Show all

தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்கும் வகையான கோரிக்கைகளை முன்வைத்தார் மு.க.ஸ்டாலின்! தென்மண்டலக் குழு கூட்டத்தில்

தென்மண்டலக் குழு கூட்டத்தில் தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்- சரக்குசேவைவரி பாதிப்பு, நீட் விலக்கு, தமிழ்நாட்டு மின்சாரம் தமிழ்நாட்டிற்கே, பேரிடர் நிதி உடனடி விடுவிப்பு, ஒன்றியத்தில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி போன்ற கோரிக்கைகளில் தமிழ்நாட்டின் உறுதிப்பாட்டை ஒன்றியத்திற்கு அறிவுறுத்தினார். 

20,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: சரக்குசேவைவரி நடைமுறையால் மாநிலங்களுக்கு நிதிச் சுமை ஏற்பட்டுள்ளதாக தென்மண்டலக் குழு கூட்டத்தில் தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்சா தலைமையில் தென்மண்டலக் குழு கூட்டம் நடைபெற்து. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை ஆகியோர் கலந்து கொண்டனர். புதுச்சேரி அரசு சார்பில் துணைநிலை ஆளுநர் தமிழிசை பங்கேற்றார். ஆந்திரா, தெலங்கானா அரசுகள் சார்பில் பேராளர்கள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில், மாநில எல்லை தொடர்பான சிக்கல்கள், சட்டம் ஒழுங்கு, சாலை மற்றும் போக்குவரத்து, பாதுகாப்பு, எரிசக்தி உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சரக்குசேவைவரி நடைமுறையால் மாநிலங்களுக்கு நிதிச் சுமை ஏற்பட்டுள்ளதாக பேசினார். தொடர்ந்து பேசிய அவர், ஒன்றியத்தில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பதில் தமிழ்நாடு உறுதியாக உள்ளது என குறிப்பிட்டார்.

மேலும், தென்னிந்திய மொழிகள் அனைத்தும் ஒரே மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவை. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற உணர்வோடு அனைத்து சிக்கல்களையும் நாமே தீர்த்துக் கொள்ள வேண்டும் என தென்னிந்திய முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுத்தார். அண்டை மாநிலங்களை இணைக்கும் வகையில் அதிவேக தொடர்வண்டி வழித்தடத்தை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தார்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை பயன்படுத்துவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக இருப்பதாக சுட்டிக்காட்டிய அவர், தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் கொள்முதல் செய்ய தங்களது அரசு அணியமாக இருப்பதாகவும் தெரிவித்தார். மின்வாரிய திருத்த சட்டத்தை கைவிட வேண்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

வெள்ள பாதிப்பு உள்ளிட்ட இயற்கை பேரிடர்களுக்கான நிவாரண நிதியை ஒன்றிய அரசு உடனடியாக விடுக்க வேண்டும் என்றும், நீட் தேர்வில் இருந்து தமிழ் நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அடுத்த தென்மண்டலக்குழு கூட்டத்தை தமிழ்நாட்டில் நடத்த வேண்டும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை வைத்தார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,362.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.