Show all

தமிழ்நாட்டு மீனவர்களைத் தாக்கிய இந்தியக் கடற்படையினர்! இலங்கைக் கடற்படைக்கு ஓய்வு கொடுக்கவா? குமுறும் வைகோ

இலங்கைப் படைத்துறையினராவது, நாங்கள் தமிழில் பேசுவதைப் புரிந்து கொண்டு அவர்கள் காட்டும் அடாவடிக்கான காரணத்தைத் தமிழிலும் தெரிவிப்பர். தமிழிலோ ஆங்கிலத்திலோ ஒற்றைச்சொல்லும் பேசாது, ஹிந்தியில் மட்டுமே, பேசிக்கொண்டு, இந்தியக் கடற்படையினர் எங்கள் மீது நடத்திய தாக்குதல் புரியாத குழப்பமாக இருக்கிறது என்று புலம்பியுள்ளனர் தமிழ்நாட்டு மீனவர்கள்.

09,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5124: தமிழ்நாட்டு மீனவர்களை இந்தியக் குடிமக்கள் என்று புரிந்து கொள்ளாது, அதார் அட்டையைக் காட்டியும் கூட, தமிழ்நாட்டு மீனவர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர் இந்தியக் கடற்படையினர். 

இலங்கைப் படைத்துறையினராவது, நாங்கள் தமிழில் பேசுவதைப் புரிந்து கொண்டு அவர்கள் காட்டும் அடாவடிக்கான காரணத்தைத் தமிழிலும் தெரிவிப்பர். தமிழிலோ ஆங்கிலத்திலோ ஒற்றைச்சொல்லும் பேசாது, ஹிந்தியில் மட்டுமே, பேசிக்கொண்டு, இந்தியக் கடற்படையினர் எங்கள் மீது நடத்திய தாக்குதல் நாம் இந்தியாவில்தாம் வாழ்கிறோமா? என்கிற புரியாத குழப்பமாக இருக்கிறது என்று புலம்பியுள்ளனர் தமிழ்நாட்டு மீனவர்கள்.

மயிலாடுதுறை மாவட்டம், வானகிரி மற்றும் தரங்கம்பாடி, நாகப்பட்டினம் மாவட்டம் செருதூர், காரைக்கால் மாவட்டம், கிளிஞ்சல்மேடு ஆகிய பகுதிகளிலிருந்து அகவை முப்பது உடைய சுதீர், அகவை நாற்பத்தியிரண்டு உடைய செல்வகுமார், அகவை நாற்பத்தியாறு உடைய செல்லதுரை, அகவை நாற்பத்தி ஒன்று உடைய சுரேஷ், அகவை இருபத்திநான்கு உடைய விக்னேஸ்வரன், அகவை முப்பத்தியொன்று உடைய மகேந்திரன், அகவை இருபத்திநான்கு உடைய பாரத், அகவை இருபத்திநான்கு உடைய பிரசாந்த், அகவை முப்பத்தியிரண்டு உடைய மோகன்ராசு, மற்றும் வீரவேல் ஆகிய பத்து பேர்கள் குமரிக்கடலில் மீன் பிடிக்க சென்றனர். 

இவர்கள் அனைவரும் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவு 3 மணிக்கு ஜெகதாம்பட்டினத்திற்கு கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது, இந்திய கடற்படையின் ரோந்து கப்பல், மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த படகைச் சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கியிருக்கிறது.

பின்னர் மீனவர்களின் படகிற்குள் சென்று சோதனையிட்ட பிறகு, ஹிந்தியில் ஏதேதோ கேட்டுள்ளனர். என்ன நடக்கிறது என புரியாமல் மீனவர்கள் தவித்துள்ளனர். தொடக்கத்தில் இலங்கை கடற்படைதான் நம்மை தாக்குகிறது என்று நினைத்துள்ளனர். கடற்படையினர் ஹிந்தியில் மட்டுமே பேசிய காரணத்தால், அவர்கள் இந்தியக் கடற்படையினர் என்று மீனவர்களால் புரிந்து கொள்ள முடிந்;திருக்கிறது. 

மீனவர்கள் சென்ற படகில் இந்தியக் கொடி கட்டப்பட்டிருந்ததைப் பார்த்த பின்பும் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர் இந்தியக் கடற்படையினர். இதில் வீரவேல் என்ற மீனவர் படுகாயமடைந்து மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்துபோனார்.

