Show all

தமிழர் குறித்து தாங்கள் புரிந்துகொண்டிருப்பதை கமலும் இராகுலும் பரிமாறிக் கொண்டது

டெல்லியில் இராகுல் காந்தியை கமல்ஹாசன் சந்தித்து உரையாடினார். அந்த உரையாடலின் தமிழ்மக்கள் குறித்த நெகிழ்ச்சியான பட்டறிவுப் பறிமாறலை இங்கு காணலாம். 

19,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5124: தமிழக மக்கள் எப்போதும் அன்பை வெளிப்படுத்தும் விதம் தன்னை வியக்க வைப்பதாகவும், அது ஏன் எனவும் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் இராகுல் காந்தி கேட்ட கேள்விக்கு, கமல் அளித்திருந்த விடை, தமிழ்மக்கள் குறித்த கமலின் பார்வையை விளக்குவதாக உள்ளது.

இராகுல் காந்தியின் இந்தியாவுடன் என்கிற நடைப்பயணத்தில் நடிகரும், மக்கள் நீதி மய்ய கட்சித் தலைவருமான கமல்ஹாசன் அண்மையில் கலந்து கொண்டார். 

டெல்லியில் இராகுல் காந்தியை கமல்ஹாசன் சந்தித்து உரையாடினார். அந்த உரையாடலின் சிலவற்றை இங்கு காணலாம். 

இராகுல் காந்தி: கமல், உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. எனது நடைப்பயணத்தில் கலந்துகொண்டதற்கு நன்றி. 
கமல்ஹாசன்: நன்றி எனக் கூறாதீர்கள். ஒரு இந்தியக் குடிமகனாக நாட்டில் நடப்பவற்றை பார்த்து எனக்குள் எழும் கோபத்தை வெளிப்படுத்த வேண்டியது எனது கடமை என தோன்றியது. வியர்வையும், கண்ணீரும் நிறைந்த பார்வையில் நீங்கள் நடந்திருக்கிறீர்கள். எனவே, நான் உங்களுடன் சேர்ந்து நடக்கவில்லை எனில் அது நியாயமாக இருக்காது. 

இராகுல்: இந்தியாவில் நடப்பதை எப்படி பார்க்கிறீர்கள்? வட இந்தியாவின் பார்வையை விட தென் இந்தியாவின் பார்வை மாறுபாடாக இருக்கிறதே. 

கமல்: ஆம், மாறுபாடாகத்தான் இருக்கிறது. அதே சமயம், தலைநகர் டெல்லியும், அசாமும், மேகாலயாவும் கூட தமிழ்நாட்டின் பார்வையை தாம் கொண்டிருக்கின்றன. நாம் வரலாற்றை மறந்து தற்போது நடப்பதை மட்டுமே எண்ணி கோபம் கொள்கிறோம். நான் தற்போது காந்தியடிகள் குறித்து அதிகம் பேசுகிறேன். ஆனால் முன்பு அப்படி இல்லை. காந்தியடிகளை மிகவும் விமர்சித்திருக்கிறேன். என் அப்பா ஒரு காங்கிரஸ்காரர். ஆனால், அவர் பெரிதாக ஒன்றும் சொல்ல மாட்டார். வரலாற்றை படி என்பார். எனது 24, 25 அகவையில்தான் காந்தியாரைப் பற்றி தெரிந்து கொண்டேன். அதையடுத்து, இப்போது வரை அவரது மிகப்பெரிய நயவனாகி விட்டேன். 

இராகுல்: தமிழ்நாட்டையும் தமிழ் மக்களையும் விரும்பும் ஒருவனாக இருக்கிறேன். தமிழ்நாட்டுக்கு செல்லும் போதெல்லாம் அங்குள்ள மக்களை இன்னும் சிறப்பாக புரிந்துகொள்ள முயல்வேன். உண்மையில் தமிழர்களின் கருத்து என்ன? தமிழர்களின் உணர்வு எப்படிப்பட்டது? 

கமல்: மகாராஷ்ட்ராவை சேர்ந்த ஒருவருக்கு இருக்கும் உணர்வுதான் தமிழர்களுக்கும் உள்ளது. அதுபோலதான் தெலுங்கர்களும், மலையாளிகளும். நம் அனைவருக்கும் அந்த பெருமை உண்டு. ஆனால், தமிழ்நாட்டை பற்றி இங்கு நான் கூற வேண்டும். மற்றவர்கள் இதை ஒரு தனித்தீவாக பார்க்கிறார்கள். குறுகிய மனப்பான்மை மற்றும் மொழி வெறி பிடித்தவர்களாக பார்க்கப்படுகிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் ஏதேனும் ஒரு ஊருக்கோ, நகரத்துக்கோ சென்று நேரு அல்லது போஸ் என அழைத்து பாருங்கள். உறுதியாக ஒரு கறுப்பு மனிதர் திரும்பிப் பார்ப்பார். ஆனால், அவர்களுக்கும், நேருவுக்கும் போசுக்கும் எந்த உருவ ஒற்றுமையும் இருக்காது. பல காந்திகளையும் அங்கு பார்க்க முடியும். அதுதான் தமிழ்நாட்டு மக்களின் உணர்வு. ஏதோ ஒரு கட்டத்தில் ஒன்றிய அரசு தங்களை புறக்கணிப்பதாக தமிழர்கள் உணர்ந்தார்கள். தற்போது நடப்பதும் அதுதான். ஆனால் அது நிரந்தரம் அல்ல. தற்போது நீங்கள் செய்வதை போல இதை அணுக வேண்டும். 

இராகுல்: தமிழ்நாட்டு மக்கள் அன்பை காட்டும் விதம் மிக வேறுபாடாக இருக்கிறது. மிகவும் மாறுபட்ட முறையில் உணர்ச்சிப்பூர்வமாக தமிழ்நாட்டு மக்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்துகிறார்கள். தமிழ்நாட்டுக்கு செல்லும் போதெல்லாம் என் மீது மக்கள் இப்படி அன்பு செலுத்துவை உணர்ந்து வியந்திருக்கிறேன். இதற்கு என்ன காரணம்? 

கமல்: இது கலாச்சாரத்தின் ஒரு பகுதி. மிகப் பழமையான ஒரு கலாச்சாரம். தமிழ்நாட்டு மக்கள் பல யுத்தங்களையும், போர்களையும் கண்டுள்ளனர். சமன மற்றும் புத்த மதங்களில் இருந்தும் பலவற்றை கற்றுள்ளனர். அது அனைத்தும் சேர்ந்த கலவைதான் இது. இதுபோன்ற அன்பை காமராசர், எம்ஜிஆர் போன்ற தலைவர்களும் பட்டறிந்துள்ளனர். தங்கள் தலைவனை காணும் போது மக்கள் கண் கலங்குவதும் குதூகலிப்பதும் நடக்கும். 

இராகுல்: தமிழ் மொழியும் தமிழ்நாட்டு மக்களுக்கு மிக முதன்மையானது தான் அல்லவா? 

கமல்: ஆம், முதன்மையானதுதான். தமிழ்நாட்டில் தெய்வ வழிபாடுகளை நம்பாத நாத்திகர்கள் கூட தமிழை போற்றி வணங்குவதை நீங்கள் பார்க்க முடியும். இவ்வாறு அந்த உரையாடல் நீள்கிறது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,482.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.