Show all

சுங்கச் சாவடிகளை அகற்ற லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் .

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளை அகற்ற வேண்டும், ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் சுங்க வசூல் செலுத்த அனுமதிக்க வேண்டும், லாரி வாடகையில் டி.டி.எஸ். பிடித்தம் செய்யக்கூடாது என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

2-வது நாளாக இந்த போராட்டம் நீடிக்கிறது. இதனால் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 7 லட்சம் லாரிகள் இயங்கவில்லை. அனைத்து லாரிகளும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு லாரிகள் வரவில்லை.

அதேபோல் தமிழ்நாட்டில் இருந்தும் லாரிகள் வெளி மாநிலங்களுக்கு செல்லவில்லை. இந்தப் போராட்டம் காரணமாக சரக்கு போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து வரக்கூடிய பழங்கள், காய்கறிகள், ஜவுளி வகைகள், அரிசி, மார்பிள் போன்ற சரக்குகள் வருவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தில் இருந்து முட்டை, கறிக்கோழி, காய்கறிகள் அனுப்புவது முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

லாரி வேலைநிறுத்தம் குறித்து மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் நல்லதம்பி கூறியதாவது:-

லாரி வேலை நிறுத்தம் 2-வது நாளாக நீடிக்கிறது. இதன் மூலம் லாரி உரிமையாளர்களுக்கு கடந்த 2 நாட்களில் 21 கோடிக்குழு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அரசுக்கு 2 நாட்களுக்கு 400 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

லாரி வேலைநிறுத்தம் காரணமாக அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர்ந்து வருகிறது. வட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் பருப்பு, வெங்காயம், பூண்டு, பழங்கள், கோழித்தீவனம் உள்ளிட்ட பொருட்கள் வராததால் அவைகளின் விலையும் உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் இருந்து இரும்பு கம்பிகள், ஜவ்வரிசி, வெல்லம், நெய், நூல்பேரல்கள் உள்ளிட்ட பொருட்கள் இதர மாநிலங்களுக்கு செல்லாமல் தேங்கி கிடக்கிறது.

இந்த வேலைநிறுத்தம் தொடர்பாக பிரதமர் உடனடியாக தலையிட்டு லாரி உரிமையாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி இந்த வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

சேலம் மாவட்டம் முழுவதும் சுமார் 90 சதவீத லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன. எப்போதும் பரபரப்பாக காணப்படும் சேலம் செவ்வாய்ப்பேட்டை பகுதியில் 100-க்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. லாரிகள் வேலை நிறுத்தத்தால் சேலம் மாவட்டத்தில் சுமார் 500 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளன.

இதுகுறித்து சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சென்னகேசவன்,

லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தால் சேலம் மாவட்டத்தில் உள்ள 33 ஆயிரம் லாரிகளில் நேற்று 90 சதவீதம் ஓடவில்லை. வெளியூர்களில் இருந்து வந்து சரக்குகள் ஏற்றி வந்த ஒருசில லாரிகள் மட்டுமே இயக்கப்பட்டன. இந்த லாரிகளும் சரக்குகளை இறக்கிய பிறகு நிறுத்தப்பட்டன.

இன்று சேலம் மாவட்த்தில் 100 சதவீதம் லாரிகள் ஓடாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக சேலம் மாவட்டத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் மஞ்சள், ஜவ்வரிசி, சிமெண்ட், எவர்சில்வர் தகடுகள், இரும்பு பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளன.

லாரி உரிமையாளர்களுக்கு தினமும் ரூ.2 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. லாரி டிரைவர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் என 2 லட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

நடுவண் அரசு எங்களது கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்காவிட்டால் 3 நாட்களுக்கு பிறகு அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து தேசிய நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவு எடுப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

2-வது நாளாக லாரி ஸ்டிரைக் நீடிப்பதால் தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கில் சரக்குகள் தேக்கம் அடைந்துள்ளன. ஒருசிலர் சரக்குகளை ஆம்னி பஸ்களிலும் ரெயில்களிலும் அனுப்பி வைத்தனர். அதே போல் அரசு பஸ்களிலும் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் ஏற்றி வருவதை காண முடிந்தது.

தமிழ்நாடு முட்டை உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கரையான்புதூர் நல்லதம்பி,

லாரி அதிபர்களின் போராட்டத்திற்காக நேற்றும், இன்றும் ஆதரவு கொடுத்தோம். நேற்றும் இன்றும் முட்டை லாரிகள் செல்லவில்லை.

இன்று காலை முதல் பண்ணைகளில் முட்டைகளை சேகரித்து வருகிறோம். இன்று மாலை முதல் முட்டை லாரிகள் செல்லும். லாரி உரிமையாளர்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

தமிழக அரசும் முட்டை லாரிகளுக்கு போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

லாரி வேலைநிறுத்த ஆதரவு தெரிவித்து 2-வது நாளாக மணல் லாரிகள் இயங்கவில்லை என்று நாமக்கல் மாவட்ட அனைத்து மணல் லாரி உரிமையாளர் சங்க தலைவர் வக்கீல் கைலாசம் கூறினார்.

ஆனால் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செல்ல ராசாமணி கூறும்போது, நேற்று ஒரு நாள் மட்டும் லாரி ஸ்டிரைக்கிற்கு ஆதரவு கொடுத்து மணல் லாரிகள் இயங்கவில்லை. இன்று காலை 5 மணி முதல் மீண்டும் மணல் லாரிகள் இயங்கி வருகின்றன என்றார். கட்டுமான பணியில் பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும், மணல் விலை உயராமல் இருக்கவும் மக்களின் நலன் கருதி மணல் லாரிகள் இயக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.