Show all

விஜய் குழும ஒளிபரப்பு 25ரூபாயா? என்று கமல் விஜய் தொலைக்காட்சியில் விளம்பரிக்கும் சேதியின் விளக்கம் இதுதான்

09,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கம்பிவடத் தொலைக்காட்சி, மற்றும் நேரடித் தொலைக்காட்சிகளில் நாளை இல்லாமல், அடுத்து வரும் செவ்வாய்க் கிழமை முதல் கட்டணத்தை, நடுவண் அரசு உயர்த்தியுள்ளது. 

இதனைக் கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் முற்றுகை போராட்டம் நடந்தது. தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம், கம்பிவட மற்றும் நேரடித் தொலைக்காட்சிகளுக்கான புதிய கட்டண முறையை அடுத்து வரும் செவ்வாய்க் கிழமை முதல் அமலுக்குக் கொண்டு வருகிறது நடுவண் மோடிஅரசு. 

தாழ்தர மற்றும் உயர்தர ஒளிபரப்புகளை, தொகுப்பு தொகுப்புகளாக  சன், விஜய். ராஜ் என்று விரும்பிய தொலைக்காட்சி ஒளிபரப்பு உள்ள தொகுப்புகளை வாடிக்கையாளர்கள் பெற்று பயன்படுத்தி வந்தார்கள். 

இனி புதிய விதிமுறைகள் அமலுக்கு வரும் போது இப்படிப் தொகுப்புகளாக கட்டண தொலைக்காட்சி ஒளிபரப்புகளை வாடிக்கையாளர்களால் பெற முடியாது. 

ஆனால் இலவச ஒளிபரப்புகளை அடிப்படைத் தொகுப்புகளில் பார்க்க முடியும். இலவச ஒளிபரப்புகளைப்  பெறுவதற்காக தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம், சில திட்டங்களை வகுத்துள்ளது. அதன் படி எவ்வளவு கட்டணம் செலுத்தினால் இலவச ஒளிபரப்புகளைப் பெற முடியும் என்பதை பார்க்கலாம். 

1முதல் 100 இலவச ஒளிபரப்புகளைப் பார்க்க 130 ரூபாய் உடன் 18 விழுக்காடு சரக்கு-சேவைவரி. எனச் சேர்த்து 153.50 ரூபாயை வாடிக்கையாளர்கள் கட்டணமாகச் செலுத்த வேண்டும். 125 இலவச ஒளிபரப்புகளைப் பார்க்க வேண்டும் என்றால் ரூ.150 உடன் 18 விழுக்காடு சரக்கு-சேவைவரி சேர்த்து 177 ரூபாயைக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். 

150 இலவச ஒளிபரப்புகளைப் பார்க்க வேண்டும் என்றால் ரூ. 170 உடன் 18 விழுக்காடு சரக்கு-சேவை வரி என 200.50 ரூபாயைக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். 

175 இலவச ஒளிபரப்புகளைப் பெற வேண்டும் என்றால் ரூ. 190 உடன் 18 விழுக்காடு சரக்கு-சேவை வரி என 224.50 ரூபாயைக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

200 இலவச ஒளிபரப்புகளைப் பார்க்க வேண்டும் என்றால் ரூ. 210 உடன் 18 விழுக்காடு சரக்கு-சேவை வரி என 248 ரூபாயைக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். 

இப்படித் தொடர்ந்து கூடுதலாக மேலும் 25 இலவச ஒளிபரப்பு வேண்டும் என்றால் அடிப்படை கட்டணத்துடன் மேலும் 25 ரூபாய் கட்டணம் கூடுதலாக 18விழுக்காடு சரக்கு-சேவை வரி எனத் திட்டம் நீள்கிறது. 

சன் குழும ஒளிபரப்புகள், ஜீ குழும ஒளிபரப்புகள், ராஜ் குழும ஒளிபரப்புகள், ஸ்டார் குழும ஒளிபரப்புகள், கலர்ஸ் ஒளிபரப்புகள், மெகா தொலைக்காட்சி ஒளிபரப்புகள்,  போன்றவை கட்டண ஒளிபரப்புகளாக உள்ளன. கட்டண ஒளிபரப்புகள், பார்க்க வேண்டும் என்றால் மேலே கூறிய அடிப்படை திட்டங்களுள் ஒன்றைத் தேர்வு செய்துகொண்டு கட்டண ஒளிபரப்புகளுக்கான கட்டணம் கூடவே 18 விழுக்காடு சரக்கு-சேவை வரி செலுத்த வேண்டும். 

விஜய் குழுமத் தொலைக்காட்சிகளுக்கு ரூ25 என்று கமலை வைத்து ஓயாமல் விளம்பரித்துக் கொண்டிருக்கிறது இல்லையா இதற்காகத்தான். அந்த 25க்கு சரக்கு சேவைவரி 18 விழுக்காடு கணக்கிடப் படும் என்பதை நாமே தெரிந்து கொள்ள வேண்டும்.

மற்றக் குழும ஒளிபரப்புகள் இந்தச் செய்தியைக் கூட கசிய விடாமல், நாம் என்ன செய்யலாம் என்று, விடுதியில் அறைபோட்டு சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். 

இலவச ஒளிபரப்புகள் மாநிலத்திற்கு ஏற்றவாறு மாறுபடும். கம்பிவடத் தொலைக்காட்சி என்றால் மாவட்டம் வாரியாக மாறும். இணைப்பு பெட்டி இல்லாமல், கம்பிவடம் மூலமாக சேவை பெற்று வந்தவர்களை கம்பிவடத் தொலைக்காட்சி இணைப்பாளர்கள் இனி வாடிக்கையாளர்களை அதற்காக நிர்பந்திப்பார்கள். 

மேலே கூறிய திட்டங்களின் கட்டணங்கள் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் வகுத்தது. 

சன், விஜய். ராஜ் போன்ற ஒளிபரப்புக் குழுமங்களின்  விலை, செல்பேசிக்கான  கட்டணங்கள் போன்று அவ்வப்போது மாற வாய்ப்புள்ளது. 

இந்தக் கட்டண முறையை எதிர்த்துத் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனங்கள் மற்றும் கம்பிவடத் தொலைக்காட்சி இணைப்பாளர்கள் முயன்றும், வழக்குகள் தொடர்ந்தும், முறையீடுகள்  தள்ளுபடி செய்யப்பட்டு வருகின்றன. எனவே கம்பிவடம் மற்றம் நேரடித் தொலைகாட்சி ஒளிபரப்பு பெறும் வாடிக்கையாளர்கள்  அனைவருக்கும் அடுத்த செவ்வாய்க் கிழமை முதல் தொலைக்காட்சி பார்ப்பதற்கான செலவுத்திட்டம் கூடும். 

இப்போதுதான், பயன்படுத்தாத செறிவட்டைகளுக்கும் மாதக்கட்டணம் என்கிற செலவுத் திட்டத்தில் விழுந்தோம். அடுத்து இப்போது இந்த வீழ்ச்சி. 

இந்த அழகில், நமது செல்பேசி, கணினி ஆகியவற்றை ஒற்றறிய பத்து ஆணையங்களுக்கு அனுமதி வேறு. இந்த மோடி ஆட்சியைத்தான் தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்று டமிலிசை மேடைதோறும் முழங்கிக் கொண்டிருக்கிறது. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,011.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.