Show all

வியந்து பார்க்கிறது சமூகவலைதளம் உலகளாவி! யார் இந்த பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன்

தமிழ்நாடு நிதிஅமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் அவர்களின், அறைகூவலான, உறுதியான, சமூக அக்கறை மிகுந்த பேச்சை- உலகளாவி சமூக வலைதள ஆர்வர்கள் பலரும் வியந்து பாராட்டி வருகின்றனர்.

08,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: கடந்த சில நாட்களுக்கு முன்பு, உபி சென்ற தலைமைஅமைச்சர் மோடி, தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அரசியல் கட்சிகள் இலவச திட்டங்களை அறிவிக்கும் கலாசாரம் ஆபத்தானது, அதனை நாட்டிலிருந்து அகற்ற வேண்டும் என்று- இந்தியாவில் வளர்ந்த மாநிலங்களான, மாநிலக் கட்சிகள் மட்டுமே ஆளும் மாநிலங்களுக்கு எதிராகப் பொருமியிருந்தார். 

கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு, இந்தியா டுடே நிகழ்ச்சி தொகுப்பாளரிடம் தமிழ்நாடு நிதிஅமைச்சர், பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசும்போது, இலவசங்களை தரக்கூடாது என்று சட்டத்தில் சொல்லவில்லையே. அவ்வாறான நிலையில், அப்படித் தரக்கூடாது என்று சொல்பவர்கள் துறை வல்லுனர்களாக இருக்க வேண்டும். அதாவது பொருளாதாரத்தில் நோபல்பரிசு அல்லது மெய்யியல் முனைவர் அல்லது இந்த துறைகளில் எங்களை விட சிறந்தவர் என்பதற்கான ஆதாரமாவது இருக்க வேண்டும். ஒருவேளை, எங்களை விட உங்களின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்தால் எங்களுக்கு நீங்கள் அறிவுரை சொல்லாம். இப்படி எந்தத் தரவுமே இல்லாதபோது உங்கள் பேச்சை நாங்கள் ஏன் கேட்க வேண்டும்? என்று ஒரு போடு போட்டிருந்தார். 
மேலும் தென்னாடே முதன்மை (சவுத் பர்ஸ்ட்) என்ற ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், அறங்கூற்றுமன்றம் அரசின் கொள்கை முடிவுகளில் ஏன் தலையிட வேண்டும்? இலவச திட்டங்களுக்கு எதிரான விவாதம் என்பதே பொருளற்ற ஒன்றுதான் என்றும் தெரிவித்திருந்தார்.

மக்களின் பணத்துக்கு உச்சஅறங்கூற்றுமன்றத்தைப் பாதுகாவலராக அரசியலமைப்பு சட்டம் சுட்டிக்காட்டவே இல்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பேராளர்கள் மக்கள் பணத்தை எப்படி செலவு செய்வது என்று சட்டமன்ற, நாடாளுமன்றத்தில் முடிவு செய்வார்கள். என்றும் கூறியிருந்தார். 

இந்த அறைகூவலான, உறுதியான, சமூக அக்கறை மிகுந்த பேச்சை- உலகளாவி சமூக வலைதள ஆர்வர்கள் பலரும் வியந்து பாராட்டி வருகின்றனர். அவற்றில் சில:- 

பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் சொல்வதில் எவ்விதத் தவறும் இருப்பதாக தெரியவில்லை. அறங்கூற்றுவர்கள் கட்சி சார்புடையோராக இருக்க முடியாது. மக்களின் வரிப்பணத்தில் இருந்து மக்களுக்கு தரப்படும் எதுவும் இலவசமாகாது. கட்டணமில்லாமல் மக்களுக்கு மின்சாரம் வழங்குவது என்பது பொருளாதார முன்னேற்றத்திற்கான நடவடிக்கையாக மட்டுமே பார்க்க வேண்டும். பெரு முதலாளிகளுக்கு கோடிக்கணக்கில் வரிப்பணத்தை தள்ளுபடி செய்வதை விட இது ஒன்றும் இழிவு கிடையாது. 

நீங்கள் மட்டும்தான் புத்திசாலியா என்று தலைமைஅறங்கூற்றுவர் கேட்கும் வகைக்கு கருத்து புத்திசாலிகள் என்று எங்குமே பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் சொல்லவில்லை. எங்களை விட திறமையாக செயல்பட்டிருந்தால் அந்த தரவுகளை தாருங்கள் என்றுதானே கேட்டார்? 

சட்டத்தின் மூலமே தீர்வு வேண்டுமென நினைப்பவர்கள், இந்திய தண்டனை சட்டத்தின்படி, அரசியல் சாசனம் என்ன சொல்லியிருக்கிறதோ, அதன் அடிப்படையில் தீர்ப்பு வேண்டுமே தவிர மனுநீதி அடிப்படையில் கிடையாது. நாங்கள் புத்திசாலி இல்லைதான். ஏனென்றால், குஜராத்திற்கு ட்ரம்ப் வந்தபோது, துணியைகட்டி ஸ்கிரீன் போட்டு மறைக்கும் அளவுக்கு புத்திசாலித்தனங்கள் எங்களிடமில்லை 

எதையும் வெளிப்படையாக செய்யும் நேர்மையும் துணிவு மட்டுமே இந்த மாநில ஆட்சியில் உண்டு. பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் சட்டம் பற்றி, அறிவுரை சொன்னால் உங்களுக்கு கோபம் வருகிறது. ஆனால், பிடிஆருக்கு பொருளாதாரம் பற்றி நீங்கள் அறிவுரை சொன்னால் கோபம் வரவில்லையே ஏன்? தரவு தாருங்கள் என்று மென்மையாகத்தானே கேட்டார்? மக்கள் பேரளார் அவைகளில், அதிகாரப்பாடாக இயற்றப்படும் சட்டங்களே எப்போதும் ஒரு நாட்டை நிர்மாணிக்கின்றன. வளர்ச்சியை தீர்மானிக்கின்றன. அந்த வகையில் தமிழ்நாட்டின் நிதியமைச்சர் சட்டத்திற்குட்பட்டு கருத்துகூற முழு உரிமையையும் நாட்டின் அரசியல் சாசனம் வழங்கியிருக்கிறது... 

2022 க்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்னவானது? 2022 க்குள் அனைவருக்கும் சொந்த வீடு என்னவானது? டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 40 என்னவானது? இதெல்லாம் சொன்னது யார்? உயிர்வளி கொண்டுதருதலைச் சரியாக செய்யாமல், மக்களை குவியல் குவியலாக இறந்து, சுடுகாட்டில் 'அரங்கு நிறைந்தது' பதாகை மாட்டியது யார்? என்ற கேள்விகளுடன் ஆதரவு கருத்துக்கள் குவிகின்றன. 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,350.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.