Show all

கச்சத்தீவு திருவிழாவுக்கு, இந்தாண்டு தமிழகத்தில் இருந்து அதிகமானோர் செல்வார்கள்

கச்சத்தீவு புனித அந்தோணியார் கோயில் திருவிழா வரும் 20, 21ம் தேதிகளில் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள தமிழகத்தில் இருந்து 91 படகுகளில் 3,456 பேர் செல்கின்றனர். கச்சத்தீவு புனித அந்தோணியார் கோயில் திருவிழா ஆண்டுதோறும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் நடைபெறும். 2 நாள் நடக்கும் இந்த திருவிழாவில் கலந்துகொள்ள இலங்கை மற்றும் தமிழகத்தில் இருந்து அதிகமான பக்தர்கள் வருகை தருவர். 1983ம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட கலவரத்தையடுத்து கச்சத்தீவு திருவிழா நிறுத்தப்பட்டது; மீண்டும் 2002ல் தொடங்கியது. இந்தாண்டுக்கான திருவிழா வருகிற பிப்.20ம் தேதி மாலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று இரவு அந்தோணியார் தேர்ப்பவனி நடைபெறும். மறுநாள் (பிப்.21) சிறப்புத் திருப்பலி நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள தமிழகத்திலிருந்து 3 ஆயிரத்து 456 பேர் பதிவு செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் 20ம் தேதி காலை ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து முன்பதிவு செய்யப்பட்ட 91 படகுகளில் புறப்பட்டுச் செல்கின்றனர்.

 

திருவிழாவில் பங்கேற்றுவிட்டு 22ம் தேதி ராமேஸ்வரம் திரும்புகின்றனர். படகில் செல்பவர்களுக்கு, மீன்வளத்துறை மூலம் உயிர்காப்பு மிதவை வழங்கப்படுகிறது. கச்சத்தீவு திருவிழாவுக்கு, கடந்த ஆண்டைவிட இந்தாண்டு தமிழகத்தில் இருந்து அதிகமானோர் செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இலங்கை கடற்படை கைப்பற்றிய படகுகளை விடுவிக்காத பட்சத்தில், கச்சத்தீவு செல்ல படகுகளை வழங்கமாட்டோம் என்று ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்திருந்தனர். இதனால், உயரதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து 5 நாட்களுக்கு முன், மீனவர்கள் தங்களது படகுகளை வழங்க முன்வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.