Show all

பிரிட்டன் தலைமைஅமைச்சராக பதவியேற்க உள்ளார் ரிசிசுனக்! போட்டியில் இருந்து பொன்னி மார்டாண்ட் விலகியதைத் தொடர்ந்து

இந்தியாவை ஒரு காலத்தில் ஆட்சி செய்த பிரிட்டனையே ஆட்சி செய்யும் தலைமைஅமைச்சராக இந்திய வம்சாவளியான ரிசிசுனக் பதவியேற்கவுள்ளார், என்றெல்லாம்கூட சில ஊடகங்கள் ரிசிசுனக் தலைமைஅமைச்சர் பொறுப்பேற்கவுள்ளதைக் கொண்டாடி மகிழ்கின்றன.

08,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5124: பிரிட்டன் தலைமைஅமைச்சர் தேர்தலுக்கான போட்டியில் இருந்து பொன்னி மார்டாண்ட் விலகியதை தொடர்ந்து தலைமைஅமைச்சராக பதவியேற்க உள்ளார் ரிசிசுனக். 

ரிசிசுனக்கின் இந்தியத் தொடர்பு சில ஊடகங்களால் பேரளவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. நாற்பத்தியிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டனின் சவுதாம்ப்டன் நகரத்தில் பிறந்தவர் இந்த ரிசிசுனக். இவரது பெற்றோர் யாஷ்விர் மற்றும் உசாசுனக் இந்திய - ஆப்பிரிக்க பின்புலத்தை கொண்டவர்கள். 

ஆப்பிரிக்காவின் கென்யா நாட்டில் பிறந்தவர் ரிசிசுனக்கின் தந்தை யாஷ்விர். யஷ்வீரின் பின்புலம் ஒருங்கிணைந்த பிரிட்டிஷ் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சார்ந்தது. ரிசிசுனக்கின் தந்தை வழி மூதாதையர்கள் பிறந்த இடம் தற்போது பாகிஸ்தானின் குஜ்ரான்வாலாவில் உள்ளது. 

அறுபத்தியிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரிசிசுனக்கின் தாத்தாவும் பாட்டியும் கென்யாவுக்கு குடிபெயர்ந்தனர். தற்போது அப்பகுதி டான்சானியா எல்லையின் கீழ் வருகிறது. அதன் பின்னர் பிரிட்டன் சென்ற அவரது தந்தை யாஷ்விர் சுனக் நலங்கு மையத்தில் பணிபுரிந்தவர். அவரது தாய் உசாசுனக் மருந்தகம் நடத்தி வந்தார். 

ரிசிசுனக். உலக புகழ்பெற்ற வின்செஸ்டர் கல்லூரி, பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகங்களில் அரசியல், பொருளாதாரம், தத்துவம் மேலாண்மை கல்வியைப் பயின்றார்.

மூன்றாண்டுகள் கோல்டுமேன் சாக்ஸ் முதலீட்டு வங்கியில் ஆய்வாளராக பணியாற்றிய அவர், இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயணமூர்த்தி நடத்தி வந்த கடாமரான் வென்சர்ஸ் நிறுவனத்தின் இயக்குநராகவும் இரண்டு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

தான் பணியாற்றிய நிறுவனத்தின், இணை நிறுவனர் நாராயணமூர்த்தியின் மகள் அக்சதா மூர்த்தியைதான் ரிசிசுனக் திருமணம் செய்து இருக்கிறார். தன் மனைவி அக்சதாவை கலிபோர்னியாவில் சந்தித்ததாக தெரிவித்துள்ளார் ரிசிசுனக். எங்களுக்கு கிருஷ்ணா, அனோஸ்கா என 2 மகள்கள் உள்ளனர். அவர்கள் என்னை மகிழ்ச்சியோடும், பரபரப்போடும் வைத்துள்ளார்கள். என்று குடும்பம் குறித்து தெரிவித்து இருந்தார் சுனக். தன்னுடைய ஓய்வு நேரத்தில் உடற்பயிற்சி செய்வது, துடுப்;பாட்டம், கால்பந்து விளையாடுவது, திரைப்படம் பார்ப்பது போன்றவற்றைச் செய்வதாகத் தெரிவித்திருந்தார் ரிசிசுனக். 

'இந்தியாவை ஒரு காலத்தில் ஆட்சி செய்த பிரிட்டனையே ஆட்சி செய்யும் தலைமைஅமைச்சராக இந்திய வம்சாவளியான ரிசிசுனக் பதவியேற்கவுள்ளார்' என்றெல்லாம்கூட சில ஊடகங்கள் ரிசிசுனக் தலைமைஅமைச்சர் பொறுப்பேற்கவுள்ளதைக் கொண்டாடி மகிழ்கின்றன.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,412.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.