Show all

புத்தகவிரும்பிகள் குதூகலம் கொண்டாட! 22,மார்கழி முதல் 08,தை வரை சென்னையில் புத்தகக்காட்சி

இந்தாண்டு புத்தகக் காட்சியின் கூடுதல் சிறப்பாகக் கருதப்படுவது, தை 2,3,4 நாட்களில் நடைபெறவிருக்கும் பன்னாட்டுப் புத்தகக் காட்சி. 40-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு அரங்குகள் இதில் இடம்பெறவுள்ளன. 

18,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5124: தைப்பொங்கல் வந்தாலே  புத்தக விரும்பிகளுக்குக் குதூகலம் தொடங்கிவிடும். காரணம் ஒவ்வொரு ஆண்டும் பொங்கலையொட்டி சென்னையில் முன்னெடுக்கப்படும் புத்தகக் காட்சி ஆகும். 

புதினம், இயல்அறிவு (சயின்ஸ்), நலங்கு, சிந்தனை எனப் பல்வேறு துறை சார்ந்த லட்சக்கணக்கான புத்தகங்கள், எண்ணூறு அரங்குகள், அன்றாடம் நடைபெறும் இலக்கிய மன்றங்கள், கண்காட்சிகள், சொற்பொழிவு என்று களைகட்டும் தென்னிந்திய புத்தகப் பதிப்பாளர் வெளியீட்டாளர் சங்கத்தின் புத்தகக் காட்சி, இம்முறை வரும் 22,மார்கழி முதல் 08,தை வரை (6.01.2023- 22.01.2023) வரை நடைபெறுகிறது.

இந்தாண்டு புத்தகக் காட்சியின் கூடுதல் சிறப்பாகக் கருதப்படுவது, தை 2,3,4 நாட்களில் நடைபெறவிருக்கும் பன்னாட்டுப் புத்தகக் காட்சி. 40-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு அரங்குகள் இதில் இடம்பெறவுள்ளன. புத்தகக் காட்சியின் தொடக்க விழா நிகழ்வில் நடப்பு ஆண்டிற்கான முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருதினையும், சிறந்த பதிப்பாளர்களுக்கான விருதையும், பபாசி விருதுகளையும் முதல்வர் வழங்க இருக்கிறார்.

தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் படைப்பாளிகளுக்கு மிகப்பெரும் ஊக்கமாக இருக்கும் புத்தகக் காட்சி மட்டுமல்லாது, அண்மையில் எழுத்தாளர்களுக்கு வீடு ஒதுக்கியது, போற்றத்தகுந்த ஆளுமைகளுக்கான 'தகைசால் தமிழர் விருது' பல்வேறு இலக்கிய விருதுகள், நூலகங்களில் சிறப்புக் கவனம், அகழ்வாராய்ச்சிக்கு முதன்மைத்துவம் என்று தமிழ் வளர்ச்சி தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளைத் தமிழக அரசு எடுத்துவருகிறது.

இந்த நடவடிக்கைகள் குறித்து முன்னணி தமிழ் எழுத்தாளர்களான எஸ்.ராமகிருஷ்ணன் மற்றும் இமையம் ஆகியோர் பேசுகின்றனர். சாகித்ய அகாடமி விருது வென்ற இவ்விரு எழுத்தாளர்களுக்கும் தமிழ்நாடு அரசு வீடு வழங்கி சிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பன்னாட்டுப் புத்தகக் காட்சியில் பன்னாட்டு எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், இலக்கிய முகவர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்களைப் பங்குபெற அழைத்திருக்கிறார்கள். இதன்மூலம், தமிழில் உள்ள சிறந்த நூல்கள் பன்னாட்டு மொழிகளில் பல நாடுகளைச் சென்றடையும் என்று தெரிவிக்கப்படுகிறது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,481.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.