Show all

அமித்சாவுக்கு தமிழ்நாட்டு முதல்வர் அறிவுரை! இந்திய மொழிகள் நாள் கொண்டாடி கலாச்சாரத்தையும் வரலாற்றையும் வலுப்படுத்துங்கள்

ஒன்றிய அரசு முன்னெடுக்க வேண்டியது ஹிந்தி நாள் அல்ல. இந்திய மொழிகள் நாள்! இந்திய மொழிகள் நாள், கொண்டாடி கலாச்சாரத்தையும் வரலாற்றையும் வலுப்படுத்துங்கள் என்று ஒன்றிய அமைச்சர் அமித்சாவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெளிவுபடுத்தியுள்ளார்.
 
30,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: நேற்றைய ஹிந்தி நாள் கொண்டாட்டத்தை யொட்டி குஜராத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்சா, நமது கலாச்சாரம் மற்றும் வரலாற்றின் உயிரைப் புரிந்துகொள்ள ஹிந்தியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். இது வரலாற்றுப் பிறழ்வும், போலியானதும் ஆகும் என்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தெளிவுபடுத்தியுள்ளார்.

கலாச்சாரத்தையும் வரலாற்றையும் புரிந்துகொள்ள ஹிந்தி மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்பது பல மொழிகளை பேசும் மக்களை கொண்ட இந்திய ஒன்றியத்தின் வேற்றுமையில் ஒற்றுமை என்ற பண்பாட்டுக்கு நேர்எதிரானது. ஹிந்தி என்கிற மொழி உருவாவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழும், தமிழின் பண்பாட்டு விழுமியங்களும் இன்றைய இந்திய ஒன்றிய நிலப்பரப்பையும் அதன் எல்லைகளையும் கடந்து பரவியிருந்ததை வரலாற்று ஆசிரியர்கள் பலரும் எடுத்துக் காட்டியுள்ளனர்.

அத்தைகைய சிறப்பு வாய்ந்த தமிழையும் மற்ற மாநில மொழிகளையும் பின்னுக்குத் தள்ளி ஹிந்தி தான் இந்தியாவின்  மொழி என்கிற கட்டமைப்பை உருவாக்க நினைப்பது ஆதிக்கத்தின் வெளிப்பாடே ஆகும். 

அலுவல் மொழியான ஹிந்தியின் ஆதிக்கத்தில் இருந்து தமிழ் உள்ளிட்ட இந்தியாவின் தனித்தன்மை மிக்க மொழிகளை காப்பதற்காக அரசியல் சட்டத்தின் வழியே போடப்பட்ட வேலிதான் இணை அலுவல் மொழி என்கிற ஆங்கிலம். அந்த வேலி இன்றளவும் வலுவாக இருப்பதால்தான் செம்மொழியான தமிழ் மொழியை ஆதிக்க மொழி ஹிந்தியால் மேய முடியவில்லை.

ஹிந்தி மொழியால் மட்டுமே இந்திய மக்களை ஒன்றிணைக்க முடியும் என்ற தவறான கருத்தை ஒன்றிய பாஜக அரசு திணித்து வருகிறது. ஹிந்தி மொழி மீதான முன்னுரிமை பல்வேறு மாநிலங்களில் உள்ள மக்களிடையே தேவையற்ற அதிருப்தியை உருவாக்கி அவர்களைப் பிரிக்கிறது.

இது ஒருமைப்பாடு மிக்க இந்தியா. அதனைப் பிளவுபடுத்தி பார்க்கும் முயற்சிகள் வேண்டாம். இந்திய மொழிகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் அரசியல் சாசனத்தின் எட்டாவது அட்டவணையில் தற்போது இடம்பெற்றுள்ள 22 மொழிகளையும் இந்தியாவின் அதிகாரப்பாட்டு மொழிகளாக ஆக்க வேண்டிய நேரம் இது. இந்த நேரத்தில், இந்திய மொழிகள் நாள் கொண்டாடி கலாச்சாரத்தையும் வரலாற்றையும் வலுப்படுத்துங்கள் என்று அமித்சாவுக்கு, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,372.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.