Show all

வல்வில் ஓரியாய், பாஜக அரசுக்கு எதிராய் கணைகள் தொடுத்த, ராகுல் பஜாஜ்! 1.இந்தியாவில் அசாதாரணமான சூழல் நிலவுகிறது

நாட்டில் அச்சம் தரும் சூழல் நிலவுவதாக இந்தியாவின் மூத்த தொழிலதிபர் ராகுல் பஜாஜ், எக்னாமிக் டைம்ஸ் நாளிதழ் ஒருங்கிணைத்த விருது வழங்கும் விழா நிகழ்வில், இந்திய உள்துறை அமைச்சர் அமித்சா முகத்துக்கு நேரே விமர்சித்தார்.

15,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: எக்னாமிக் டைம்ஸ் நாளிதழ் ஒருங்கிணைத்த விருது வழங்கும் விழா நேற்று மும்பையில் நடந்தது. இந்த நிகழ்வில் அமைச்சர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தொழிலதிபர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொண்டு பேசிய ராகுல் பஜாஜ், “எங்களுக்கு அச்சமாக இருக்கிறது. இந்தச் சூழலை என் தொழில்துறை நண்பர்களும் அறிவார்கள். ஆனால், அவர்கள் அதைச் சொல்வதில்லை. நான் வெளிப்படையாகச் சொல்கிறேன்” என்றார்.

“ஐக்கிய முற்போக்கு அரசின் இரண்டாவது ஆட்சியின் போது, நாங்கள் யாரை வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்ல முடியும். அது வேறு. நீங்கள் நன்றாகச் செயல்படுகிறீர்கள். மறுக்கவில்லை. ஆனால், உங்களை விமர்சிக்க எங்களுக்கு ஒருவித அச்சம் இருக்கிறது. உங்களை விமர்சித்தால் எப்படி எடுத்துக் கொள்வீர்கள். அது சரியாக எடுத்துக் கொள்ளப்படுமா என்ற அச்சம் அது” என்றார்.

சில மாதங்களுக்கு முன்பு பஜாஜ் முதலீட்டாளர்கள் கூட்டத்தில் பேசிய ராகுல் பஜாஜ், ஊர்திகள் துறை மிக மோசமான சரிவைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. உற்பத்திக்கு ஏற்ப சந்தையில் நுகர்வு இல்லை. தனியார் துறையில் பெரியளவில் முதலீடுகளும் மேற்கொள்ளப்படவில்லை. இந்தச் சூழலில் வளர்ச்சி எங்கிருந்து வரும். வானத்திலிருந்தா வளர்ச்சி வரும்? என்றார்.

மேலும் அவர், “நாட்டில் வளர்ச்சி இல்லை என்பதை இந்திய அரசு வேண்டுமானால் சொல்லாமல் மறைக்கலாம். ஆனால், ஐ.எம்.எப், உலக வங்கி உள்ளிட்டவை கடந்த மூன்று, நான்கு ஆண்டுகளாக இந்திய வளர்ச்சியில் வீழ்ச்சியிருப்பதை வெளிச்சமிட்டு காட்டுகின்றன. இந்திய அரசு வேண்டுமானால் மகிழ்ச்சியான முகத்தைக் காட்டலாம். ஆனால், உண்மை அப்படி இல்லை. அதனை மறைக்கவும் முடியாது என்றார்.

நேற்று நடந்த நிகழ்வில் கும்பல் கொலைகள் குறித்தும் பேசிய ராகுல் பஜாஜ், “கும்பல் கொலைகள் சகிப்பின்மை சூழலை உண்டாக்குகிறது. எங்களுக்கு அச்சமாக இருக்கிறது. சில விசயங்களைப் பேச விரும்பவில்லை. ஆனால், கும்பல் கொலைகள் தொடர்பாக யாரும் தண்டிக்கப்படவில்லை என்றார்.

நான் பிறவியிலேயே நிறுவனமயத்திற்கு எதிரானவன். அது ஐக்கிய முற்போக்கு அரசாங்கமாக இருக்கட்டும் அல்லது எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். இப்போது யாரை வேண்டுமானாலும் தேசப்பற்றாளர் என அழைத்துக் கொள்ள முடிகிறது. காந்தியை யார் சுட்டது என உங்களுக்குத் தெரியும். அதில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருக்கிறதா? அவர் இப்போது மட்டும் காந்தியைக் கொன்றவரை துதிபாடவில்லை முன்பே அப்படிச் செய்திருக்கிறார். ஆனால், நீங்கள்தான் அவருக்குத் தேர்தலில் நிற்க வாய்ப்பளித்தீர்கள். யார் என்றே தெரியாத அவரை வெல்லவும் வைத்தீர்கள். அவரை மன்னிப்பது கடினம் எனப் தலைமை அமைச்சர் கூறுகிறார். ஆனால், அவருக்கு வாய்ப்பளித்துக் கொண்டே இருக்கிறீர்கள், என்று பஜாஜ் கூறினார்.

இந்த நிகழ்வில் நாட்டின் முதன்மையான தொழிலதிபர்களான முகேஷ் அம்பானி, குமார் மங்கலம் பிர்லா மற்றும் சுனில் பாரதி மிட்டல் கலந்து கொண்டனர்.

இந்தியாவில் ஒரு பதற்றமான சூழல் நிலவுவதாக பஜாஜ் கூறியதற்குப் பதிலளித்த அமித்சா, “பயத்தைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால், இங்கு யாரும் பயப்பட வேண்டாம் என்றுதான் சொல்வேன். நரேந்திர மோதி குறித்து நாளிதழ்கள் நிறைய விமர்சித்து எழுதி இருக்கின்றன. இன்னும் எழுதிக் கொண்டிருக்கின்றன. எங்களுக்கு எதிராக எழுதப்படுவதுதான் அதிகம் என்று நினைக்கிறேன். நீங்கள் கூறியதைப் போல், ஒரு சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. அதை மேம்படுத்த நாங்கள் முயற்சிப்போம். ஆனால், அதற்காக யாரும் அச்சப்படத் தேவையில்லை. எங்களுக்கு எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் குறித்து கவலை இல்லை. ஒரு வெளிப்படைத்தன்மையான அரசாங்கத்தை நடத்தி வருகிறோம். எங்களை யாரேனும் விமர்சித்தாலோ அதன் உண்மையை ஆராய்ந்து மேம்படுத்துவோம்” என்றார் அவர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,353.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.