Show all

கேரள சட்டமன்றத்தில் ஆளுநர் உரையை வாசிக்க விடாமல் எதிர்க்கட்சிகள் அமளி

கேரள சட்டமன்றத்தில் ஆளுநர் உரையை வாசிக்க விடாமல் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

கேரளாவில் சோலார் பேனல் ஊழல், மது பார்கள் உரிம ஊழல் ஆகியவை அரசியல் சூறாவளியைக் கிளப்பி விட்டு உள்ளன. இதனால் முதல்அமைச்சர் உம்மன் சாண்டி பதவி விலக கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான எதிர்க்கட்சிகள் வற்புறுத்தி வருகின்றன.

 

இந்த நிலையில் கேரள சட்டமன்றக் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் நேற்று தொடங்கியது. அவை கூடியதும் ஆளுநர் பி.சதாசிவம் மாநில அரசின் கொள்கைகள் அடங்கிய உரையை வாசிக்கத் தொடங்கினார்.

 

அப்போது எதிர்க்கட்சித் தலைவர் வி.எஸ். அச்சுதானந்தன் எழுந்து,

‘இந்த அரசு ஊழலில் திளைக்கிறது. ஆளுநர் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்றார்.

 

அதற்கு ஆளுநர் பி.சதாசிவம், ‘ஜனநாயக ரீதியில் அரசுக்கு எதிராக உங்களது எதிர்ப்பைத் தெரிவித்து இருக்கிறீர்கள். இதுவே போதும். அரசியல் சாசனத்தின்படி எனது கடமைகளையும் செய்யவிடுங்கள்’ என்று கூறிவிட்டு உரையைத் தொடர்ந்தார்.

 

ஆனால், அவர் உரையை வாசிக்க முடியாதவாறு எதிர்க்கட்சி சட்டமன்றஉறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக எழுந்து அமளியில் ஈடுபட்டனர். அவர்கள், லஞ்ச குற்றச்சாட்டுக்கு பொறுப்பேற்று உம்மன்சாண்டியும், சம்பந்தப்பட்ட அமைச்சர்களும் ராஜினாமா செய்யவேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் காண்பித்தனர். அப்போது சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் கொடியேரி பாலகிருஷ்ணன் பேச முயன்றார்.

எதிர்க்கட்சிகளின் செயலால் அதிருப்தி அடைந்த ஆளுநர் பி.சதாசிவம், கொடியேரி பாலகிருஷ்ணனிடம்,

‘இது நாளை உங்களுக்கும் நடைபெறலாம். உங்களுக்கு எதிர்ப்பைக் காட்ட உரிமை இருக்கிறது என்றால் எனக்கு ஜனநாயக கடமைப்படி உரையை வாசிக்கும் பொறுப்பு உள்ளது. அமைதியாக உட்காருங்கள் அல்லது அவையைவிட்டு வெளியேறுங்கள்’ என்றார்.

 

தொடர்ந்து ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சி சட்டமன்றஉறுப்பினர்கள்,

‘கறைபடிந்த அமைச்சகத்தின் கொள்கைகள் எங்களுக்கு தேவையில்லை’ என்று வாசகங்கள் கொண்ட பதாகைகளைக் கையில் ஏந்தியவாறு அவையில் இருந்து ஒட்டுமொத்தமாக வெளியேறினர்.

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.