Show all

கர்நாடகா அரசுக்கு! தமிழர்களைப் பாதுகாக்க வைகோ வேண்டுகோள்

03,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கர்நாடகத்தில் வாழும் தமிழர்களைப் பாதுகாக்க வேண்டும் என்று கர்நாடக அரசை ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், கர்நாடக மாநிலத்தில், பெங்களூரு மற்றும் மைசூருவில் நடிகர் விஜய் நடித்த ‘மெர்சல்திரைப்பட விளம்பரப் பதாகைகளைக் கிழித்ததோடு, படத்தட்டிகளையும் உடைத்திருக்கிறார்கள். திரை அரங்குகளில் படம் பார்த்துக் கொண்டிருந்த தமிழர்களை விரட்டியடித்து வெளியேற்றி, திரைப்படத்தை ஓடவிடாமல் கன்னட வெறி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

கர்நாடகத்தில் தமிழ்ப் படங்களைத் திரையிடக்கூடாது என்று 1991ல் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தி விரட்டியதைப் போல, மீண்டும் தாக்குவோம் என மிரட்டல்கள் விடுத்துள்ளனர். கர்நாடக மாநிலத்திலிருந்து தமிழர்கள் தெரிவிக்கும் தகவல்கள் மிகவும் கவலை அளிக்கின்றன. உச்ச அறங்கூற்று மன்றத் தீர்ப்பை உதாசினம் செய்து, தமிழ்நாட்டின் அடிப்படை உரிமையான காவிரி நீரை மேட்டூருக்குத் திறந்து விடாமலும், சட்டவிரோதமாக ஆடுதாண்டும் காவிரியில், கர்நாடகம் அணைகள் கட்டுகின்ற நிலையிலும், அம்மாநிலத்தில் வாழுகின்ற தமிழர்கள், தமிழ்நாட்டுக்கு ஆதரவாக எந்த அறவழிக் கிளர்ச்சியிலும் ஈடுபடாமல், அமைதிகாத்து வாழ்ந்து வருகின்றனர்.

நிலைமை இப்படி இருக்க, தமிழர்கள் மீது வெறுப்பை விதைத்து, எதிர்ப்பை வளர்த்து வருகின்ற கன்னட அமைப்புகள், தமிழ்த் திரைப்படங்களைத் திரையிடக்கூடாது என்று கலவரத்தில் ஈடுபடுவதைத் தடுத்து, தமிழர்களைப் பாதுகாக்க வேண்டிய கடமையைக் கர்நாடக அரசு செய்ய வேண்டும்.

வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.