Show all

வாகைசூட வாழ்த்துக்கள்! எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் தீவிர முயற்சியில் நிதிஷ்குமார்

இன்னும் இரண்டு ஆண்டுகளில், இந்தியாவிற்கு அடுத்து அமையும் ஆட்சி- மாநிலக்கட்சிகளின் கூட்டாட்சியாக அமைந்தால் இந்தியா இனிவரும் வரும் காலங்களில் உலக நல்லரசாக ஆளப்பட வாய்ப்பு இருக்கிறது என்று இந்தியாவின் பல முனைகளில் இருந்து கருத்து எழுந்து வருகிறது. அந்த வகைக்கு பல தலைமைகள் முயன்று வருகின்றன. அதில் ஒருவராக  நிதிஷ்குமார், இங்கே பேசப்படவுள்ளார்.

21,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: மன்னராட்சியில் கூட நல்லாட்சிதந்த உலகின் ஒரே மண் என்றால் அது தமிழ்மண் மட்டுமேயாகும். மன்னர்கள் என்றாலே அந்தப்புரம் அமைத்துக் மகிழ்ந்திருந்தவர்கள் என்கிற உலக வரலாற்றை திருப்பிப் போட்டிருந்தது கரிகால்சோழன் கட்டியிருந்த உலகின் முதல் அணைக்கட்டான கல்லணை. மன்னர்கள் மக்களுக்கான நல்லாட்சியைத் தரவேண்டியிருந்த பெருங்காரணம்-  சேர, சோழ, பாண்டியர் என்ற மூவேந்தர்களுக்கிடையிலான யாருடையது நல்லாட்சி என்பதான போட்டி. 

இந்தியா விடுதலை பெற்ற எழுபத்தைந்து ஆண்டுகளில் ஒரேயொருமுறைதான் இந்த நல்லாட்சி வாய்ப்பு இந்தியாவிற்கு கிடைத்து. அது 32 ஆண்டுகளுக்கு முன் 343 நாட்கள் மட்டும் வி.பி.சிங்கிற்கு ஆளக்கிடைத்த ஆட்சி மட்டுமேயாகும்.

இன்றுவரையிலான மீதி 27073 நாட்களும் ஒருமொழி, ஒரு மாநிலம், குறிப்பிட்ட இனத்தின் அதிகார ஆட்சிதான் நடந்து வந்து கொண்டிருக்கிறது.

இன்னும் இரண்டு ஆண்டுகளில், இந்தியாவிற்கு அடுத்து அமையும் ஆட்சி- மாநிலக்கட்சிகளின் கூட்டாட்சியாக அமைந்தால் இந்தியா இனிவரும் வரும் காலங்களில் உலக நல்லரசாக ஆளப்பட வாய்ப்பு இருக்கிறது என்று இந்தியாவின் பல முனைகளில் இருந்து கருத்து எழுந்து வருகிறது. அந்த வகைக்கு பல தலைமைகள் முயன்று வருகின்றன. அதில் ஒருவராக  நிதிஷ்குமார், இங்கே பேசப்படவுள்ளார்.

பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கடந்த சில கிழமைகளுக்கு முன்பு தான், பாஜக கூட்டணியில் இருந்து விலகினார். தேஜஸ்வி யாதவின் ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து அவர் ஆட்சியை அமைத்தார். 

இது அடுத்த இரண்டு ஆண்டுகளில் வரவுள்ள மக்களைவைத் தேர்தலில் பாஜகவின் தோல்விக்கான தொடக்கம் என்றும் கூறி வருகின்றனர். மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் தலைமைஅமைச்சர் வேட்பாளராக நிதிஷ்குமார் முன்னிறுத்தப்படலாம் என்றும் கூட சிலர் கூறுகின்றனர். 

இந்தச் சூழலில், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் நடவடிக்கையாக இன்று டெல்லி சென்ற நிதிஷ்குமார் காங்கிரசின் இராகுல் காந்தியை நேரில் சந்தித்துப் பேசினார். செய்தியாளர்களிடம் பேசிய பீகார் முதல்வர் நிதிஷ்குமார், மாநிலக் கட்சிகளைப் பலவீனமாக்கச் சிலர் முயன்று வருகின்றனர். அதை முறியடித்து பொதுத் தேர்தலுக்கு முன்னதாக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைப்பதே எனது நோக்கம். அதேநேரம் தலைமைஅமைச்சர் வேட்பாளராகக் களமிறங்க எனக்கு எவ்வித ஆர்வமும் இல்லை என்று அவர் தெரிவித்தார். 

இராகுல் காந்தி மட்டுமின்றி அவர் பல முதன்மைத் தலைவர்களையும் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார். அவர்களில் முதன்மையானவர் ஆம் ஆத்மி தலைவரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால். 

ஏனென்றால், கடந்த மக்களவை தேர்தல் சமயத்திலேயே பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிக் கூட்டணியில் அவரை இணைக்க முயற்சிகள் நடைபெற்றன. இருப்பினும், அது வெற்றியடையவில்லை, 

அதேபோல கர்நாடகாவில் எச்டி குமாரசாமியையும் அவர் விரைவில் சந்திக்க உள்ளார். குமாரசாமி தலைமையில் நடைபெற்ற கர்நாடக அரசு, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவியதால் கவிழ்ந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த பாராளுமன்றத் தேர்தலிலேயே பாஜகவுக்கு எதிராக ஓரணியை உருவாக்க முயன்ற தேசியவாத காங்கிரஸின் சரத் பவார், உத்தரப் பிரதேச தேர்தலில் பாஜகவுக்கு கடும் போட்டி கொடுத்த அகிலேஷ் யாதவையும் அவர் நேரில் சென்று சந்திக்க உள்ளார். 

இதற்காக 'எதிர்ப்புக்கான ஒருங்கிணைப்பு' என்ற திட்டத்தை முன்னெடுத்துள்ள அவர், விரைவில் மகாராஷ்டிரா, ஹரியானா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கும் பயணம் செய்ய உள்ளார். இவரது பயணம் எதிர்க்கட்சிகளை ஒரே அணியில் கொண்டு வர உதவுமா என்பதைப் பொறுத்துத்தான் பார்க்க வேண்டும்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,363.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.