Show all

ஜியோ வெடித்த பட்டாசு! மடியைப் பிடித்து மாங்காய் போட்ட ஜியோ, குடுமியை பிடித்து காசு கேட்கும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

ஜியோ எண்ணிலிருந்து மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்குப் பேச தனிக் கட்டணம் அறிவித்து தீபவளிக்கு முன்னோட்டமாக பட்டாசை கொளுத்திப் போட்டிருக்கிறது ஜியோ.

22,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: மடியைப் பிடித்து மாங்காய் போட்டு, மற்றவன் மாங்காய் வியாபாரத்தையெல்லாம் ஊத்தி மூடிய பிறகு, மாங்காய் வாங்கினவன் குடுமியைப் பிடித்து காசு கேட்ட வணிகம் போல, ஜியோ தன் வணிகத்திற்கு சொல்லும் ஒரு புதுக் கதை இது.
கதை கதையாம் காரணமாம்
காரணத்தில் ஒரு தோரணமாம்
தோரணத்தில் ஒரு துக்கடாவாம்
துக்கடாவில் கொஞ்சம் வைக்கோலாம்
வைக்கோல எடுத்து மாட்டுக்குப் போட்டா
மாடு பால் கொடுத்ததாம்
பாலைக் கொண்டுபோய் கடையில ஊத்துனா
கடைக்காரன் தேங்காய் கொடுத்தானாம்
தேங்காய் ஒடைக்க கல்லுக்குப் போனா
கல் எல்லாம் பாம்பாம்
பாம்ப அடிக்கத் தடியத் தேடினா
தடி எல்லாம் சேறாம்
சேறு கழுவ ஆத்துக்குப் போனா
ஆறெல்லாம் மீனாம்
மீனப் புடிக்க வலைக்குப் போனா
வலை எல்லாம் ஓட்டையாம்
ஓட்டைய அடைக்க ஊசிக்குப் போனா
ஊசிக்காரன் ஊருக்குப் போயிட்டானாம். 
போன தலைமுறையில் ஓயாமல் கதை கேட்கும் குழந்தைகளுக்கு இப்படி கதை சொல்லி சிரிப்பூட்டி சமாளிப்பார்கள் தாத்தா பாட்டிகள்.

இனி மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்குப் பேச ஜியோவில் கட்டணம் செலுத்த வேண்டுமாம். அதாவது நிமிடத்திற்கு ஆறு காசுகள்.
 
ஜியோ எண்ணிலிருந்து மற்ற மற்ற தொலைத் தொடர்பு நிறுவனத்திற்கு அழைக்க கட்டணம் வசூலிக்கப்படும் என்று ரிலையன்ஸ் அறிவித்துள்ளது. இந்த கட்டணத்திற்கு ஈடாக கூடுதல் தரவு வழங்குமாம். (காசு கொடுத்து வாங்குகிற தரவையே நூற்றுக்கு தொன்னூற்று ஒன்பதுபேர்கள் முழுமையாகப் பயன்படுத்துவது இல்லை)

ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று முதல் கட்டணஏற்றம் செய்யும் அனைத்து ஜியோ வாடிக்கையாளரும் மற்ற தொலைத் தொடர்புக்கு அழைக்கும் போது நிமிடத்திற்கு 6 காசுகள் வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

மேலும், இந்த கட்டணம் தரை அழைப்புகளுக்கு அழைக்கவோ, மற்ற ஜியோ எண்ணுக்கு அழைக்கவோ கட்டணம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு ஜியோ சொல்லும் கதை: உள்வரும் அழைப்பு, வெளிசெல்லும் அழைப்பு, தவறிய அழைப்புகளுக்கு மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு கட்டணம் செலுத்துகிறதாம் ஜியோ. (அந்த மாதிரி, மற்ற நிறுவனங்களும் உங்களுக்கு கட்டணம் செலுத்துவார்கள் தானே)

இந்தக் கட்டணம் முறையை இல்லாமல் ஆக்க இந்தியத் தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்திடம் ஜியோ வலியுறுத்திவருகிறதாம். அதனை மறு பரிசீலனை செய்யும்வரை இந்த கட்டண முறை அமலில் இருக்கும் என்று தெரிவித்துள்ளது. 

இதன்படி, 84 நாட்களுக்கு அன்றாடம் 1.5ஜிபி தரவுக்கும் எல்லையில்லா அழைப்புகளுக்கும் 399 கட்டணம் செலுத்துகிறவர்கள் இனி ஜியோவுடன் மட்டுந்தாம் பேச முடியும். மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களுடன் பேச நமது கணக்கில் தனியாக காசு போட்டுக் கொள்ள வேண்டும். 
ரூ. 10க்கு  124 நிமிடங்கள் மற்;ற தொலைத் தொடர்பு நிறுவனங்களுடன் பேசிக் கொள்ளலாம்.  1 ஜிபி தரவு கூடுதலாகத் தரப்படுமாம்.
ரூ. 20க்கு  249 நிமிடங்கள் மற்;ற தொலைத் தொடர்பு நிறுவனங்களுடன் பேசிக் கொள்ளலாம்.  2 ஜிபி தரவு கூடுதலாகத் தரப்படுமாம்.
ரூ. 50க்கு  656 நிமிடங்கள் மற்;ற தொலைத் தொடர்பு நிறுவனங்களுடன் பேசிக் கொள்ளலாம்.  5 ஜிபி தரவு கூடுதலாகத் தரப்படுமாம்.
ரூ. 100க்கு  1362 நிமிடங்கள் மற்;ற தொலைத் தொடர்பு நிறுவனங்களுடன் பேசிக் கொள்ளலாம்.  10 ஜிபி தரவு கூடுதலாகத் தரப்படுமாம்.

மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களும் கிடைத்தது பரிசு என்று, விரைவில் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு கதை சொல்லக் கூடும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,300.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.