Show all

வடசென்னை! வெற்றிமாறனின் வெறித்தனமான வெற்றித்தயாரிப்பு: படம்பார்த்தவர்களிள் பாராட்டு

01,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120:  இந்த படம் ரத்தமும், சதையுமாக தான் இருக்கப் போகிறதென, அதை இயக்குநர் நமக்கு உணர்த்த வருகிறார் ரத்தமும், சிறிது சதையும் ஒட்டியுள்ள கத்தியுடன் படத்தின் முதல் காட்சி தொடங்கும்போதே 

படத்தில் தனுஷ், சமுத்திரகனி, அமீர், கிஷோர், டேனியல் பாலாஜி, பவன் என பல பேர் நடித்திருந்தாலும், மொத்தமாக பார்க்கும்போது படத்தின் கதாநாயகன் வெற்றிமாறன்தான். இயக்குநர்களுக்காக படம் பார்க்கும் ஒரு கூட்டத்தை சத்தமில்லாமல் உருவாக்கிவிட்டார் வெற்றிமாறன். படத்தில் வரும் சிறைச்சாலைக் காட்சிகளில் தெரிகிறது வெற்றிமாறனின் அட்டகாசம். 

ரொம்பவும் பழக்கப்பட்ட, நாம் அதிகம் கேள்விப்பட்ட கதை தான் என்றாலும் அதை சொன்ன விதத்தில் ஈர்க்கிறார் வெற்றிமாறன். நடைபெற போகும் ஒரு சம்பவம் தான் கதை. அதை சுற்றி நடக்கும் சம்பவங்கள், மற்றும் முதன்மையான அந்த தருணத்தை தீர்மானிப்பது போலான திரைக்கதை. பல்வேறு கால ஓட்டங்களை மாற்றி, மாற்றி, முன்னும், பின்னுமாக சொல்லப்பட்ட படம் தான் என்றாலும் அதை எளிதில் பார்வையாளனால் புரிந்து கொள்ளக் கூடியதாய் அமைந்தது தான் வெற்றிமாறனின் திரைக்கதைக்கான பலம். 

அன்பு என்னும் கதாபாத்திரத்தில் வரும் தனுசுக்கு நடிப்பில் இது மற்றுமொரு பாய்ச்சல். வாழ்நாளுக்கான படம் என்பார்களே அப்படி ஒரு படம் தனுசுக்கு. பங்க் முடியை வெட்டிய பிறகு வந்து நின்று குறும்புத்தனம் செய்யும்போது, உண்மையாகவே 18 அகவைப் பையனைப் போல மாறிவிடுகிறார். அப்படியே சில காலம் கழித்து மீசை, தாடியுடன் வடசென்னை தவுலத் கெட்டப்பில் வரும்போது, நடிப்பில் தனுஷ் வெளிப்படுத்தும் பக்குவம் அபாரம்..

விருப்பமில்லாமல் செய்துவிட்ட துரோகத்தின் சுவடுகளை தாங்கிக்கொண்டும், அதே நேரம் தனது இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள முற்படும் கதாபாத்திரம் சமுத்திரகனியின் குணா கதாபாத்திரம். கூனிக்குறுகி, விருப்பமின்றி துரோகச் செயலில் ஈடுபடும்போதும், கிசோரிடம் எகிறும்போதும், ஆண்டிரியாவிடம் பம்மிப் பதுங்கும்போதும் சமுத்திரகனியின் நடிப்பு அபாரம்.

கிஷோர், பவன், ராதாரவி, டேனியல் பாலாஜி என படத்தில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒவ்வொரு குணாதிசயம். ஒவ்வொருவரின் கதாபாத்திரத்தை வடிவமைத்ததில் வெற்றிமாறனின் உழைப்பு போற்றப்படக்கூடியது. படத்தில் வரும் சின்ன கதாபாத்திரம் கூட தங்கள் பணியை சிறப்பாக செய்துள்ளனர்.

இரண்டாவது பாதியே ஆண்டிரியாவை சுற்றி தான் நடக்கிறது. சென்னை தமிழ் பேசுகையில் கொஞ்சம் தடுமாறினாலும், தைரியமான அந்த காட்சிக்காகவே ஆண்டிரியாவை பாராட்டலாம். தனுசே அடங்கிப் போகும் அளவிற்கான மிரட்டலும், உருட்டலுமான கதாபாத்திரம் ஐஸ்வர்யா ராஜேசுடையது. 

படத்தின் மிகப்பெரிய பலம் என்றால் இசை, படத்தொகுப்பு, சண்டைப்பயிற்சி. பொதுவாக வடசென்னை சார்ந்த படமென்றால் பாடல்களில் தூள் கிளப்பிவிடுவார் சந்தோஷ் நாராயணன். இதிலும் அப்படியே. பாடல்களை விட படத்தின் பின்னணி இசைக்கு அதிகம் மெனக்கெட்டிருக்கிறார். ஒவ்வொருவருக்கும் தனித்தனி இசை, தனுசின் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஒவ்வொரு இசை என வெளுத்து வாங்கியிருக்கிறார் மனிதர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,944.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.