Show all

நடுவண் மோடிஅரசின் ஆதார் கட்டாயத்தின் போக்கும்-சாக்கும்

16,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஆதார் சட்டத்திற்கு அரசியல் சாசன அங்கீகாரம் உள்ளதா என்கிற மனுவை நாளை உச்சஅறங்கூற்று மன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள இருக்கிறது. தனி நபர் அடையாளத்திற்காக என்று நடுவண் அரசால் ஆதார் திட்டம் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

முதலில் தனிநபர் விவரங்கள் சேகரிக்கப்படுவதற்கான ஒரு அடையாள எண்ணாக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. அப்போது எதிர்கட்சியான பா.ஜ.க தனிநபர் விவரங்களைச் சேகரிப்பதா என்று இந்த திட்டத்தை கடுமையாக எதிர்த்தது. மக்கள் மத்தியலும் எதிர்ப்பு கிளம்பியது.

காங்கிரஸை அடுத்து ஆட்சிக்கு வந்த பா.ஜ.கவிற்கு தனிநபர் விவரங்களைச் சேகரிப்பது அவர்களின் கார்ப்பரேட் நோக்கங்களுக்கு தேவையாகப் பட்டது. அதனால் ஆதார் திட்டத்தை தூசு தட்டி எடுத்தார்கள்; ஆனால் ஊடகங்களோ மக்களோ எதிர்ப்பு காட்டா வகையில்.

வெளிநாட்டு வங்கிகளிலிருந்து இந்தியர்கள் பணத்தை மீட்டு தலைக்கு 15இலட்சம் வங்கிக் கணக்கில் போடப்படும் என்று பாஜக தேர்தல் வாக்குறுதி கொடுத்திருந்த நிலையில்- ‘நடுவண் மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகள், சலுகைகள் ஆகியவற்றைப் பெறவும், வங்கி கணக்கு, எண்ணோடு ஆதார் எண்ணை இணைக்கும் திட்டம்என்ற தலைப்பில் பாஜக தனிநபர் விவரம் சேகரிக்கும் ஆதார் திட்டத்தைக கொண்டுவந்தது.’ இதனால் பொதுமக்கள் ஆகா நமக்கு 15இலட்சம் கிடைத்து விடும் என்று பெருமகிழ்ச்சி அடைந்தனர்.

தற்போது அரசின் எல்லாவித செயல்பாட்டிற்கும் ஆதார் எண் இணைப்பை நடுவண் அரசு கட்டயமாக்கியுள்ளது. இணைப்பிற்கு 17,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119 (31.03.2017) வரை கால அவகாசமும் வழங்கி உள்ளது.

மக்களுக்காக பாஜக ஒரு ஆணியும் பிடுங்காது; பாஜகவின் அனைத்து நடவடிக்கைகளும் கார்ப்பரேட் நிறுவனங்களின் வளர்ச்சிக்காகதாம் என்பதை புரிந்து கொண்ட மக்களில் பலரும் இதை எதிர்த்து குரல் கொடுத்து வருகிறார்கள்.

கர்நாடகாவைச் சேர்ந்த மேத்யூ தாமஸ் என்கிற நபர், ஆதார் அட்டை மூலம் அரசு தனிநபர் சுதந்திரத்தில் தலையிடுகிறது என்றும், பயோ மெட்ரிக் மூலம் பதியப்படும் தகவல்கள் திருடப்படுவதற்குமான சாத்தியக்கூறுகள் இருப்பதாகக் கூறியும், அரசின் கட்டாய ஆதார் சட்டத்திற்கு அரசியல் சாசனத்தில் இடம் இல்லை என்றும் உச்ச அறங்கூற்றுமன்றத்தில் வழக்குத் பதிகை செய்தார்.

இந்நிலையில், மேத்யூ தாமஸ் தொடர்ந்த வழக்கு இன்று அறங்கூற்றுவர் செல்லமேஸ்வரர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த அறங்கூற்றுவர் செல்லமேஸ்வர், ஆதார் தொடர்பாக ஏற்கனவே நிறைய வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அனைத்து வழக்குகளும் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்தார். சமீபத்தில் ஒன்பது அறங்கூற்றுவர்கள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, தனிநபர் சுதந்திரம் என்பது அரசியல் சாசனம் அவர்களுக்கு வழங்கி இருக்கும் உரிமை என்றும், அதில் அரசு எந்தவித சமரசமும் செய்யக்கூடாது என்றும் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் அணியமான நடுவண் அரசின் வழக்கறிஞர், ஆதார் என்பது அரசின் சலுகைகளை எளிதில் பெற வகை செய்யும் ஒரு வசதி தான் என்றும், அதை இணைக்க 17,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119 (31.03.2017) வரை கால அவகாசம் வழங்கி இருப்பதாகவும் நமக்கு தெரிவிக்கப் பட்ட நோக்கத்தையே தெரிவித்தார்.

ஒரு சில மனுதாரர்கள் ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைக்கச் சொல்லுவது சட்டத்திற்கு புறம்பானது என்றும், அரசியல் சாசன விதிகளிலேயே இல்லாத ஒரு சட்டம் என்றும் தங்கள் வழக்கில் தெரிவித்து இருக்கிறார்கள். இது சம்பந்தமான வழக்கை விசாரித்த அறங்கூற்றுமன்றம் வங்கி கணக்குகள், செல்பேசி எண்களை ஆதாரோடு இணைக்கச் சொல்லி மக்களைக் கட்டாயப்படுத்தக்கூடாது என்றும் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

இந்நிலையில், ஆதார் சட்டத்திற்கு அரசியல் சாசன அங்கீகாரம் இருக்கிறதா இல்லையா என்பது பற்றிய விசாரணை நாளை உச்சஅறங்கூற்றுமன்றத்தில் தொடங்க உள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.