Show all

33கோடிக்கு புதிய ரூ.2000 சேகர்ரெட்டிக்கு கிடைத்த வகை காண்பதரிதே

08,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ரூ.500, ரூ.1,000 உள்ளிட்ட ரூபாய் தாள்கள் செல்லாது என்ற அறிவிப்பை கடந்த ஆண்டு 23,ஐப்பசி (8,நவம்பர்) மோடி அறிவித்தார். அதனைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள பணம் அச்சிடும் அரசு அச்சகங்களில் இருந்து புதிய ரூபாய் தாள்கள் அச்சிடப்பட்டு ரிசர்வ் வங்கிக்கு அனுப்பப்பட்டன. ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் உள்ள பணக் கிடங்குகளுக்கு அனுப்பப்பட்ட புதிய ரூபாய் தாள்கள், அங்கிருந்து பல்வேறு வங்கிகளுக்கு பிரித்து அனுப்பப்பட்டன.

இதற்கிடையே தொழிலதிபர் சேகர் ரெட்டியின் எஸ்.ஆர்.எஸ். நிறுவனத்தில் கடந்த ஆண்டு 23,கார்த்திகை (8,டிசம்பர்) வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது பெருமளவு பணம், நகைகள் கைப்பற்றப்பட்டன. கைப்பற்றப்பட்ட பணத்தில் ரூ.33 கோடியே 60 லட்சம் மதிப்புள்ள புதிய 2 ஆயிரம் ரூபாய்தாள்களும் இருந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக நடுவண் புலனாய்வுச் செயலக அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து புலன் விசாரணை செய்து வருகின்றனர். எனினும் இந்த வழக்கில் 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத காரணத்தால், சேகர் ரெட்டி உள்ளிட்டோர் அறங்கூற்று மன்றத்தால் பிணையில்; விடுவிக்கப்பட்டனர்.

இந்தச் சூழலில் புதிய 2 ஆயிரம் ரூபாய் தாள்கள் சேகர் ரெட்டி தரப்பினருக்கு எவ்வாறு கிடைத்தன என்பதை கண்டறிவதில் நடுவண் புலனாய்வுச் செயலகத்திற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

புதிய ரூபாய் தாள்கள் பாதுகாப்பு மிக்க அரசு அச்சகங்களில் அச்சடிக்கப்பட்டு, ரூபாய் தாள்களின் வரிசை எண்கள் உள்ளிட்ட தகவல்களுடன் ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டன. அங்கிருந்து ரிசர்வ் வங்கியின் பணக் கிடங்குக்கு அனுப்பப்பட்டு, பின் வங்கிகளுக்கு அவை விநியோகிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு வங்கிகளுக்கு விநியோகம் செய்வதற்காக பல்வேறு பணக் கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட ரூபாய் தாள்களின் வரிசை எண்களை ரிசர்வ் வங்கி குறித்து வைத்துக் கொள்ளவில்லை என்ற அதிர்ச்சிகரமான தகவல் தெரிய வருகிறது.

சேகர் ரெட்டியிடம் கைப்பற்றப்பட்ட ரூபாய் தாள்கள் எந்த பணக் கிடங்கு வழியாக வந்திருக்க வேண்டும் என்று விசாரிப்பதற்காக ரிசர்வ் வங்கியை நடுவண் புலனாய்வுச் செயலகம் அணுகியபோது, இவ்வாறு வரிசை எண்களை குறித்து வைக்கவில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

சேகர் ரெட்டி தரப்பினருக்கு புதிய ரூபாய் தாள்கள் கிடைத்த விதத்தை நிரூபணம் செய்வது மட்டுமின்றி, சில வங்கி அதிகாரிகளின் ஒத்துழைப்புடன்தான் பழைய ரூபாய் தாள்களை சேகர் ரெட்டி தரப்பினர் புதிய 2 ஆயிரம் தாள்களாக மாற்றினர் என்பதையும் நிரூபிப்பதில் நடுவண் புலனாய்வுச் செயலகத்திற்;கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்று மூத்த புலன் விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.