Show all

குளறுபடி தேர்வுதான் நீட்! புதியதொரு ஆதாரம் தரவாகிறது.

குளறுபடி தேர்வுதான் நீட் என்கிற வகைக்கு, 'இது என்னோட விடைத்தாளே இல்லை' என்கிற தலைப்பில் அறங்கூற்றுமன்றத்தின் கதவைத்தட்டியுள்ளார் சென்னையைச் சேர்ந்த ஒரு மாணவி.

21,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: நீட் தேர்வில் குளறுபடி நடந்துள்ளதாக மாணவி ஒருவர் சென்னை உயர் அறங்கூற்றுமன்றத்தில் மனுபதிகை செய்துள்ளார். 

இந்தியாவில் மருத்துவ இடங்கள் அனைத்தும் நீட் தேர்வு மூலமாகவே நடத்தப்பட்டு வருகிறது. இளவல் மற்றும் முதுவர் மருத்துவப் படிப்புகளுக்கு தனித்தனியாக நீட் தேர்வுகள் நடத்தப்படுகிறது. 

தமிழ்நாடு நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டிருந்தாலும் கூட, நீட் விலக்கு இன்னும் கிடைக்காததால் இங்கும் நீட் மதிப்பெண்கள் மூலமே மருத்துவ படிப்புகளுக்குக் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு நாடு முழுவதும் மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு கடந்த 01,ஆடி (ஜூலை17) அன்று நடத்தப்பட்டது. இத்தேர்வு முடிவுகளும், மாதிரி விடைகளும் கடந்த கிழமை வெளியிடப்பட்டது. 

அதேபோல விடைத்தாள்கள் சம்மந்தப்பட்ட மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதனிடையே நீட் தேர்வு தொடர்பாக நீட் தேர்வில் தனது விடைத்தாள் மாறி விட்டதாகக் கூறி சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த மாணவி பவமிர்த்தினி சென்னை உயர் அறங்கூற்றுமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தேர்வில் 720க்கு 600க்கும் மேல் மதிப்பெண்கள் பெறும் நம்பிக்கையுடன் இருந்த நிலையில் 132 மதிப்பெண்கள் பெற்றதற்கான விடைத்தாள் தனக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். 

தேர்வில் 13 வினாக்களுக்கு மட்டும் தான் விடையளிக்காத நிலையில், தனக்கு அனுப்பப்பட்ட விடைத்தாளில் 60 வினாக்கள் விடையளிக்கப்படாமல் விடுபட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். 

விடைத்தாளின் இடது புறம் இடம்பெற்றிருந்த தனது சுய விவரங்கள் அடங்கிய பகுதி வேறு மாணவி விடைத்தாளுடன் இணைக்கப்பட்டிருக்கலாம் என மாணவி ஐயம் தெரிவித்துள்ளார். விடைத்தாளில் உள்ள கைரேகையைச் சரி பார்த்தால் தனது விடைத்தாள் எது என கண்டுபிடிக்க முடியும் எனவும், தனது விடைத்தாளைப் பதிகை செய்யும்படி ஒன்றிய அரசுக்கும், தேசிய தேர்வு முகமைக்கும் உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார். 

மேலும், தன்னை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதிக்கவும், ஒரு இடத்தை காலியாக வைத்திருக்கும்படி உத்தரவிடவும் கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் அறங்கூற்றுவர் ஆர்.சுப்பிரமணியன் முன் முறையிடப்பட்டது. 

இதை ஏற்ற அறங்கூற்றுவர், மனுவை நாளை விசாரிப்பதாகத் தெரிவித்துள்ளார். நாளை இந்த வழக்கை விசாரிக்கும் அறங்கூற்றுமன்றம், மாணவியின் வழக்கு தொடர்பில், முதன்மை உத்தரவைப் பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,363.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.