Show all

உலகிலேயே மிகக் குறைந்த விலையாக ரூ.251க்கு சீர்மிகுசெல்பேசி

நடுவண் அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தைப் பிரபலப்படுத்துவதற்காக இந்திய செல்பேசி தயாரிப்பு நிறுவனமான ரிங்கிங் பெல்ஸ், அறிமுகம் செய்துள்ள மலிவு விலை சீர்மிகுசெல்பேசி  நாடு முழுவதும் வரவேற்பை பெற்றுள்ளது. மிகக் குறைந்த விலை என்பதால் முன்பதிவு செய்வதற்கு ஒரே நேரத்தில் ஏராளமானோர் ஆன்லைனில் குவிந்ததால், இணையதளம் முடங்கியது.

இந்நிலையில், செல்பேசி தயாரிப்பு சங்கங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இது குறித்து விசாரிக்க வேண்டும் என நடுவண் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.

 

ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் உலகிலேயே மிகக் குறைந்த விலையாக ரூ.251க்கு சீர்மிகுசெல்பேசியை நேற்று அறிமுகப்படுத்தியது. இதனை நடுவண் அமைச்சர் மனோகர் பாரிக்கர் அறிமுகம் செய்து வைப்பதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் மனோகர் பரிக்கர் வராததால், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பா.ஜ., மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி இந்த சீர்மிகுசெல்பேசியை  அறிமுகம் செய்து வைத்தார்.

 

இந்தக் குறைந்த விலை சீர்மிகுசெல்பேசிக்கான முன்பதிவு இன்று காலை 6 மணிக்கு துவங்கி, பிப்ரவரி 20ம் தேதி இரவு 8 மணி வரை நடைபெறும் எனக் கூறப்பட்டிருந்ததால், ஒரே நேரத்தில் ஏராளமானோர் முன்பதிவு செய்ய முயன்றனர். அதிகபட்சமாக ஒரு நிமிடத்திற்கு 6 லட்சம் பேர் முன்பதிவு செய்ய முயன்றதால், இணையதளம் முடங்கியது. இதனால் ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் முன்பதிவு சேவையைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும், 24 மணிநேரத்திற்குப் பிறகு மீண்டும் முன்பதிவு துவங்கும் எனவும் முன்பதிவிற்கான பிரத்யேக இணையதளத்தில் தகவல் வெளியிட்டது. இப்போது பதிவு செய்வோருக்கு 4 மாதங்கள் கழித்து போன் தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

 

இதற்கிடையில், ரூ.251க்கு சீர்மிகுசெல்பேசி வழங்கும் திட்டத்திற்கு இந்திய செல்பேசி உற்பத்தியாளர் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் அறிவித்துள்ள வசதிகளைக் கொண்ட சீர்மிகுசெல்பேசி  மிகக் குறைந்தபட்சமாக ரூ.2600க்கு தான் விற்பனை செய்ய முடியும்.

 

அத்துடன் வரி, விற்பனை லாபம் ஆகியவற்றை சேர்த்தால் ரூ.4000 வரை ஆகும். அதனால் ரூ.251 க்கு சீர்மிகுசெல்பேசி  வழங்குவதாக அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்களை ஏமாற்றும் செயல். இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என செல்பேசி  உற்பத்தியாளர் சங்கத்தினர் நடுவண் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.