Show all

வழக்கறிஞர் மோகன் கோபால் வாதம்! உயர்சாதி இடஒதுக்கீடு அரசியலமைப்பை ஏமாற்றும் வகைக்கானதே

உயர்சாதி ஏழைகளுக்குப் பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க அரசியலமைப்பில் இடமில்லை என்று கூறி திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் வழக்கு தொடர்ந்துள்ளனர். 
 
29,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: உயர்சாதி ஏழைகளுக்குப் பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு வழங்குவது அரசியலமைப்பை ஏமாற்றும் செயல் என்று உச்சஅறங்கூற்றுமன்றத்தில் வழக்கறிஞர் மோகன் கோபால், தெளிவுபடுத்தி வாதாடியுள்ளார்.

சாதி அடிப்படையிலான ஏற்றத்தாழ்வு முறை இந்தியா ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்ட காலத்திற்கு முன்பிருந்தே தொடருவது ஆகும். அது இன்று வரை நீடித்து வருகிறது. இந்த இழிவை ஒழித்து சமூக நீதியை நிலைநாட்டுவதற்கான நோக்கத்தில் இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டது. 

தாழ்த்தப்பட்ட சாதிகள், பிற்படுத்தப்பட்ட சாதிகள் என்று வகைப்படுத்தப்பட்ட பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஒன்றிய மாநில அரசுகள் இடஒதுக்கீட்டை வழங்கி வருகின்றன. 

இந்த இடஒதுக்கீட்டு முறைக்கு எதிராக முற்பட்ட பிரிவினர் என்று அழைக்கப்பட்ட உயர்சாதியினர் தொடர்ந்து பேசி வருகின்றனர். ஆனால், சாதிய ஒடுக்குமுறையால் கல்வியே கற்காமல் இருந்த தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் பலர் படித்து பட்டம் பெற்றது இந்த இடஒதுக்கீட்டு முறையின் காரணமாகவே.

இந்தச் சாதியினர் இந்தத் தொழிலை செய்ய வேண்டும் என்ற பிற்போக்குத்தனம் மறைந்து பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பினரும் அறங்கூற்றுவர்களாக, அரசு உயரதிகாரிகளாக, ஆசிரியர்களாக உயர்ந்தனர். இப்படி இந்தியாவில் சமூக நீதியை ஓரளவுக்கு நிலைநாட்டியதில் இடஒதுக்கீட்டின் பங்கு பேரளவினது. 

ஆனாலும் முழுமையாக இந்தியாவில் சாதிய ஏற்றத்தாழ்வு நீங்காததிருக்கிற நிலையில், இடஒதுக்கீடு கட்டாயமாகிறது. இடஒதுக்கீட்டை கடுமையாக எதிர்த்து வந்த உயர்சாதியினர், தற்போது தங்கள் சமுதாயத்திலும் ஏழைகள் இருப்பதால் பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்த தொடங்கினர். 

ஆனால், பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு முற்போக்கு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், நாடாளுமன்றத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பாக உயர்சாதி ஏழைகளுக்கு பொருளாதார அடிப்படையில் 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் முறை கொண்டு வரப்பட்டது. இதற்காக அரசியலமைப்பின் 103 வது பிரிவில் திருத்தம் செய்யப்பட்டது. 

இந்த நிலையில் இடஒதுக்கீடு வரம்பு 50 விழுக்காட்டிற்குள் இருக்க வேண்டும் என்ற உச்சஅறங்கூற்றுமன்ற உத்தரவை மீறிவிட்டதாக கூறி வழக்குகள் தொடரப்பட்டன. மேலும் பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க அரசியலமைப்பில் இடமில்லை என்று கூறி திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் வழக்கு தொடர்ந்துள்ளனர். 

இந்த வழக்கு உச்சஅறங்கூற்றுமன்ற தலைமை அறங்கூற்றுவர் யு.யு.லலித் தலைமையிலான அரசியல்சாசன அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. இன்று நடைபெற்ற விசாரணையில் அணியமான வழக்கறிஞர் மோகன் கோபால், 103 வது பிரிவில் மேற்கொள்ளப்பட்ட சட்டத்திருத்தம் அரசியலமைப்பை ஏமாற்றும் செயல். நாடு சாதி அடிப்படையில்தான் பிரிந்து இருக்கிறது. இதுவே எதார்த்தம். இந்த சட்டத்திருத்தம், அரசியலமைப்பு என்பது ஏழைகளைவிட சலுகை பெற்றுவர்களையே பாதுகாக்கும் என்ற மனநிலையை மக்கள் நடுவே ஏற்படுத்தும். இது அரசியலமைப்பு சாசனத்தின் சமூக நீதி குறித்த நோக்கத்தை சிதைக்கிறது. என்றார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,371.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.