Show all

வென்றது! கருநாடகத் தமிழ் அமைப்புகளின் மென்மையான அணுகுமுறை

04,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பெங்களூருவில் ஆட்டோவை பின்னால் இருந்து வந்த பைக் மோதிய சம்பவத்தில் ஆட்டோ ஓட்டுநர் அருண் மற்றும் பைக்கில் வந்தவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு மோதலில் முடிந்தது. அப்போது, பைக்கில் வந்தவரை அருண் சரமாரியாக அடித்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், ஆட்டோவிலிருந்த அருணின் நண்பர்களான மகேந்திரா, கார்த்திக் இருவரும் சேர்ந்து தாக்கினர். அப்போது, கன்னடரை நடிகர் விஜய் ரசிகர்கள் அடித்துவிட்டதாக ‘பிரஜாகன்னட தொலைக்காட்சியில் காணொளி ஒளிபரப்பப்பட்டதால்-

அதே சமயம், சம்பிகே திரையரங்கில் விஜய்யின் மெர்சல் திரைப்படம் ஓடிக் கொண்டிருந்த நிலையில், திரையரங்கின் முன் திரண்ட கன்னட அமைப்பினர், அங்கு வைக்கப்பட்டிருந்த பதாகைகளைக் கிழித்தெறிந்தனர்.

இதேபோல, பெங்களூரில் உள்ள ராதாகிருஷ்ணா, முகுந்த், மைசூருவின் சங்கம் திரையரங்குகள் முன் வைக்கப்பட்டிருந்த பதாகைகளையும் கன்னட அமைப்பினர் கிழித்து எறிந்ததோடு, திரைப்படத்தைப் பார்க்கவிடாமல் பாதியில் நிறுத்தினர்.

இந்த விவகாரத்தை ஒருசில கன்னடத் தொலைக்காட்சிகள், பெங்களூரில் கன்னடர்-தமிழர் கலவரம் நடந்திருப்பது போல பூதாகரமாக்கின. இதை தொடர்ந்து தமிழ் திரைப்படங்கள் ஓடிய திரையரங்குகளில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டன.

இதனிடையே, கைகலப்பில் ஈடுபட்ட சம்பவத்தில் வழக்கைப் பதிவுசெய்யாமல் விசாரணை நடத்திய மல்லேஸ்வரம் காவல்துறையினர், ஆட்டோவில் அமர்ந்திருந்த மகேந்திரா, கார்த்திக் இருவரையும் 01,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119 (18.10.2017) அன்று தடுப்புக் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

இதனால் வேதனை அடைந்த அவர்களது குடும்பத்தார் வெள்ளிக் கிழமை காவல் நிலையம் முன் திரண்டு அழுதபடி இருந்தனர்.

இந்த நிலையில், பெங்களூரு தமிழ்ச்சங்கத் தலைவர் தி.கோ.தாமோதரன் உள்துறை அமைச்சர் ராமலிங்கரெட்டியிடம் தொலைபேசியில் பேசி தடுப்புக்காவலில் வைத்திருக்கும் இரு தமிழ் இளைஞர்களை விடுவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். அப்போது தகுந்த நடவடிக்கையை எடுப்பதாக ராமலிங்கரெட்டி உறுதி அளித்துள்ளார். தமிழ்ச் சங்கத்தலைவர் தி.கோ.தாமோதரனின் வழிகாட்டுதலின் பேரில் பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் துணைச்செயலாளர் எஸ்.சுந்தரவேலு, செயற்குழு உறுப்பினர் ராமசந்திரன் ஆகியோர் காவல்நிலையம் சென்று தடுப்புக் காவலில் வைத்திருப்போரை விடுவிக்க முறையிட்டனர். அதேபோல, கர்நாடக தமிழ்மக்கள் இயக்கத்தின் தலைவர் சி.இராசன், அரசு, சண்முகம், பாலு, மாரி, சௌரி, தமிழார்வலர் தமிழடியான், வழக்குரைஞர்கள் இளவரசு, நிலவன் உள்ளிட்டோரும் காவல் ஆய்வாளரைச் சந்தித்து தடுப்புக்காவலில் வைத்துள்ளோரை விடுவிக்கக் கோரிக்கை விடுத்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து மகேந்திரன், கார்த்திக் இருவரிடமும் வாக்குமூலம் பெற்றுக்கொண்ட காவல்துறையினர், அன்;றாடம் காவல்நிலையத்திற்கு வந்து கையெழுத்து போடுமாறு அறிவுறுத்தியுள்ளனர். தமிழ் அமைப்புகளின் கோரிக்கையை தொடர்ந்து தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த மகேந்திரா, கார்த்திக்கை காவல்துறையினர் வௌ;ளிக்கிழமை இரவு 8 மணி அளவில் விடுவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக தகராறில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர் அருண், பைக் ஓட்டிச் சென்றவரை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

கருநாடகத் தமிழ் அமைப்புகளின் மென்மையான அணுகுமுறையால் பெரிதாக்கப் படவிருந்த கருநாடகத் தமிழர்களுக்கு எதிரான கலவரம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.