Show all

யார் குற்றவாளி! குடியால் விளைந்த சோகம்: திருமணமாகி 25 நாட்கள் தான்; மகனை கொலை செய்த தந்தை.

தேனி மாவட்டம் பூதிப்புரம் பகுதியில், குடித்துவிட்டு வந்து தகராறு செய்த மகனை தந்தை குத்திக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

22,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தேனி மாவட்டம் பூதிப்புரம் அருகே உள்ள கோட்டைமேட்டுத் தெருவை சேர்ந்தவர் தங்கராஜ். அகவை 59. இவருக்கு, 2 மகன்கள் உள்ளனர். அதில் மூத்த மகனான மலைச்சாமிக்கு கடந்த 25 நாட்களுக்கு முன்பு தான், ஜோதி என்ற பெண்ணோடு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், மலைச்சாமி தினமும் குடித்து, தனது மனைவி ஜோதியோடு தகராறு செய்து வந்துள்ளார். இதனால் ஜோதி கோபித்துக்கொண்டு, தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதேபோன்று சம்பவத்தன்றும், மலைச்சாமி குடித்துவிட்டு வந்து தந்தை தங்கராஜிடம் பணம் கேட்டு சண்டை போட்டுள்ளார். இந்த தகராறு முற்றிய நிலையில், தங்கராஜ் தனது மகனை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டார்.

குடித்துவிட்டு வந்து தகராறு செய்த மகனை தந்தை குத்திக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து மலைச்சாமியின் மனைவி ஜோதி காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த தங்கராஜை கைது செய்தனர்.

தமிழ்க் குடும்ப அமைப்புமுறை ஐயாயிரம் ஆண்டுக்கு மேற்பட்ட பழமைக்குரியது. குடும்பத்தில் பிள்ளைகளைச் சான்றோர்களாக வளர்த்தெடுப்பதற்கான பொறுப்பை பெற்றோர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிற கொள்கைப்பாட்டை தமிழ்க் குடும்பம் கட்டமைத்திருக்கிறது. இன்றைக்கு நாம் ஏற்றுக் கொண்டிருக்கிற சட்டசமுக அமைப்பு தன் அங்கமாக கருத வேண்டிய குடும்பங்கள்மீது எந்தப் பொறுப்பும் இல்லாமல்,
அனைத்துக் குற்றப்பின்னனிகளுக்கும் பயிற்றுக் களமாக இருக்கிற சாராயக் கடைகளை நடத்திக் கொண்டிருக்கிறது. இதனால் தமிழ்க் குடும்பங்களுக்கு தம்பிள்ளைகளை இற்றைச் சமுதாய அமைப்பில் இருந்து காப்பாற்றி சான்றோர்களாக வளர்த்தெடுப்பது கூடுதல் சுமையாக இருக்கிறது. சட்டசமுக அமைப்பை தமிழ்க் குடும்ப அமைப்பைப் போல பொறுப்புள்ளதாக கட்டமைக்க தமிழ்ச் சான்றோர் பெருமக்கள் முன்வர வேண்டும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,300.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.