Show all

மோடிக்கு நல்ல புத்தியை அளிக்க சுவாமியை வேண்டி சாலையில் உருண்டு புரண்டு போராட்டம்

பிரதமர் மோடிக்கு நல்ல எண்ணத்தை அளிக்கும் படி சுவாமியை வேண்டி இன்று தரையில் உருண்டு அங்க பிரதட்சணம் செய்து டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

     காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாய கடன்கள் தள்ளுபடி என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய ஆறுகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த மாதம் 16-ந் தேதி முதல் போராட்டம் நடந்து வருகிறது.

     மரத்தில் ஏறி போராட்டம், பாம்பு கறி, எலிக்கறி உண்ணும் போராட்டம், பாதி மீசை, தலைமுடி, தாடியை மழித்தல் என தினமும் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இன்று 23- வது நாளாக டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் நடுரோட்டில் அங்கபிரதட்சணம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கை, கால்களை கட்டியபடி தரையில் உருண்டு தங்களது கோரிக்கையை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர்.

     இதுபற்றி சங்க தலைவர் அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-

எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் இன்று 23-வது நாளாக போராட்டம் நடத்தி வருகிறோம். ஆனால் நடுவண் அரசு எங்களை கண்டு கொள்ளவில்லை. எங்களது கை, கால்களை கட்டி போட்டுவிட்டது. இதனால் இன்று கை, கால்களை கட்டிய படியும், பிரதமர் மோடிக்கு நல்ல எண்ணத்தை அளிக்கும் படியும் சுவாமியை வேண்டி இன்று தரையில் உருண்டு அங்க பிரதட்சணம் செய்யும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

     கடன் விவகாரம் தொடர்பாக நடுவண் அமைச்சர் அருண் ஜெட்லி, வங்கி அதிகாரிகளிடம் பேசுவதாக கூறினார். ஆனால் இதுவரை அவர் பேசவில்லை. பிரதமர் மோடி எங்களை சந்திக்க மறுக்கிறார். இதன் பிறகும் கோரிக்கைகளை பிரதமர் ஏற்கவில்லை என்றால் அவருக்கு நல்ல புத்தியை அளிக்கும்படி வேண்டி நாளை சுவாமியின் காதில் ஓதி போராட்டம் நடத்துவோம். எங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும். இல்லையென்றால் இங்கேயே வெயிலில் கிடந்து உயிரை விட்டு விடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

     இதனிடையே அங்கபிரதட்சணத்தில் ஈடுபட்ட விவசாயிகள் பலர் தரையில் உருண்ட படி சென்றனர். அப்போது விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணுவுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.

     டெல்லியில் தற்போது வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இன்று தரையில் உருண்டபடி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பலருக்கு சோர்வு ஏற்பட்டது. அய்யாக்கண்ணுக்கு அதிக சோர்வு ஏற்படவே அவர் மயக்கமடைந்தார். இதையடுத்து அவரை மருத்துவமனையில் சேர்ப்பது குறித்து விவசாயிகள் ஆலோசனை நடத்தினர்.

     ஆனால் அய்யாக்கண்ணு சோர்வான நிலையிலும் போராட்ட களத்தில் இருந்து வெளியேற மறுத்தார். இருப்பினும் விவசாயிகள் அவரை மருத்துவமனைக்கு ஆம்புலன்சு வேன் மூலம் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

     அதேபோல் திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியை சேர்ந்த பழனிச்சாமி என்பவருக்கும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவரும் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

     ரூபாய்தாளில் காந்தி படத்தைப் போடுவது காந்திக்கு மரியாதை செலுத்துவது ஆகாது. காந்தி மதித்த தமிழர் அறவழிப் போராட்டத்தை மதிப்பது தான் காந்திக்கு மரியாதை செலுத்துவது ஆக முடியும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.