Show all

நடிகர் ராம்சரணின் மனைவி உபாசனா! வடக்காதிக்கத்தைக் கண்டித்து தெலுங்கு திரையுலகிலிருந்து கிளம்பிய ஒரு கண்டனம்

மாற்றாந்தாய் மனப்பான்மையை முன்னெடுக்கிறார் மோடி என்பதான குற்றச்சாட்டு தெலுங்கு திரையுலகிலிருந்து கிளம்பியுள்ளது. தாயுள்ளம் பேணவேண்டிய இடத்தில் உள்ள மோடி அவர்களுக்கு! தெலுங்கு நடிகர் ராம்சரணின் மனைவி கொதிக்கும் வேதனைப் பதிவு

02,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: காந்தியாரின் 150 வது பிறந்தநாள் நிறைவடைந்ததையொட்டி நேற்று தலைமை அமைச்சர் நரேந்திர மோடியுடன் ஹிந்தி நடிகர்கள் மற்றும் திரைப்பட இயக்குநர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியைக் கொண்டாடினர். 

தலைமைஅமைச்சர் இல்லத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமீர் கான், ஷாரூக் கான், கங்கனா ரணாவத், ஜாக்குலின் பெர்னாண்டஸ், ராகுல் ப்ரீத்தி சிங், இயக்குநர்கள் ராஜ்குமார் ஹிரானி, ராஜ்குமார் சந்தோஷி, அஸ்வினி ஐயர் திவாரி, நிதேஷ் திவாரி மற்றும் தயாரிப்பாளர்கள் ஏக்தா கபூர், போனி கபூர் மற்றும் ஜெயந்திலால் கடா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியின்போது, மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் நிறைவடைந்ததையொட்டி 100 விநாடி கலாசார காணொளி ஒன்றை மோடி வெளியிட்டார். இந்த நிகழ்ச்சி குறித்து பேசிய மோடி, ஹிந்தி திரையுலகின் முன்னணி பிரபலங்கள் உடனான சந்திப்பு பலனளித்தது. காந்தியாரின் எண்ணங்களை மக்கள் விரும்பும் திரைப்படம் மூலம் பரப்புவது, அவரின் கொள்கைகளை இளைஞர்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்துவது... என்பது போன்ற நாங்கள் இந்த நிகழ்வில் எண்ணங்களை பரிமாறிக்கொண்டோம் என்று கீச்சுவில் பதிவிட்டிருந்தார்.

இதற்கிடையேதான், தெலுங்கு நடிகர் ராம்சரணின் மனைவியான உபாசனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தலைமைஅமைச்சரின் இந்த நிகழ்ச்சி குறித்து கருத்து பதிவிட்டுள்ளார். அதில், அன்பிற்குரிய நரேந்திர மோடி அவர்களே, தென்னிந்தியாவில் இருக்கும் நாங்கள் உங்களை மிகவும் மதிக்கின்றோம். உங்களைத் தலைமை அமைச்சராக கொண்டதற்காக மிகவும் பெருமை கொள்கிறோம். ஆனால், பெரிய ஆளுமைகள், கலாசார அடையாளங்களின் பிரதிநிதித்துவம் ஹிந்தி நடிகர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படுகிறது. தென்னிந்திய திரையுலகம் முற்றிலும் புறக்கணிக்கப்படுவதாகவே நாங்கள் உணர்கின்றோம். நான் என் உணர்வுகளை வேதனையுடன் இங்கே வெளிப்படுத்துகிறேன். இது சரியான மனநிலையில் ஆக்கபூர்வமான முறையில் எடுக்கப்பட்டதாக நம்புகிறேன். வாழ்க இந்தியா எனப் பதிவிட்டுள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,310.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.