Show all

மெரீனா தமிழர் வரலாற்றுப் போராட்டத்தை, மும்பையில் முன்னெடுத்த உழவர்கள்

29,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மகாராஷ்டிரா மாநிலத்தில் வேளாண்பெருமக்களின் கடன்கள் ரத்து செய்யப்படும் என்ற முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், அதை நிறைவேற்றவில்லை என்று புகார் எழுந்துள்ளது. 

இதையடுத்து நாசிக்கில் இருந்து கடந்த செவ்வாய்க்கிழமை மாலை ஆயிரக்கணக்கான உழவர்கள் மும்பை நோக்கி பிரம்மாண்ட பேரணி தொடங்கினர்.

இதில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உழவர்கள் நடை பயணமாக மும்பை புறப்பட்டனர். வழியில் திறந்தவெளியில் படுத்து உறங்கினர். சூரிய உதயத்துக்கு முன்னர் மீண்டும் மும்பை நோக்கி நடக்க தொடங்கினர். இந்தப் பேரணிக்கு அகில இந்திய கிஸான் சபா ஏற்பாடு செய்திருந்தது. இதில் பழங்குடியினத்தை சேர்ந்த ஏராளமான உழவர்களும் பங்கேற்றுள்ளனர்.

நாசிக்கில் இருந்து கடந்த 5 நாட்களாக சுமார் 180 கி.மீ. நடை பயணம் செய்து நேற்று பிற்பகல் உழவர்கள் மும்பை வந்தடைந்தனர். அவர்கள் நேற்று இரவு முழுவதும் மும்பையில் பேரணியாக சென்றனர். மும்பையில் சட்டப்பேரவையை முற்றுகையிட்டு இன்று போராட்டம் நடத்தினர்.

இரவு முழுவதும் பேரணியாக வந்த உழவர்கள், தெற்கு மும்பையில் உள்ள ஆஸாத் மைதானத்தை காலையில் வந்தடைந்தனர். அவர்களுக்கு மும்பை தூக்குதூக்கிகள் உணவும் தண்ணீரும் வழங்கினர். இதுபோலவே, மும்பை மக்கள், சமூக அமைப்பகளைச் சேர்ந்தவர்களும், உழவர்களுக்கு உணவு வழங்கினர்.

இதுகுறித்து மும்பை டப்பாவாலா சங்கத்தின் (இங்கே நாம் தூக்கு தூக்கிகள் என்று சொல்வதை அங்கு டாப்பாவாலா என்று குறிப்பிடுகின்றனர்.) செய்தித்தொடர்பாளர் சுபாஷ் தலேக்கர் கூறியதாவது:

‘‘உலகிற்கே உணவு கொடுத்து ஆதரிப்பவர்கள் உழவர்கள். அவர்களுக்கு உணவு வழங்குவது எங்களுக்கு மகிழ்ச்சி. தாதர் முதல் கொலாபா வரை பணியாற்றி வரும் எங்கள் தோழர்கள் அந்தந்த பகுதியில் தங்கி இருக்கும் உழவர்களுக்கு உணவு கொடுத்து வருகிறார்கள். மக்கள் மீதம் வைத்திருக்கும் ரொட்டி உள்ளிட்ட உணவுகளை சேமித்து அதனை உழவர்களுக்கு வழங்கி வருகிறோம். ஏற்கெனவே ஏழை மக்களுக்காக நாங்கள் செயல்படுத்தி வரும் ரொட்டி வங்கி மூலம் திரட்டப்படும் உணவை தற்போது உழவர்களுக்கு வழங்கி வருகிறோம்’’ எனக்கூறினார்.

இதுபோலவே மும்பை மக்களும், சமூக அமைப்புகள், நற்பணி மன்றங்கள் என பல தரப்பில் இருந்தும் உழவர்களுக்கு உணவு குவிந்து வருகிறது. மக்கள் தானாகவே முன் வந்து உழவர்களுக்கு உணவும், தண்ணீரும் வழங்கி வருகின்றனர்.

இதுமட்டுமின்றி காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா உள்ளிட்ட கட்சிகளின் சார்பிலும் உழவர்களுக்கு உணவும், உதவி பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றன.

மும்பையில் அலுவலகங்களில் பணிபுரிவோருக்கு அவர்கள் வீடுகளில் சமைக்கப்பட்ட உணவைப் பெற்று உரிய நேரத்தில் வழங்கி, மீண்டும் காலி டப்பாக்களை அவர்கள் வீட்டிலேயே ஒப்படைக்கும் பணியைச் செய்து வருபவர்கள் ‘டப்பாவாலாக்கள்’ எனப்படுவர். பல ஆண்டுகளாக சரியான முறையில், மிக துல்லியமாக செய்து வரும் இவர்களது பணி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. உலகின் பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் டப்பாவாலாகளின் பணியை பார்த்து ஆச்சரியப்பட்டுள்ளனர்.

இவர்கள் அண்;மையில், உணவுகளை வீணடிக்கக் கூடாது என்ற நோக்கில் சமீபத்தில் ரொட்டி வங்கி அமைப்பை மும்பை ‘டப்பாவாலாக்கள்’ தொடங்கினர். டப்பாவாலாக்கள்’ தொடங்கிய ரொட்டி வங்கியில் பிரத்யேகமாக அழைப்புமையம் ஒன்று செயல்படுகிறது. அதன்படி, வீடுகளில் சமைக்கப்பட்ட உணவுகள் அதிகமாகி விட்டால், இந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவித்தால், அதை ‘டப்பாவாலாக்கள்’ சென்று சேகரித்துக்கொள்வார்கள். பின்னர் அந்த உணவு பசியோடு இருக்கும் வீடு இல்லாத மக்களுக்கும், சாலை ஓரங்களில் வசிக்கும் ஏழை மக்களுக்கும் இலவசமாக அளிக்கப்படுகிறது.

நம்ப நரேந்திர மோடி ஒட்டு மொத்த இந்;தியாவிலும் வேளாண்மையை முற்றாக ஒழித்து விட்டு மீத்தேன் தோண்டி யெடுத்து, கார்ப்பரேட்டுகள் மட்டும் வாழும் வகையான செயல்பாட்டில் உலா வந்து கொண்டிருக்கிறார். அவரின் அந்த செயல் திட்டத்தை இந்தப் பேரணி கலைக்கும் என்று கருதினால் அது நம்முடைய கனவாக முடியும். மோடியை ஆட்சியில் இருந்து அப்புறப் படுத்துவது ஒன்றே உண்மையான தீர்வாக இருக்க முடியும். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,725.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.