Show all

வென்றது! ஆளும் பாஜக அரசை பணியவைத்து மும்பை உழவர்கள் போராட்டம்

29,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பயிர்க் கடன் தள்ளுபடி, மானியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உழவர்கள் மும்பையைக் குலுங்கவைத்த சட்டப்பேரவை முற்றுகைப் போராட்டம் வெற்றியில் முடிந்துள்ளது.

உழவர்கள் முன்வைத்த பெரும்பாலான கோரிக்கைகளை மஹாராஷ்டிராவில் ஆளும் பாஜக அரசு ஏற்றுக்கொண்டது. இதற்கான உறுதி ஏற்புக் கடிதத்தை உழவர்கள் சங்கத் தலைவரிடம் முதல்வர் பட்நாவிஸ் அளித்தார்.

வேளாண் கடன் தள்ளுபடி, மானியம் அளித்தல், எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரைகளை அமல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை நடைமுறைப் படுத்த வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவு பெற்ற அனைத்து இந்திய கிசான் சபா அமைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்தது.

இதற்காக புனே நகரில் இருந்து கடந்த செவ்வாய்க்கிழமை 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உழவர்களைத் திரட்டி மும்பைக்கு நடந்து வந்து, சட்டப்பேரவையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. புனேயில் இருந்து கடந்த செவ்வாய்க்கிழமை புறப்பட்ட உழவர்கள் 180 கி.மீ. தொலைவை நடந்து வந்து ஞாயிற்றுக்கிழமை மாலை மும்பைக்கு வந்து சேர்ந்தனர். புறப்படும் போது, 35 ஆயிரம் உழவர்கள் இருந்த நிலையில், மும்பை வந்து சேர்ந்தபோது 50 ஆயிரமாக உயர்ந்தது.

சாலை ஓரமெங்கும் செங்கொடிகளுடன் பிரம்மாண்ட வரிசையில் உழவர்கள் மும்பை நகருக்குள் வந்தனர். இளம் அகவை முதல் முதியவர்கள் வரை வேளாண்மையில் ஈடுபட்டுள்ளவர்கள், பெண்கள், மூதாட்டிகள் என ஏராளமானோர் திரண்டனர்.

உழவர்கள் போராட்டத்துக்கு சிவசேனா கட்சி, மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா, ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் ஆதரவு தெரிவித்து இருந்ததால், போராட்டம் வலுவடையும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்தப் போராட்டத்தை நாசிக் மாவட்டத்தின் சர்கனா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜீவா பாண்டு காவித், அகில பாரதிய கிசான் சபா தலைவர் அஜித் நாவலே ஆகியோர் தலைமை ஏற்று நடத்தினர்.

180 கி.மீ தொலைவு நடந்து வந்திருந்திருந்த உழவர்களுக்கு தேவையான உணவை மும்பை நகர மக்கள் வழங்கினர். இரவில் அவர்களுக்கு தேவையான குடிநீர், சாப்பாடு, ரொட்டி, பழங்கள், வடபாவ் ஆகியவற்றை வழங்கி தங்களால் இயன்ற உதவிகளைச் செய்தனர்.

இதேபோல காலை, மதிய உணவையும் மும்பை மக்களும், டப்பாவாலாக்களும் உழவர்களும் அளித்து தங்களின் மனித நேயத்தை வெளிப்படுத்தினர். இதனால், மும்பையில் ஒரு மெரீனா போராட்டத்தை பார்த்த உணர்வு இருந்தது.

உழவர்கள் அனைவரும் ஆசாத் திடலில் திரண்டு போராட்டம் நடத்தினர். அந்தக் கூட்டத்தில் சீதாராம் யெச்சூரி பேசினார். போராட்டத்தில் திரண்டு இருந்த அனைத்து உழவர்களும் கையில் சிவப்புக் கொடிகளை ஏந்தி இருந்ததால், அப்பகுதியே செங்கொடியால் ஒளிர்ந்தது.

அதன்பின் இன்று விவசாயிகள் சங்கத்தின் பிரதிநிதிகள், சங்கத் தலைவர் அஜித் நாவலே, சட்டமன்றஉறுப்பினர்கள் உள்ளிட்டோர் முதல்வர் பட்நாவிஸைச் சந்தித்து பேச்சு நடத்தினர். மேலும், மஹாராஷ்டிரா சட்டப்பேரவையிலும் உழவர்கள் போராட்டம் எதிரொலித்தது. உழவர்கள் போராட்டம் குறித்து நல்ல முடிவு எடுக்கப்படும் என்று முதல்வர் பட்நாவிஸ் அறிவித்தார். அதன்பின் நண்பகலுக்கு பின் அதிகாரிகளுடனும், போராட்டப் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தி முடிவை அறிவித்தார்.

சட்டப்பேரவைக்கு வெளியே முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் நிருபர்களிடம் பேசுகையில், ‘விவசாயிகளின் பெரும்பாலான கோரிக்கையை ஏற்றுக்கொண்டுவிட்டோம். அதற்கான உறுதி ஏற்புக் கடிதத்தையும் அளித்துவிட்டோம். வனப்பகுதிகளில் பழங்குடியினர் நிலத்தை அவர்களிடம் அளிப்பது குறித்து பேச்சு நடத்த சிறப்பு குழு அமைக்கப்படும்’ எனத் தெரிவித்தார்.

உழவர்களின் பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து போராட்டத்தைக் கைவிடுவதாக உழவர்கள் அறிவித்தனர். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,725.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.