Show all

திக் திக் திக்! கணினியுகத்தில், வசதியை நோக்கி முன்னெடுக்கும் ஒவ்வொரு அடியிலும், மோசடிக்காரர்களுக்கு ஒவ்வொரு கதவைத் திறக்கின்றோம்

01,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பொதுமக்களுக்கான வங்கிச் சேவைகள் நாளுக்கு நாள் விரிவடைந்து வரும் வேளையில், வங்கி மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. இணைய வங்கி எனப்படும் இணையதளப் பரிவர்த்தனை, காசோலை, அட்டைகள் உள்ளிட்ட அனைத்துப் பரிவர்த்தனைகளிலும் மோசடிகள் நடைபெற்று வருகின்றன. வங்கிகள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் போதிலும் நாளுக்கு நாள் புதுப்புது வடிவங்களில் மோசடிகளும் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில், தலைநகர் டெல்லியில் ஒரு புதுமையான வங்கி மோசடி அரங்கேறியுள்ளது.

டெல்லியில் உள்ள சென்டரல் பேங்க் ஆப் இந்தியா வங்கிக் கிளையில் ராஜேந்தர் சிங் என்பவர் நடப்புக் கணக்கு வைத்துள்ளார். திடீரென அவரது கணக்கில் இருந்து ரூ.11.5 லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில், ஒருவரை காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் இந்த மோசடி நடந்த விதம் தெரியவந்துள்ளது.

அதாவது, ராஜேந்திர சிங்கின் வங்கிக் கணக்கு விவரங்களை, அவற்றை திருடும் மோசடி கும்பலிடமிருந்து இவர்கள் பெற்றுள்ளனர். அதை வைத்து கணக்கு வைத்துள்ள வங்கிக்குச் சென்று, வங்கி ஊழியரிடம் செல்பேசி எண்ணை மாற்ற வேண்டும் என கூறியுள்ளனர். வங்கி ஊழியர் வந்திருப்பவர் ராஜேந்திர சிங்தானா என உறுதிப்படுத்தாமல், அந்த நபரிடம் ஒரு விண்ணப்பத்தைப் பெற்றுக் கொண்டு மோசடிக் கும்பல் கொடுத்த மொபைல் எண்ணை மாற்றியுள்ளார். இதன் பின்னர், வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு கணினிமய மூலம் மோசடிக் கும்பல் மாற்றியது. செல்போனுக்கு வரும் ஒருமுறை பயன்படுத்தக் கூடிய கடவுச் சொல்லை (ஓடிபி) பயன்படுத்தி மோசடியை நிகழ்த்தி யுள்ளனர். வாடிக்கையாளரை உறுதிப்படுத்தாமல் செல்பேசி எண்ணை மாற்றியதே இப்பிரச்சினைக்கு காரணமாகும்.

இந்நிலையில், இதுகுறித்த பாதுகாப்பு அம்சங்கள் குறித்து பொதுத் துறை வங்கி ஒன்றின் மேலாளர் கோவிந்தனிடம் கேட்டபோது, வாடிக்கையாளரிடம் இருந்து கடிதம் பெற்று அதனுடன், அவருடைய ஆதார் அட்டையின் ஜெராக்ஸ் நகலில் கையொப்பம் பெற்று இணைப்போம். அதே போல், செல்பேசி எண்ணை மாற்ற வாடிக்கையாளரிடம் இருந்து கையெழுத்துடன் கூடிய கடிதம் பெறுவதுடன், அவரது கடவுச்சீட்டு அளவு புகைப்படமும் விண்ணப்பத்துடன் இணைக்கப்படும். இதே போல் காசோலை, இணையவங்கிச் சேவை உள்ளிட்ட வசதிகளை பெறுவதாக இருந்தாலும் மேற்கூறிய நடை முறையே கடைப்பிடிக்கப்படுகிறது என்றார்.

இதுகுறித்து, பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி.செல்வராஜிடம் கேட்டபோது, வாடிக்கையாளரின் கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை சரிபார்த்தப் பிறகு செல்பேசி எண்ணை மாற்றிக் கொடுக்க வேண்டும் என்றார்.

இதுகுறித்து, சுழியம் குற்றவியல்  அதிகாரிகளிடம் கேட்டபோது, கணினிமய வங்கிச் சேவைக்குப் பயன்படுத்தப்பட்ட மடிக்கணினி ஐபி முகவரி அல்லது செல்பேசி விவரங்களை வைத்தும் அவர், பணம் மாற்றம் செய்துள்ள வங்கிக் கணக்கு விவரங்களை வைத்தும் மோசடி செய்த நபரை பிடிக்க முடியும். வங்கி அதிகாரிகள், பொதுமக்கள் சற்று விழிப்புடன் இருந்தாலே இத்தகைய மோசடிகளைத் தடுக்க முடியும் என்றனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,944.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.