Show all

ஆளப்போறான் தமிழன் என்று பாடி, தமிழினத்தைக் குப்புறக் கவிழ்த்து விட்டார் விஜய்

03,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: விஜய் நடிப்பில் தீபாவளியன்று வெளியான மெர்சல் திரைப்படம்,

படம் வெளியாவதற்கு முன்பே பல பிரச்னைகளைச் சந்தித்திருந்தது. படப் பெயர் வழக்கில் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டு பிறகு நீக்கப்பட்டது.

படத்தில் புறாக்களை பயன்படுத்திய காட்சிக்கு விலங்குகள் நல வாரியத்திடம் அனுமதி பெறாததால் கடைசி நேரத்தில் இழுபறி நிலவியது. தணிக்கைச் சான்றிதழ் கடைசி நேரத்தில் பெறப்பட்டு திட்டமிட்டபடி தீபாவளிக்கு வெளிவந்து ரசிகர்களை உற்சாகமாக்கியது.

மெர்சல்படத்தில் விஜய் நடுவண், மாநில அரசுகளின் குறைகளைக் கடுமையாகச் சாடி வசனங்கள் பேசியிருக்கிறார்.

படத்தில், சரக்குமற்றும் சேவைவரி குறைபாடுகள் குறித்தும், பணமதிப்பு இழப்பு பாதிப்புகள் குறித்தும் சில வசனங்கள் இடம்பெறுகின்றன. அந்த வசனங்கள் மீது தமிழக பா.ஜ.க-வினர் குற்றம் சாட்டினர். இதையடுத்து, அந்த வசனங்களை நீக்கினால் மட்டுமே தொடர்ந்து படத்தைத் திரையிட முடியும் எனவும் எச்சரிக்கை செய்தனர்.

மெர்சல்படத்துக்கு எதிராக பா.ஜ.க-வினரின் பாய்ச்சலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இயக்குநர் பா.ரஞ்சித், ‘அந்தக் காட்சிகளை மக்கள் ரசித்துப் பார்க்கிறார்கள். பாஜக குற்றம் குறை தொடர்பான வசனங்களை நீக்கவேண்டியதில்லைஎனக் கருத்துத் தெரிவித்திருந்தார். திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் சிலரும் பா.ஜ.க-வினரின் செயல் கண்டிக்கத்தக்கது எனக் கூறியிருந்தனர்.

ஆளப் போறான் தமிழன் என்று பாடிய ‘மெர்சல்படக்குழுவிற்கு மக்கள் நடுவே நல்ல ஆதரவு இருந்தபோதிலும், பா.ஜ.க-வினரின் மிரட்டலுக்கு பணிந்து, தமிழினத்தைக் குப்புறத் தள்ளும் விதமாக அந்தக் குறிப்பிட்ட வசனங்கள் நீக்கப்படும் என தயாரிப்பாளர் முரளி தெரிவித்துள்ளார்.

தணிக்கைக் குழு அனுமதித்ததை மிரட்டி திரும்பப் பெற வைக்க பா.ஜ.க முயற்சிக்கிறது. எனில், தணிக்கைக் குழு எனும் அமைப்பு எதற்கு எனும் கேள்வியும் மக்களிடையே எழுந்துள்ளது.

எதிர்காலத்தில் தணிக்கைக் குழு இது போன்ற நெருக்குதல்களுக்கு ஆளாகும் என்ற சந்தேகம் மக்களிடையே வலுத்துள்ளது. அரசுக்கு எதிரான வசனங்களையோ, காட்சிகளையோ வைக்கும் உரிமை கூட திரைப்படங்களுக்குக் கிடையாதா? பெரிய நடிகர், பெரிய தயாரிப்பாளரின் படங்களுக்கே இந்த நிலை என்றால் சிறு படங்களில் எப்படி அரசியல் பேச முடியும்? இப்படியே போனால், மக்களைச் சிந்திக்கத் தூண்டும் படங்கள் அனைத்தும் தடுக்கப்படும் அவலம்தான் நிகழும்.

-மெர்சல் படக்குழு தம்பிகளா! அந்த ஆளப் போறான் தமிழன் பாட்டையும்; கொஞ்சம் நீக்கிடுங்கப்பா!

ஆளப்போறான் தமிழன் என்று பாடி, தமிழினத்தைக் குப்புறக் கவிழ்த்து விட்டார் விஜய். அவர் அரசியலுக்கு வருவார் என்பதெல்லாம் பெப்பே.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.