Show all

இந்த ஆண்டு பத்து நாட்டு தலைவர்கள் பங்கேற்கும் சிறப்பான குடியரசு நாள் விழா அணிவகுப்பு டெல்லியில்

13,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: டெல்லியில் இன்று குடியரசு நாள் விழா அணிவகுப்பு கோலாகலமாக நடக்கிறது. இதற்கு பல அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. பத்து நாட்டு தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கிறார்கள்.

நாட்டின் குடியரசு நாள் இன்று நாடு முழுவதும் சம்பிரதாயமாகக் கொண்டாடப்படுகிறது. வழக்கம்போல், டெல்லியில் பிரமாண்ட அணிவகுப்பு நடைபெறுகிறது.

நாட்டின் பெருமையை பறைசாற்றும்வகையிலும், பல்வேறு மாநிலங்களின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையிலும் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் இடம் பெற உள்ளன. வழக்கமாக, ஏதேனும் ஒரு நாட்டின் தலைவர் குடியரசு நாள் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பார். ஆனால், இந்த ஆண்டு, ‘ஆசியான் உச்சி மாநாட்டுக்காக டெல்லிக்கு வந்த 10 ஆசியான் நாடுகளின் தலைவர்கள், இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கிறார்கள்.

குடியரசு நாள் அணிவகுப்பையும், 10 நாட்டு தலைவர்களின் வருகையையும் கருத்தில் கொண்டு, டெல்லியில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டெல்லி காவல்துறை, நடுவண் பாதுகாப்பு படைகள் ஆகியவற்றை சேர்ந்த சுமார் 50 ஆயிரம் வீரர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்களில் கருப்புப்பூனை படை வீரர்களும் அடங்குவர்.

அணிவகுப்பு நடைபெறும் ராஜபாதை, இந்தியா கேட் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் 14 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுவார்கள்.

உயரமான கட்டிடங்களில், குறிபார்த்து சுடுவதில் திறமையான வீரர்கள் நிறுத்தப்படுவார்கள். முக்கியமான இடங்களில் கண்காணிப்பு படக்கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றில் பதிவாகும் காட்சிகளை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறைகளும் திறக்கப்பட்டுள்ளன. மோப்ப நாய்களும் வரவழைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு கருதி, சில மெட்ரோ தொடர்வண்டி நிலையங்கள் மூடப்படுகின்றன.

பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதை தடுக்க நாசவேலை தடுப்பு குழுக்கள் களத்தில் இறக்கப்பட்டுள்ளன.

ஆளில்லா குட்டி விமானங்கள், பாரா கிளைடர்கள் ஆகியவை மூலம் தாக்குதல் நடத்தும் முயற்சிகளை முறியடிப்பதற்கும் சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. டெல்லி காவல்துறையின் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

விமான நிலையம், தொடர்வண்டி நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,679

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.