Show all

இணையத்தில் தீயாய் பரவும் தகவல்: மாணவன் முன் மண்டியிட்டு அறிவுரை கூறிய தலைமை ஆசிரியர்

12,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: பள்ளிகளில் படித்து வரும் மாணவ- மாணவிகள் தவறு செய்தால் ஆசிரியர்கள் கண்டிப்பது வழக்கம்.

ஆனால், சமீப காலமாக பல்வேறு பள்ளிகளில் மாணவர்களைக் கண்டிப்பதற்கே ஆசிரியர்கள் தயங்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இருந்தாலும் மாணவர்களை நன்றாக படிக்க வைப்பதற்கும், அவர்களை தேர்ச்சி பெற வைப்பதற்கும் தங்களது பணிகளை ஆசிரியர்கள் சிறப்பாக செய்து வருகிறார்கள்.

விழுப்புரத்தில் காமராசர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் படித்துவரும் மாணவர்களின் கல்வித் திறன் குறைவாக இருந்தது.

இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக பாலு (அகவை 56) என்பவர் பொறுப்பேற்றார். அவர் பல்வேறு கட்டுப்பாடுகளை ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் விதித்தார். அதன் முதல்படியாக மாணவர்களின் தேர்ச்சி விழுக்காட்டை உயர்த்த நடவடிக்கை எடுத்து வருகிறார்.

சரியாக படிக்காத மாணவர்களுக்கு தண்டனை கொடுக்க அவர் விரும்பவில்லை. அதற்குப்பதிலாக மாணவர்கள் முன்பு மண்டியிட்டு வணங்கி நீங்கள் நன்றாக படிக்க வேண்டும். அப்போதுதான் வாழ்க்கையில் உயர்ந்த இடத்தை அடைய முடியும் என்ற அறிவுரை கூறினார். இந்தக் காணொளிக்காட்சி புலனத்தில் (வாட்ஸ்-அப்) தீயாகப் பரவிவருகிறது.

இது குறித்து தலைமை ஆசிரியர் பாலு கூறுகையில், ‘மாணவர்களை திட்டாமலும், அடிக்காமலும், அன்பு வழியில் திருத்த முடியும் என்பதற்காக இந்த எளிமையான செயலில் ஈடுபட்டு வருகிறேன் என்றார்.

மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில், அவர்களிடையே சரி சமமாக தலைமை ஆசிரியர் பாலு இதுபோன்ற செயலில் ஈடுபட்டு வருவது கல்வித்துறையினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

நிறைய அரசு தமிழ்வழிப் பள்ளிகளில் சில ஆசிரியப் பெருமக்கள் இது போன்ற மாற்று முயற்சிகளின் மூலம் தங்கள் ஈடுபாட்டை புலப்படுத்துவது மகிழ்ச்சி அளிப்பதாய் இருக்கிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,678

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.