படகில் சென்ற மீனவர்களை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். மீனவர் அனைவரையும் மண்டியிடச் செய்துள்ளனர். கடற்படையில் இருந்த அதிகாரிகள் அனைவரும் ஹிந்தி மொழியில் பேசியதற்கு, மீனவர்கள் தமிழில் பதில் கூறியுள்ளனர். அவர்கள் மீனவர்களின் தமிழ் முறையீட்டை புரிந்து கொள்ள கொஞ்சமும் முயலவில்லை. தமிழ்நாட்டுப் பகுதிக்கு ரோந்து வரும் அவர்களில் ஒற்றைத் தமிழ்வீரரும் இடம்பெற்றிருக்கவில்லை என்று தெரியவருகிறது.

மீனவர்களை தரையில் அமரச் சொல்லி காலணி காலால் அவர்கள் மீது ஏறி நின்றும், கைகளை பின்னால் கட்டி மண்டியிடச் செய்தும் அடித்து சித்ரவதை செய்துள்ளனர். அவர்களுக்குள்ளே ஹிந்தியில் பேசிக்கொண்டு, இவர்களைப் பார்த்து ஏளனமாக சிரிப்பதும், ஷூ அணிந்த காலால் எட்டி உதைப்பதுமாக நடந்துள்ளனர். 

அனைவரின் ஆதார் அட்டைகளையும் வாங்கிப் பார்த்துவிட்டும் அடாவடிகளை கொஞ்சமும் மிச்சம் வைக்கமால் தொடர்ந்துள்ளனர். 

சிங்கள கடற்படையினர் தமிழக மீனவர்களை தாக்கி எப்படி நடந்து கொள்கின்றனரோ அதைவிட கொடூரமாக இந்திய கடற்படையினர் நடந்து கொண்டதாகத் தெரியவருகிறது.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது அறிக்கையில், 'இந்தியக் கடற்படையினர் தமிழ்நாட்டு மீனவர்களை எட்டி உதைத்து, காலால் மிதித்து ஏளனமாக நகைத்திருப்பது தமிழ்நாட்டு மக்கள் நெஞ்சில் ஆறாத காயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 

இந்திய உள்துறை அமைச்சர் அமித்சா ஹிந்திதான் இந்தியா என்று பேசுவதால் இந்தியக் கடல்படையினர் கூட ஹிந்தி மொழி பேசாதவர்களை அந்நியர்களாக நினைக்கும் அக்கிரமம் தலை தூக்கி உள்ளது. இதை ஒரு போதும் பொறுத்துக்கொள்ள முடியாது. ஹிந்தி மொழி தெரியாததால் தமிழ்நாட்டு மீனவர்களை இழிவுப்படுத்தி தாக்கிய இந்திய கடற்படையினர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், ஒன்றிய அரசு தமிழ்நாட்டு மீனவர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மயிலாடுதுறை மாவட்டம் வானகிரி கிராமத்தைச் சேர்ந்த மீனவர் திரு. வீரவேல், என்பவர், இந்தியக் கடற்படையினரால் சுடப்பட்டதில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது என்ற செய்தியை அறிந்து, மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

காயமடைந்த நிகழ்வில் திரு.வீரவேல், சிகிச்சைக்காக உடனடியாக இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசுமருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு சிகிச்சை பெற்று வரும் மீனவர் திரு.வீரவேலுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளதோடு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் இரண்டு இலட்சமும் வழங்க உத்தரவிட்டுள்ளேன்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிகிச்சை பலனின்றி வீரவேல் மருத்துவ மனையில் காலமாகியுள்ளார்.

இந்நிலையில், மீனவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு விசாரித்து குறித்து, இந்திய கடற்படை அளித்துள்ள விளக்கத்தில், இந்தியா-இலங்கை பன்னாட்டு எல்லைக்கு அருகே பால்க் விரிகுடாவில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது, ஐயத்திற்கு இடமான படகு தென்பட்டதாகவும், பலமுறை எச்சரித்தும் மீனவர்கள் படகை நிறுத்தவில்லை என்றும், படகை நிறுத்தும் வகையில் எச்சரிக்கைக்காக சுடப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,413.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.