Show all

ஹிந்துத்துவாவாதிகள் சாதி வேறுபாடுகளைப் போதிக்கத் தொடங்கிவிட்டார்கள்: கமல்

16,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஹிந்து தீவிரவாதம் இல்லை என்று இனி யாரும் சொல்ல முடியாது என நடிகர் கமல்ஹாசன் சர்ச்சையை கிளப்பி உள்ளார்.

சமூக பிரச்னைகளைக் கையிலெடுத்து, தீவிர அரசியலை நோக்கி பயணித்து கொண்டிருக்கும் கமல், வார இதழ் ஒன்றில் தொடர்ந்து எழுதி வருகிறார். இந்த வாரம், அவர் எழுதியுள்ள கட்டுரையில், ஏற்கனவே அவர் கீச்சுவில் பதிவிட்ட கொசஸ்தலை ஆற்றில் கொட்டப்படும் கழிவுகள்; எண்ணூர் கழிமுக ஆக்கிரமிப்பு விசயங்கள், அதன் ஆபத்துகளை விரிவாக பேசியிருக்கிறார்.

அதோடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழகத்தில் ஹிந்துத்துவ சக்திகள் மெதுவாக ஊடுருவுவது பற்றி கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு கமல் அளித்த பதில்:

கலாச்சாரம், திருவிழாக்கள், இறை வழிபாடு, இசை, கலை என்று பல வழிகளிலும் ஹிந்துத்துவாவை பரப்ப முற்படுகின்றனர். மற்ற மதங்களில் உள்ள வலதுசாரிகளும் பதிலுக்கு எதிர்வாதம் செய்யவும் எதிர்வினை ஆற்றவும் கிளம்புகிறார்கள். இது தமிழகத்தில் மட்டுமல்ல, நாடு தழுவிய ஒரு சீரழிவு.

ஒரு தலைமுறையே சாதிய வேறுபாடுகள் தெரியாமல் வளர்ந்து வரும் வேளையில், ஹிந்துத்துவாவாதிகள் புகுந்து சாதி வேறுபாடுகளைப் போதிக்கத் தொடங்கிவிட்டார்கள். அதன் பிரதிபலிப்பாக இணையதளத்தில் திரைப்படக் கலைஞர்களைச் சாதிவாரியாகப் பிரித்துப் பட்டியலிடும் வேலைகள் பகிரங்கமாக நடக்கின்றன.

முன்பெல்லாம், இத்தகைய ஹிந்து வலதுசாரியினர் வன்முறையில் ஈடுபடாமல், வாதப் பிரதிவாதங்கள் மூலமே எதிராளியை கையாண்டனர். இப்போது அது ஒத்து வராததால் அவர்களும் வன்முறையில் ஈடுபட ஆரம்பித்துவிட்டனர்.

‘எங்கே ஓர் ஹிந்துத் தீவிரவாதியைக் காட்டுங்கள்?’ என்ற சவாலை இனி அவர்கள் விட முடியாது. அந்த அளவுக்கு அவர்கள் கூட்டத்திலும் தீவிரவாதம் பரவியிருக்கிறது.

வாய்மை வெல்லும் என்ற நம்பிக்கை போய், வலிமை வெல்லும் என்ற நம்பிக்கை, நம்மை காட்டுமிராண்டிகள் ஆக்கிவிடும். இருந்தாலும், தமிழகம் சமூகச் சீர்திருத்தத்திற்கு முன்னுதாரண மாநிலம் ஆகும். இன்றைய நிலையில் அந்த முன்னுதாரணமாய் கேரளம் திகழ்கிறது. அதற்கு வாழ்த்துகள். இவ்வாறு கமல் தெரிவித்திருக்கிறார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.