Show all

பீதியில் மக்கள்! புதியதாக வெளியிடப் பட்ட ரூ2000 தாளும் செல்லாமல் போகப் போகிறதா

நடப்பு நிதியாண்டில் ஒரு 2000 ரூபாய் தாள் கூட அச்சிடப்படவில்லை என்று கட்டுப்பாட்டு வங்கி தெரிவித்த நிலையில், ரூ.2000 தாள்கள் கூடிய விரைவில் செல்லாமல் போகும். என்ற பீதி சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கி விட்டன.

03,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: மக்களின் உழைப்பின், உற்பத்தி ஆதாயத்தின் மாற்று மதிப்பாக (தங்கத்தை இருப்பு வைத்துக் கொண்டு) பணத்தாளை அச்சிடும் பொறுப்பை உலகின் ஒவ்வொரு நாட்டின் அரசும் ஏற்றிருக்கின்றன. அந்தப் பணத்தாள் கிழிந்து இரண்டு மூன்று துண்டானாலும் அதனை ஏற்று மாற்றுப் பணத்தாள் வழங்குவது ஒவ்வொரு அரசின் கடமையாகும்.  

ஆனால் இந்திய வரலாறு கண்டிராத வகையில், தீடீரென இரண்டு மூன்று மணி நேரங்களுக்கு முன்னால், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, நாட்டில் புழக்கத்திலிருந்த 1000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் தாள்கள் செல்லாது என இந்தியாவை ஆளும் பொறுப்பு கிடைக்கப் பெற்றிருந்த பாஜக அரசின் தலைமைஅமைச்சர் மோடி அறிவித்தார். 
இதனால் அஞ்சறைப் பெட்டியில், பெண்கள் சேமித்திருந்த பணமெல்லாம் வெளியாகி, பெண்களின் சேமிப்புப் பழக்கமே முடமாக்கப்பட்டதன் வரலாற்றுப் பிழைக்கு மோடி காரணமாகி, அதிகார- ஆணவத்தின் அடையாளமாய் என்றென்றும் நிறுத்தப் படுவார் என்பது உண்மை.

பணம் வழங்கும் இயந்திரங்களிடம் மக்கள் பலமணி நேரம் காத்திருந்ததும், நூற்றுக்கும் மேலானோர் மரணித்ததும் பாஜக அரசின் பணமதிப்பிழப்பு தந்த சோகம். 

இந்த நிலையில் அந்த பணமதிப்பிழப்பு தொகைகளுக்கு மாற்றாக புதிய 2000 ரூபாய் தாளை அச்சிட்டு வெளியிட்டு வருகிறது இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி. அண்மைக்காலமாக அந்த இரண்டாயிரம் ரூபாய் தாளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், சில நாட்களுக்கு முன்பு தகவல் பெறும் உரிமை ஆணையத்தின் மூலம் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு நடப்பு நிதியாண்டில் ஒரு 2000 ரூபாய் தாள் கூட அச்சிடப்படவில்லை என்று கட்டுப்பாட்டு வங்கி தெரிவித்திருந்தது. இதனால், ரூ.2000 தாள்கள் கூடிய விரைவில் செல்லாமல் போகும். எனவே, உடனடியாக வங்கிக்குச் சென்று மாற்றிக் கொள்ளுங்கள் என்பது போன்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கி விட்டன.

இதை சாக்காக வைத்துக் கொண்டு சிலர், கூடிய விரைவில் புதிய 1000 ரூபாய் தாள் வெளியிடப்படும் என்றும் அதன் புகைப்படங்கள் எனச் சில 1000 ரூபாய் குழந்தைகள் விளையாட்டு ரூபாய் தாளின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பலர் பகிர்வு செய்தும், மக்களை பீதியடையச் செய்யும் குறும்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஆனால், இரண்டாயிரம் ரூபாய்தாள் செல்லாது என்பதற்கான உறுதியான தகவல் ஏதும் இந்தியக் கட்டுப்பாட்டு வங்கியிடம் இருந்தோ- அரசிடம் இருந்தோ தெரிவிக்கப்பட வில்லையென்பதே  உண்மை. ஆனாலும் முன்பு போல் வெறுமனே மூன்று நான்கு மணி நேர அவகாசத்தில் எல்லாம் மீண்டும் பணமதிப்பிழப்பு செய்யும் தவறை பாஜக அரசு செய்யாது என்றே மக்கள் உறுதியாக நம்பலாம். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,310.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.