தில் கோத்ரா தொடர்வண்டி எரிப்பு வன்முறைக்குப் பிறகு ஏற்பட்ட கலவரத்தின்போது, கருவுற்று தாய்மை கனவில் இருந்த பில்கிஸ் பானு, ஒரு கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அவரது குழந்தை உட்பட குடும்பத்தினர் 7 பேர் அந்த கும்பலால் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வன்கொடுமை பெரும் அதிர்வுகளை உண்டாக்கியது. 

ஆறு ஆண்டுகள் நடைபெற்ற இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 14 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த இவர்களுக்கு, 1992-ம் ஆண்டு தண்டனைக் குறைப்பு கொள்கையின் கீழ், குஜராத் அரசு தண்டனைக் குறைப்பு வழங்கியது. இதையடுத்து 11 பேரும் இரண்டு கிழமைகளுக்கு முன்பு விடுதலை செய்யப்பட்டனர்.

இதற்கிடையில், 11 பேருக்கும் குஜராத் அரசு தண்டனைக் குறைப்பு வழங்கியதற்கு எதிராக மார்க்சிஸ்ட் பிரமுகர் சுபாசினி அலி உள்ளிட்ட 3 பேர், உச்ச அறங்கூற்றுமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், வழக்கறிஞர் அபர்ணா பட் ஆகியோர் அணியமாகினர். இந்த வழக்கு உச்ச அறங்கூற்றுமன்ற தலைமை அறங்கூற்றுவர் என்வி ரமணா, அறங்கூற்றுவர்கள் அஜய் ரஸ்தோகி, விக்ரம் நாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னர் விசாரணைக்கு வந்தது.

அப்போது அறங்கூற்றுவர் என்.வி.ரமணா, 'பில்கிஸ் பானு வழக்கில் 11 பேரையும் விடுதலை செய்ய உச்ச அறங்கூற்றுமன்றம் உத்தரவிடவில்லை. பில்கிஸ் பானு வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களில் ஒருவர் தண்டனைக் குறைப்பு கோரி உச்ச அறங்டகூற்றுமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அவர் தண்டிக்கப்பட்டபோது நடைமுறையில் இருந்த, 1992-ம் ஆண்டு தண்டனைக் குறைப்பு கொள்கையின் கீழ் அவரது மனுவைப் பரிசீலிக்குமாறு குஜராத் அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கில் ஒன்றிய அரசும், குஜராத் அரசும் உரிய பதிலளிக்குமாறு கவனஅறிக்கை அனுப்ப உத்தரவிடுகிறோம்' எனத் தெரிவித்தார்.

வழக்கு விசாரணை 2 கிழமைகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகள் விடுதலையை எதிர்த்து உச்ச அறங்கூற்றுமன்றத்திற்கு இதுவரை 6000-க்கும் மேற்பட்டோர் கடிதம் அனுப்பியிருந்தனர். 

அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உச்ச அறங்கூற்றுமன்ற முன்னாள் அறங்கூற்றுவர் உமேஷ் செல்வி, பில்கிஸ் பானு வழக்கில் தண்டனை குறைப்பு சட்டப்பாடானதாக இருந்தாலும் அது நியாயமானதா? என்று கேள்வியெழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

பில்கிஸ் பானுவுக்கு எதிரான வன்முறையும், தற்போதைய பதினோரு பேர்களின் விடுதலையும் குறிப்பிட்ட குழுவினரின் அரசியலாக இருப்பது- சட்டப்படியான விடுதலை நடைமுறையின் மீதான ஆதரவு நிலைப்பாட்டில், பொதுப்பார்வையாளர்களுக்கான அறநெருக்கடி ஆகும்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,352.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.