Show all

மக்களை பழிவாங்குவதாக சோனியா, ராகுல்காந்தி மீது மோடி குற்றச்சாட்டு

தேர்தல் தோல்விக்கு மக்களை பழிவாங்குவதற்காக பாராளுமன்றத்தை முடக்குவதாக சோனியா, ராகுல்காந்தி மீது பிரதமர் மோடி குற்றஞ் சாட்டினார்.

 

 

சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் அசாம் மாநிலத்துக்கு பிரதமர் மோடி நேற்று சென்றார்.

 

அங்குள்ள திப்ரூகர் நகரில் ரூ.10 ஆயிரம் கோடி செலவில் நெகிழி மற்றும் மெழுகு பொருட்கள் தயாரிப்பதற்கான 2 பெட்ரோகெமிக்கல் தொழிற்சாலைகளை அவர் தொடங்கி வைத்தார்.

 

அப்போது மோடி பேசுகையில்,

இந்த 2 ஆலைகளையும் மாநிலத்தில் வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்கள் தங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பாக எடுத்துக் கொள்ளவேண்டும். இந்த தொழிற்சாலைகளுக்கு ஏற்ற வகையில் இங்கு இன்னும் பல சிறிய தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டால் அது இயற்கை வளத்தை மதிப்படையச் செய்வதுடன் வேலை வாய்ப்பையும் அதிகரிக்கச் செய்யும்.

 

ஒடிசா, உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், பீகார், அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சி அடையவேண்டும் என்பதில் நடுவண் அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. கிழக்கு மாநிலங்கள் வளர்ச்சி பெறாவிட்டால் இந்தியாவின் முன்னேற்றம் முழுமை அடையாது. இதற்காக அண்டை நாடுகளான மியான்மர், தாய்லாந்து, இந்தோனேஷியா ஆகியவற்றுடன் நமது கிழக்கு மாநிலங்களும் பயன் அடையும் வகையில் ‘கிழக்கு கொள்கை’ என்னும் திட்டத்தை நடுவண் அரசு வகுத்து உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

 

பின்னர் மொரான் என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் மோடி பேசும்போது சோனியாவும், ராகுல் காந்தியும் பாராளுமன்றத்தை முடக்குவதாக குற்றம் சாட்டினார்.

அவர்கள் இருவருடைய பெயர்களையும் குறிப்பிடாமல் மோடி பேசியதாவது:-

ஒரு குடும்பத்தினர் மட்டும் நாட்டில் எதிர்மறை அரசியலை நடத்துகின்றனர். பாராளுமன்றத்தில் காங்கிரஸ் தவிர வேறு கட்சிகளின் தலைவர்களும் இருக்கின்றனர். அவர்கள் மோடிக்கு எதிராக செயல்பட்டாலும் கூட பாராளுமன்றம் இயங்கவேண்டும் என்றும், பாராளுமன்ற அலுவல்கள் நடைபெறவேண்டும் எனவும் விரும்புகிறார்கள்.

 

ஆனால், கடந்த பாராளுமன்ற தேர்தலில் (2014) தோல்வி அடைந்து, 400 பேரில் இருந்து 40 பேராக குறைந்து போனவர்கள் மோடியை பணியாற்றவிடாமல் தடுக்கின்றனர். அவர்கள் பாராளுமன்ற மேலவையில் தடைகளையும், இடையூறுகளையும் ஏற்படுத்தவேண்டும் என்று திட்டமிட்டு உள்ளனர்.

 

அந்தச் சதித்திட்டத்தில் தொடர்ந்து அவர்கள் செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றனர். தேர்தலில் அடைந்த தோல்விக்காக மக்களை பழிவாங்குவதற்காகவே அவர்கள் இதைச் செய்கின்றனர்.

 

தொழிலாளர்கள் பயன்பெறும் விதமாக கொண்டு வரப்பட்டுள்ள போனஸ் உச்சவரம்பு அதிகரிப்பு சட்ட மசோதா, பிரம்மபுத்திராவில் போக்குவரத்து தொடர்பான மசோதா போன்ற பல முக்கியமான மசோதாக்களை அந்தக் குடும்பம் நிறைவேற்ற விடாமல் தடுக்கிறது.

 

இதுபோல எதிர்மறை மற்றும் முட்டுக்கட்டை போடும் அரசியலில் யாராவது ஈடுபடுவார்களேயானால் இது அவர்களுக்கும் பயன் அளிக்காது, நாட்டுக்கும் நன்மை கிடைக்காது.

மாநிலத்தில் பல கட்சிகள் ஆட்சி அமைக்க நீங்கள் ஆதரவு அளித்து இருக்கிறீர்கள். அசாமின் கனவுகள் நனவாக வரும் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஒருவாய்ப்பை மக்கள் அளிக்கவேண்டும்.

 

அசாமில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் மக்களின் வாழ்க்கை தரத்தில் நிச்சயம் நல்ல மாற்றம் ஏற்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.