Show all

நான் ஏன் சுழல் விளக்கை அகற்ற வேண்டும்? கேள்வி எழுப்பும் கர்நாடக முதல்வர் சித்தராமையா

நான் ஏன் இப்போதே சுழல் விளக்கை அகற்ற வேண்டும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார். மே ஒன்றாம் தேதி முதல் எனது காரில் சுழல் விளக்கு இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.

     வண்ண சுழல் விளக்குகளை தலையாய பிரமுகர்கள் வாகனங்களில் பொருத்துவது தொடர்பாக சட்டத்திருத்தம் கொண்டுவரப்படவுள்ளது. அதனடிப்படையில் குடியரசுத் தலைவர், பிரதமர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிஅரசர், அமைச்சர்கள் உள்ளிட்ட தலையாய பிரமுகர்களின் வாகனங்களில் இருந்து சுழலும் சிவப்பு, நீள விளக்கு அகற்றப்பட உள்ளது. இதுவரும் மே 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

     அவசரகால ஊர்திகளான ஆம்புலன்ஸ், தீ தடுப்பு வாகனம் மற்றும் நீல வண்ண சுழல் விளக்கு பொருத்தப்பட்ட காவல் துறை வாகனங்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

     இதைத்தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தன் வாகனத்தில் இருந்த வண்ண சுழல் விளக்கை அகற்றினார். பிரதமர் மோடி தன் வாகனத்தில் இருந்து சிவப்பு சுழல் விளக்கை அகற்றியதைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன் வாகனத்தில் இருந்த சிவப்பு சுழல் விளக்கை அகற்றியதுடன், அமைச்சர்கள், அதிகாரிகள் வாகனங்களிலிருந்தும் அகற்ற உத்தரவிட்டார்.

     புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி உட்பட பல்வேறு மாநில அமைச்சர்களும் சுழல் விளக்குகளை அகற்றி வருகின்றனர். இந்நிலையில் கர்நாடக மாநில காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா, தற்போது அகற்ற முடியாது என தெரிவித்து உள்ளார்.

     உத்தரவு எப்போது அமலுக்கு வருகிறதோ அப்போதுதான் சிவப்பு சுழல் விளக்கை அகற்றுவேன் என தெரிவித்துள்ளார். பிற மாநில முதல்வர்கள் சிவப்பு சுழல் விளக்கை நீக்கியுள்ள நிலையில் சித்தராமையாவின் காரில் மட்டும் சிவப்பு விளக்கு இருப்பதைக் கண்ட செய்தியாளர்கள் இதுகுறித்து அவரிடம் கேட்டனர்.

     அதற்கு பதிலளித்த சித்தராமையா, நான் ஏன் சிவப்பு சுழல் விளக்கை உடனடியாக அகற்ற வேண்டும்? என கேட்டார். மே ஒன்றாம் தேதி முதல் எனது காரில் இருந்து சிவப்பு சுழல் விளக்கு அகற்றப்படும் என்று கூறினார்.

     உத்தரவு எப்போது அமலுக்கு வருகிறதோ அப்போதுதான் அகற்றுவேன் என தெரிவித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.