Show all

ஆறு ஆண்டுகள், ரூ60 கோடி பணம், சோதனை முயற்சியில் தோற்றுப் போய் வீணடித்தது, தொடர்வண்டித் துறை

13,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: நாட்டின் அதிவேக காதிமான் விரைவுத் தொடர்வண்டிக்கு இணையாக மும்பையில் புறநகர் தொடர்வண்டியை இயக்குவதற்காக கடந்த 6 ஆண்டுகளாக தொடர்வண்டி துறை செய்த முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. இதற்காக செலவு செய்த ரூ.60 கோடியும் வீணாகிப்போனது.

இதைப் பற்றி தொடர்வண்டி துறை அதிகாரிகள் வாய்திறக்காத நிலையில், தகவல் உரிமைச்சட்டத்தின் மூலம் இப்போது அம்பலமாகியுள்ளது.

மும்பையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பதிகை செய்த தகவல் உரிமைச் சட்ட மனுவின் மூலம், மும்பை தொடர்வண்டி விகாஸ் நிறுவனம், லக்னோவில் உள்ள தொடர்வண்டி வடிவமைப்பு மற்றும் தர அமைப்பு ஆகியவை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

நாட்டின் அதிகவேக காதிமான் விரைவுத் தொடர்வண்டி; மணிக்கு 160 கி.மீ வேகத்தில் செல்லக்கூடியது. இதே வேகத்துக்கு இணையாக 145 கி.மீ வேகத்தில் மும்பையில் புறநகர் ரெயிலை இயக்க தொடர்வண்டி துறை திட்டமிட்டது.

இதற்காக சென்னை ஐ.சி.எப். தொழிற்சாலையில் இருந்து பிரத்யேகமாக தொடர்வண்டி பெட்டிகள் செய்யப்பட்டு கொண்டுவரப்பட்டன. தனியாக இருப்பு பாதைகள், சிக்னல்கள் உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டன.

ஆனால் தொடர்வண்டித் துறை செய்த பணிகளை வைத்து மணிக்கு 140 முதல் 145 கி.மீ. வேகத்தில் புறநகர் தொடர்வண்டி சாத்தியம் என்றே மக்கள் நம்பினர். இதற்காக சோதனை ஓட்டம் நிகழ்த்தப்பட்டது. விரார், தஹானு ஆகிய இடங்களுக்கு இடையே சோதனை ஓட்டம் நடந்தது.

ஆனால், நடந்த கதையே வேறு, மணிக்கு அதிகபட்சமாக 145 கி.மீ வேகம் வரை; ஓடும் என எதிர்பார்த்த அதிகாரிகளுக்கு ஏமாற்றமே காத்திருந்தது.

தொடர்வண்டி உச்சபட்ச வேகத்தை இறுதி வரை எட்டமுடியவில்லை, சாதாரண புறநகர் தொடர்வண்டிபோல், 80கி.மீ வேகத்துக்கு மேல் செல்லத் தகுதியில்லை என அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இதனால், வெறுப்படைந்த அதிகாரிகள், அதிவேக ஓட்டத்துக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த தொடர்வண்டியை விரார் நிலையத்தில் உள்ள பணிமனையில் காட்சிப் பொருளாக நிறுத்தி வைத்தனர்.

சோதனை முயற்சிக்காக ரூ.60 கோடியை செலவு செய்து, அது வீணாய் போனதை வெளியில் தெரியாமல் இருக்க அதிகாரிகள் அமைதியாக இருந்துவிட்டனர்.

ஆனால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த தகவல் இப்போது அம்பலமாகி உள்ளது. சம்பந்தப் பட்டவர்கள் தண்டிக்கப் படுவார்களா? மோடிக்கு தான் வெளிச்சம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,679

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.